Friday, June 11, 2021

பரிதாப எழுத்தாளர்

 எழுத்தில் பகடியைக் கொண்டுவந்த எழுத்தாளர்களில் இராசேந்திரசோழன் முக்கியமானவர். அவருடைய `பரிதாப எழுத்தாளர் திருவாளர் பரதேசியார் பண்டித புராணம்’ எனும் நூலை, இதுவரை எத்தனைமுறை வாசித்திருப்பேன் என்பதற்குக் கணக்கில்லை.

எழுதும் மனநிலையில்லாத அல்லது வாய்க்காத சூழல்களில் அந்நூலை வாசித்தால் அப்படியொரு புத்துணர்வுக் கிடைக்கும். ஓர் ஏழை எழுத்தாளன் எழுதுவதற்கு என்னென்ன பாடுகளையும் உத்திகளையும் மேற்கொள்கிறான் என்பதே புராணத்தின் சாரம். ஆனால், அதில் அவர் கையாண்டுள்ள மொழி இருக்கிறதே அது, சிரிப்பையும் கண்ணீரையும் ஒருசேர வரவழைப்பது. பழந்தமிழ் எடுத்துநடையை இந்த அளவு பகடி செய்துள்ள பிறிதொரு பிரதி தமிழில் இல்லை என்றே எண்ணுகிறேன்.

தீவிர இடதுசாரியாக இயங்கி, பின்னாள்களில் தமிழ்த்தேசியத்தை நோக்கி நகர்ந்தவர் என்பதால் எல்லா அமைப்புகளிலும் உள்ள அடிப்படை சிக்கலைகளைப் புராணத்தின் வழியே அலசியிருக்கிறார். பிரம்மச்சர்ய மகிமை, இல்லக்கிழத்தி மகாத்மியம், மசக்கைப் பிராயம், இடைக்கால நிவாரணம், சுயராஜ்ய மறுப்பு, மனைவி வதைப்படலம், இல்லாள் நீக்குப் படலம் என அத்தியாயங்களுக்கு இடப்பட்டிருக்கும் தலைப்புகளே புராணத்தை ரசிக்க வைப்பவை. 

எழுத வராத பரிதாப எழுத்தாளர் சிந்தனைகளில் ஆழ்ந்துபோகும் இடங்களில் வெடித்துச் சிரிக்க வைக்கிறார். `ஒருகாலத்தில் காலரா கண்டவனின் பேதிமாதிரி அவரிடம் வெளிப்பட்ட எழுத்துகள், சமீபகாலங்களில் மலச்சிக்கல் கண்ட மாதிரி’ என ஓரிடத்தில் எழுதியிருக்கிறார். இதே தொனியில் ஃபிரண்ட்லைன் பத்திரிகை ஆசிரியரும் தோழருமான விஜயசங்கர், சிலநாட்களுக்கு முன் முகநூல் பதிவொன்றில் எழுதியது நினைவுக்கு வந்தது. 

அறுபதாண்டுக்கால இலக்கியச் சூழலைப் புராணத்தில் படம்படித்திருக்கிறார். எள்ளல், நையாண்டி, கிண்டல், கேலி, அங்கதம், பகடி என எந்த வார்த்தையிலும் அப்புராணத்தை அடக்கலாம். `காலஞ்சென்ற எழுத்தாளர்’ என்பதற்கு மாற்றாக, காலஞ்செல்லாத என்னும் பதத்தைப் புராணத்தின் இடையில் புகுத்தியிருக்கிறார். அது, பெரியார் தன் பேச்சு ஒன்றில் குறிப்பிட்டு அன்றைய பழமைவாதிகளை நெளியவைத்தது. 

இத்தகவலை தோழரும் பேராசிரியமான தெ. வெற்றிச்செல்வன் `வெயிலை விழுங்கி நதியைக் கொப்பளித்தல்’ நூலில் விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதேபோல, புராணத்தின் பல பகுதிகள் சுவாரஸ்யம் நிரம்பியவை. இன்று எழுத்துலகில் நிகழ்ந்துவரும் அத்தனைவிதமான சேட்டைகளையும் சாட்டைகொண்டு சரித்திருக்கிறார். முதற்கண் வணக்கம் என்பதைச் சொல்லி, `இரண்டாம் கண். மூன்றாம் கண் வணக்கமெல்லாம் உள்ளதா’ என்கிறார். `மோரும் பழஞ்சோறும் / ஊசடித்த முருங்கைக்காய் சாம்பாரும் / முந்தாநாள் மீன்குழம்பும்’ என்று காப்புப் பகுதியை ஆரம்பிக்கும்போதே கலகலப்பாக்கிவிடுகிறார். 

புராணம் நெடுகிலும் சுயஎள்ளல்தான் எனினும், சமகால எழுத்தும் எதார்த்தமும் பொங்கி வழிகின்றன. தன்னை எழுத்தாளனாக நம்பிக்கொண்டு இருப்பவர்களும், எழுத்தாளனாக ஆகியும் எதார்த்தத்தை உள்வாங்காமல் இருப்பவர்களும் வாசிக்கவேண்டிய நூல். இப்புராணத்தை வாசிக்கும்போதே பக்கத்திற்குப் பக்கம் தற்கால நவநவீன எழுத்து மாஸ்டர்களின் முகங்கள் வந்துவந்து போனதை மறுப்பதற்கில்லை. எல்லாக்காலத்திலும் எழுத்தாளர்கள் இதே மாதிரிதான் சண்டித்தனங்களைச் செய்திருக்கிறார்களோ எனத் தோன்றவைக்கிறார். 

இந்நூலில் இருக்கும் ஒரே ஒரு சிக்கல், இந்நூலை வாசிக்காதவருடன் எதுவுமே பகிர்ந்துக்கொள்ள முடியாதென்பதுதான். ஒரு நல்ல அரட்டைக்கான கச்சாப்பொருளை தரவல்ல இப்புராணத்தை தமிழ்ப் பகடி இலக்கியத்தின் முன்மாதிரி எனலாம். கொண்டாட இடமளிக்காத அதிதீவிர எழுத்தில் பரிதாப எழுத்தாளர் சேரவில்லை. மாறாக, அவர் பரிதாபங்கள் ஒவ்வொன்றும் கொண்டாடும்படி இருக்கின்றன.


 


1 comment:

semmozhiththamizharam said...

இந்நூலை வாசிக்காத என்னிடம் இந்நூலைப் பற்றிப் பகிர்ந்து கொண்டால் இந்நூலைப் படிக்க விரும்புகிறேன் தோழர்.... அருமையான அறிமுகம்