Sunday, June 13, 2021

மியூசிய நாதர் கோவிலும் குருசாமியும்

ழுபதாண்டுகளுக்குமுன் தமிழ்ச்சமூகம் என்னென்ன முழக்கங்களை முன்வைத்ததோ அதே முழக்கங்களை மீண்டும் வைக்கவேண்டியச் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இடைப்பட்ட ஆண்டுகளில் ஆட்சியும் அதிகாரமும் கைவசப்பட்டன. எனினும், முழக்கங்கள் ஏன் வென்றெடுக்கப்படவில்லையென்பது வெறும் கேள்வியல்ல. 

கூட்டாட்சிக்கு உட்பட்டு மேற்கொண்ட நடவடிக்கைகளும், ஆட்சிக்கட்டிலிலேறிய கட்சி மற்றும் தனிநபர்களின் ஆளுமைத்திறமின்மையும் அவற்றின் காரணங்களெனப் பொத்தாம் பொதுவில் சொல்பவர்கள் உண்டு. எனக்கோ, இந்தியாவின் மைய இழையாக இன்றுவரைத் தொடந்துவரும் இந்துத்துவத்தையும் அதன் அபாயத்தையும் போதிய அளவு புரிந்துகொள்ளாமல் விட்டதன் விளைவுகளாகத் தெரிகின்றன.முற்றாக நிராகரிக்கவோ தோற்றோடச் செய்யவோ முடியாதபட்சத்தில் திரும்பத் திரும்பப் போராட வேண்டியக் கட்டாயம் ஏற்படுகிறது. 

அத்துடன், ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்கள், ஆட்சி அதிகாரத்துடன் முடிந்துவிடுவதுமில்லை. அதுவொரு தொடர்ச் செயல்பாடு. கவனித்து அவ்வப்போது எடுக்கப்படவேண்டியக் களை. கரணம் தப்பினால் கையறுநிலையே என்பதுதான் எதார்த்தம். ஒருவகையில், பார்ப்பனீயமும் பார்த்தீனியம்போல் பிடுங்கப்பிடுங்க முளைப்பவை. விதைகளே பொக்குகளான விபரீதமே கடந்த காலத்தின் படிப்பினை.

இந்த நேரத்தில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்பவற்றை ஆழ்ந்த வரலாற்றுப் புரிதலுடன் உணர்ந்துகொள்ள இரண்டு நூல்களைப் பரிந்துரைக்கத் தோன்றுகிறது. ஒன்று, `மியூசிய நாதர் கோவில்’. மற்றொன்று, `கல் மாடும் கல் நெஞ்சும்’. இரண்டு நூல்களுமே குத்தூசி குருசாமியின் எழுத்துகளில் மிளிர்பவை. 

பகடி, அங்கதம், எள்ளல், நையாண்டி என எதற்குள்ளும் அடங்கும் அவர் எழுத்துகள், தீவிர திராவிட அரசியலைப் பேசுபவை.  திராவிட அரசியலுக்கு எதிராக இடது அரசியலை நிறுத்தும் வைதீகப் பற்று எனக்கில்லை. மண்ணுக்கேற்ற அரசியல் எதுவோ அதுவே விடுதலையை விளைவிக்கும் என்பதே என் புரிதல். 

பெயருக்கு முன்னால் குத்தூசியை இணைத்துக்கொண்ட ஒருவர், வார்த்தைக்கு வார்த்தை நகைக்க வைக்கிறார். அதிர்ந்து சிரிக்கவைத்தாலும் அதனூடே அவர் கவனிக்கத்தக்க விஷயங்களைத் தவறவிடுவதில்லை. 
ஒரே மூச்சில் வாசித்துவிடக்கூடிய வசீகரமான எழுத்துநடை. வறட்டுத்தனமில்லாத சிந்தனைப்பெருக்கு. அறிவியல் அணுகுமுறையிலும் வேரை விட்டுவிடாத தெளிவு. ஒரு சின்னக் கட்டுரையில் மொத்த தர்க்கத்துக்குமானத் தீர்வையும் தீர்ப்பையும் எழுதிவிடுகிறார். 

கருத்து முரண்பாடு உடையவர்களும் ஏற்கும்படியான தொனி. அடிப்படை அரசியலில் தெளிவில்லாமல், எவர் ஒருவரையும் காழ்ப்புடனோ வெறுப்புடனே விமர்சிக்காத நேர்த்தி எனக் குருசாமியின் எழுத்துகளைப் பட்டியலிடலாம். 
சாமி, சடங்கு, பேய், பிசாசு, பில்லி, சூனியம் என மூடுண்ட சமூகத்தின் முகத்திரையை அவிழ்த்தெறியும் ஆவேசத்தில் தன்னை ஒரு தவிர்க்கமுடியாத ஆளுமையாக நிறுவியிருக்கிறார். 

இக்கட்டுரைகள்,`பலசரக்கு மூட்டை’ எனும் தலைப்பில் 1950களில் `குடியரசு’ இதழில் வெளிவந்தவை. திராவிட இயக்கத்தின் ஆதிநாள் விருப்பங்களையும் விவேகங்களையும் துல்லியமாகப் புரிந்துகொள்ள அக்கட்டுரைகள் உதவுகின்றன. சிற்சில கட்டுரைகளில் காரநெடி தூக்கலாக இருப்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.

முப்பதுகளில் எழுத ஆரம்பித்த குத்தூசி குருசாமி, தொடர்ச்சியாகப் பண்பாட்டுக்கு எதிரான நடவடிக்கையைக் கண்டித்திருக்கிறார். சிங்காரவேலருடனும் பெரியாருடனும் நெருங்கிப் பழகியவர் என்னும் பெருமை அவருக்குண்டு. நூலில், தோழர்கள் சிலருடன் இணைந்து காந்தியைச் சந்தித்ததும், சனாதன எதிர்ப்பு குறித்து அவருடன் விவாதித்ததும் இடம்பெற்றிருக்கிறது. காந்தியிடம் தென்பட்ட முரண்பாடுகளைச் சொல்லிய அவரே, பிறிதொரு இடத்தில் காந்திக்கு எதிராக மதவாதிகள்  செய்துவந்த சூழ்ச்சிகளையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். 

தமிழகத்தில் காந்தி பிரயாணம் மேற்கொண்டபொழுது அவருக்கு எதிராக 1934இல் சிதம்பரம் தீட்சிதர்கள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தைக் கண்டித்தும் எழுதியதும் கவனிக்கத்தக்கது. `இந்துக்களை ஈனப்படுத்தும் காந்தியே நீர்போம் / வீரியம்போன வெறும் பொருளே காந்தியே நீர் போம்’ என்ற வாசகங்களுக்குப் பின்னே இருந்த காவிகளின் சதித்திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளார். 

சாதியத்திற்கு எதிராகக் கம்யூனிஸ்ட்டுகளும் திராவிட இயக்கத்தவர்களும் எதுவுமே செய்யவில்லை எனக் கட்சிக்கட்டுபவர்கள், ஒருமுறையாவது இவ்விரண்டு நூல்களையும் வாசிக்கலாம். குத்தூசி, தமிழிசையை வளர்த்தெடுக்கவும் தமிழரின் உரிமைகளை மீட்டெடுக்கவும் இடையறாமல் எழுதிவந்திருக்கிறார். களப்போராளியாகவும் இருந்த அவர், எழுத்துச் சீர்திருத்தத்தை வலியுறுத்திய முன்னோடிகளில் ஒருவர். எழுத்தென்றால் எழுத்து அப்படியோர் எழுத்து. 

தரவுகளின் அடிப்படையில் அவர் வரலாற்றைச் சொல்லிச்செல்லும் ஓட்டமிருக்கிறதே அது, தனித்துவம். எளிய பதங்களில் வலிக்காமல் அவர் ஏற்றும் ஊசியில், ஆதிக்க நோய்களின் குரல்வளையை நெறித்திருக்கிறார். 
குதர்க்கத்தைத் தர்க்கமாக நிறுவாதவர் என்பதால் ஆதாரமில்லாமல் எதுஒன்றையும் அவர் எழுதவில்லை. `பட்டம்மாளும் சுந்தராம்பாளும்’ என்றொரு கட்டுரை.

இரண்டுபேருமே பாரதியின் `ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’ பாடலைச் சங்கீதமேடைகளில் பாடியிருக்கின்றனர். ஆனால், பட்டம்மாள் பாடியபோது அப்பாடலில் இடம்பெற்ற சில வரிகளைப் பாடாமல் விழுங்கியிருக்கிறார். சுந்தராம்பாளோ சர்ச்சைக்குரிய அவ்வரிகளைத் தயக்கமில்லாமல் பாடியிருக்கிறார். சர்ச்சைக்குரிய வரி, `பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே’ என்பதுதான். ஒருவர் தயங்கியதற்கும், இன்னொருவர் தடையில்லாமல் பாடியதற்கும் பின்னே உள்ளதுதான் சமூகநீதியென்பதைத் தொட்டுக்காட்டுகிறார்.

`தமிழ்நாடு’ என்று பெயர்வைக்க எண்ணியபோது எழுந்த விவாதங்களை, விவரமாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. ஒன்றிய அரசென்றதும் குதிகுதியென்று தேச ஒற்றுமைக்குத் தீப்பந்தம் கொளுத்துபவர்கள், மாநிலங்களின் உரிமைகளைப் பற்றி அன்றும் சாதித்துள்ள மெளனங்களை நுட்பமாக விவரித்திருக்கிறார்.

ஜனநாயகக் காவலர்களாக இன்று மதிக்கப்படுபவர்கள்கூட, ஆதிக்கச்சக்திகளின் சூழ்ச்சிக்கு எப்படியெல்லாம் பலியாகியிருக்கிறார்கள் என்பதை வரி வரியாக விளக்கியிருக்கிறார். உண்மையில், கட்சியும் ஆட்சியும் மாறியிருக்கின்றனவே அன்றி, காட்சிகள் அனைத்தும் அப்படியே நிகழ்ந்து வருகின்றன. 

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் நலனுக்காக வளைக்கப்பட்ட சட்டங்கள், எவையெவையென்றும் ஆதாரத்துடன் காட்டியிருக்கிறார். கடவுள் மறுப்பாளரே ஆனாலும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதன் அவசியத்தை முன்வைத்திருக்கிறார். பெண் விடுதலை, பெண் முன்னேற்றம் என்பதுடன் சாதிமறுப்புத் திருமணத்தின் பிரதிபலன் என்னவென்றும் அவரால் சொல்ல முடிகிறது. ஊருக்கு உபதேசித்துவிட்டு, ஒரே சாதியில் மணமுடித்துக்கொண்டவர் என்னும் அவப்பெயர் அவருக்கில்லை. 

இயக்கத்தைத் தாக்கிப்பேசிவந்த சத்தியமூர்த்தியை `அழுகிய முட்டை அரையணாவுக்கு ஆறு’ என்னும் கட்டுரையில் விமர்சித்திருக்கிறார்.  அவ்விமர்சனத்தின் எதிர்வினையாக நிகழ்ந்தவற்றை மற்றொரு கட்டுரையில் விவரித்திருக்கிறார். அஞ்சாநெஞ்சன் அழகிரியும் குத்தூசி குருசாமியும் இணைந்து மேற்கொண்டப் புரட்சிகர நடவடிக்கைகளைப் படிக்கும்போது, இன்றைய நுனிப்புல் தலித்தியர்களின் அறியாமையை அறியமுடிகிறது.
 
`தமிழா, திராவிடமா’ என்கிற கட்டுரையில் இன்றையத் தமிழ்த்தேசிய அண்ணன்களுக்கும் தம்பிகளுக்கும் பதிலளித்திருக்கிறார். `சிங்காரவேலரின் சிறுதவறு’ என்கிற பதிவில் இரண்டு சம்பவங்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அச்சம்பவங்களின் வழியே தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்டாக  அறியப்படும் சிங்காரவேலர், இறுதிவரை இந்து சனாதன தர்மங்களை எதிர்த்து வந்ததை அறியலாம். 
கம்யூனிஸ்ட்டுகளாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் மென்சங்கியர்களில் ஒருசிலர், பொதுவுடைமைக் கட்சிகள் இன்று திராவிட இயக்கத்துடன் கூட்டணி வைத்திருப்பதை விமர்சிப்பதற்கு எதிராகவும் பதிலாகவும் அச்சம்பவங்களைக் கருதலாம். 

ஒருசமயம், ப. ஜீவானந்தத்துடன் தம்மை சந்திக்க வந்த ஒருவர் கையில் `பகவத் கீதை’ நூலை வைத்திருந்ததைப் பார்த்து அதிருப்தியுற்ற சிங்காரவேலர், `நெருப்பிலே போடவேண்டிய நூலை ஏன் கையிலே வைத்திருக்கிறீர்கள்’ என்றிருக்கிறார். மேடையில் தமக்கு மாலையோ பொன்னாடையோ அணிவித்தால் அதைப் `பூர்ஷ்வா மெண்டாலிட்டி’ என்றும் கண்டித்திருக்கிறார். இடுப்பிலே இடுக்கியத் துண்டை தோளில் போட்டுக்கொள்வதை சுயமரியாதையாகத் திராவிட இயக்கம் கருதிய அதே காலத்தில் சிங்காரவேலரின் இந்தப் பார்வை கடந்துவிடக்கூடியதல்ல.  

சமூக அரசியல் பாடங்களைக் கற்க விரும்புவோர், அந்தந்தக் காலகட்டத்துச் சம்பவங்களையும் பின்னணிகளையும் ஆராயவேண்டும். அத்தகைய ஆராய்ச்சிகளுக்கு இவ்விரண்டு நூல்களையும் துணையாகக் கொள்ளலாம் 
இந்துத்துவர்கள் எதற்கெடுத்தாலும் `சிறுபான்மைச் சமூகக் கடவுளை விமர்சிக்கிறீர்களா?’ என்கிறார்களே, அதற்கான பதில்களும் நூல்களில் கிடைக்கின்றன. பெட்ரண்ட் ரஸலின் `நான் ஏன் கிறித்துவன் இல்லை’ என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் குருசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
 
கடவுள் நம்பிக்கை எனும் பெயரால் எளிய மக்கள் எங்கெல்லாம் சுரண்டவும் ஏமாற்றவும் படுகிறார்களோ அதற்கு எதிர்வினையாக அவர் எழுத்துகள் இருந்துள்ளன.  மதம்பார்த்தும் சாதிபார்த்தும் மென்போக்கைக் கையாளாத அதிதீவிர அணுகுமுறையே அவருடையது.
தமிழகத்திலுள்ள கோயில்களில் ஒன்றைக்கூட கட்டாதவர்கள், அக்கோயில்களின் பாத்திய உரிமையைக் கோரும் அநீதியை எதிர்த்தே `மியூசிய நாதர் கோயில்’ கட்டுரையை எழுதியிருக்கிறார். 

வெளிநாடுகளுக்குச் சென்று சம்பாதித்த நகரத்தார்கள், சொந்த ஊருக்கு எதையேனும் செய்ய விரும்பி கட்டிய கோயில்களையும் தமக்குரியதாக மாற்றிக்கொண்டவர்களைக் குறுக்குவெட்டாக வகுந்திருக்கிறார். சுயமரியாதைக்காரராகக் கடைசிவரை உழைத்த குருசாமியின் கனவுகள், மெல்ல மெல்ல பலிதமாவதைக் காண்கிறோம். பெண்களும் அர்ச்சகராகலாம் எனும் அதிரடி அறிவிப்புகள் வரத்தொடங்கியுள்ளன. தமிழர்களின் மறுமலர்ச்சி காலம்போல இக்காலம் தோன்றுகிறது. 

குரு, சாமி என ஏற்படுத்தப்பட்ட பீடங்களை நோக்கிக் கேள்வியெழுப்பிய குருசாமிகள், குலசாமிகளாகவும் தெரிகிறார்கள். `நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்’ என்னும் சித்தர் பாடல் ஏனோ நினைவுக்கு வருகிறது. எது ஒன்றும் இயல்பாக நினைவுக்கு வருவதில்லை. பற்பல ஆண்டுகளாகத் தேக்கிய எண்ணங்களே நினைவுகளாக வெளிப்படுகின்றன. எழுத்தில் முத்திரைகளைப் பதித்த குத்தூசி, காலத்தின் காயங்களை ஆற்றுபவராகவும் இருந்திருக்கிறார். தவிர, ஆரியமூட்டைகளை அப்புறப்படுத்த குத்தூசிகளே இன்றும் தேவைப்படுகின்றன.


No comments: