Monday, June 14, 2021

கவ்வியதை விடேல்


நவீனச் சித்தராகப் பாரதியைப் பார்ப்பவர்கள் உண்டு. சின்னச்சின்னத் தேவைகளுக்கும் சந்தோசங்களுக்கும் ஆட்படாமல், மிக உயர்ந்த இலட்சியக்கனவுகளை முன்னெடுத்தவர்களுள் பாரதி முக்கியமானவர். பாரதியை அடுத்துவந்த பாரதிதாசனுமே இலட்சியக் கனவுடையவரே எனினும், அவர் பாரதியிடமிருந்து பலவிதங்களில் வேறுபடுகிறார். அகக் கருத்துகளைவிடவும் புறக்கருத்துகளில் அதிக அக்கறை செலுத்திய பாரதிதாசன், ஆன்மீகத் தளத்தில் பாரதிக்கு எதிரான கருதுகோள்களைத் தூக்கிப்பிடித்தவர். ஆன்மீகத்தை அகமாகவும் அரசியலைப் புறமாகவும் நம்முடைய வசதிக்காகக் கொள்வோமேயானால், பாரதியும் பாரதிதாசனும் எவ்வெவற்றில் வித்யாசப்படுகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம். 

பாரதியைச் சித்தர்களுடனும் யோகிகளுடனும் ஒப்பிடுவதுகூட அவருடைய ஆன்மீக அணுகுமுறையை உத்தேசித்துத்தான். சித்தர்கள் இறையை மறுத்தவர்கள். இறை மறுப்பைப் பெருங்குரலில் ஒலித்தவர்கள். யோகிகளோ இறையைச் சேர்வதற்காகவே வாழ்நாள்களைச் செலவிட்டவர்கள். கர்மக் கடனையும் மறுபிறவியையும் கணக்கிட்டு, அதற்கேற்ப வாழ்வை நடத்திச்செல்ல விரும்பியவர்கள். பாரதியைப் பொறுத்தவரை இந்த இரு நிலைகளையும் சிந்தித்த ஒற்றைக் கவியாக உருவம் கொள்கிறார். எல்லோரையும் ஒன்றாகக் கருதாத இறையை அவர் மறுத்திருக்கிறார். அதேசமயம்,  ‘தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா / நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதையா’ என்றும் எழுதியிருக்கிறார்.  ஏனைய கவிஞர்கள் யாரிடமும் இத்தகைய இரட்டை மனநிலையைக் காண்பதரிது. பன்னெடுங்காலக் கவிதை வரலாற்றில் பாரதி ஒருவரே இரண்டு தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்திருக்கிறார். 

ஒரே நேரத்தில் ஆன்மீகமும் அரசியலும் அவரை அலைக்கழித்திருக்கின்றன. ஆத்திசூடியில் அவர் எழுதிக் காட்டிய பலவும் இரண்டு தன்மைகளைக் கொண்டனவாகவே அமைந்துள்ளன. உதாரணமாக, ‘கவ்வியதை விடேல்’ என்பதைச் சொல்லலாம். ‘ஊக்கமது கைவிடேல்” என ஔவை சொன்னதைச் சற்றே மாற்றிக் கவ்வியதை விடேல் என்றிருக்கிறார். ஊக்கமது கைவிடேல் என்பதற்கும் கவ்வியதை விடேல் என்பதற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் கவனிக்கத்தக்கவை. 

பற்றிக்கொண்டதை விடாமல் இருத்தல் எனில், எதைப் பற்றிக்கொள்வது என அடுத்தக்கேள்வி ஆரம்பிக்கிறது. பாரதியின் ஆத்திசூடியை வரிசைக்கிரமமாக வாசித்தால் அவை சொல்ல வருவதையும் சொல்லித் தருவதையும் எளிதாக விளங்கிக்கொள்ளலாம். பற்றற்றத் தன்மையே ஆன்மீகத்திற்கான வழியாக அமைகிறது. ஆனால், பாரதியோ கவ்வியதை விடேல் என்கிறார். பற்றிக்கொண்டதை விட்டுவிடாதே என்பதற்கும் கவ்வியதை விடேல் என்பதற்கும் தனித்தனி பொருள்கள் இருப்பதாக எனக்குப்படவில்லை. 

எதை ஒன்றையும் பற்றிக்கொள்வதில்தான் வெற்றி இருக்கிறது. வெற்றி பெற்ற பலரும் எதையோ ஒன்றைப் பற்றியிருக்கின்றனர். புறப் பற்றுகளை அறுத்தெறிந்த ஞானிகள்கூட அகத்தில் இறையையும் நம்பிக்கையையும் பற்றியே பயணித்தனர் என்பதுதான் அவர் வாதமாக அமைகிறது. விட்டேத்தியான மனநிலையுடன் ஓர் இடத்தில் வெளிப்படும் அவர், மற்றோர் இடத்தில் தம்மைச் சமூகத்தின் பொறுப்புமிக்க மனிதனாகக் காட்டவும் முனைந்திருக்கிறார். பாரதியின் கவிதைகளில் இருக்கும் விசேஷத் தன்மையே அதுதான். அவரே அவருடைய கவிதைகளில் முரண்படுவார். எழுதப்பட்ட கவிதையிலுள்ள கருத்தை, எழுதிக்கொண்டிருக்கும் கவிதையில் மறுத்துவிடுவது அவருக்கே உரியது. 

பெண் விடுதலை வேண்டுமென்று எழுதும் அவரே பாஞ்சாலி சபதத்தில் “பெட்டைப் புலம்பல்” என்று சொல்லிவிடுவார். பெட்டைப் புலம்பல் என்னும் பதம் பெண்ணின் தன்மையை அல்லது பண்பைக் குறைத்து மதிப்பிடுவது என்றெல்லாம் எச்சரிக்கையுடன் அவர் இயங்கியதாகத் தெரியவில்லை. மனதில் பட்டதை மறைக்காமலும் ஒளிக்காமலும் உரைத்துவிடுவதையே கவிதையின் ஒளியாகக் கண்டிருக்கிறார். 

கவ்வியதை விடேல் என்கிற ஆத்திசூடியும் அப்படி வெளிப்பட்ட ஒன்றுதான். எதையுமே தனக்காகப் பற்றிக்கொள்ள விரும்பாத அவர், கடைசிவரை கவிதைகளை மட்டுமே கவ்வியிருக்கிறார். உயிர்போகும் தறுவாயில்கூட கவிதையால் மரணத்தை எதிர்கொண்ட மகாசக்தியை அவர் கண்டிருக்கிறார். ‘காலா என்னருகே வாடா’ என்பதும் ‘உன்னைச் சிறுபுல்லென மதிக்கிறேன்’ என்பதும் அதன் விளைவாக வெளிப்பட்ட வார்த்தைகளே.  ஒன்றைப் பற்றிக்கொண்ட பின் அதிலிருந்து விடுபடாத் தன்மையே ஆன்மீகத்தின் அடிப்படை.  அகத்திலும் புறத்திலும் ஒரு சாமானியன் கொள்ளக்கூடிய பற்றுகளின் விளைவுகளே எதிர்காலத் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுகின்றன. அந்த வகையில் பாரதியின் ஆத்திசூடியில் என்னை வெகுவாகக் கவர்ந்தவற்றில் கவ்வியதை விடேல் என்பதும் ஒன்று. 

ஒற்றை வாக்கியத்தில் ஓராயிரம் நம்பிக்கையை ஏற்படுத்தும் பாரதி, தனிப்பட்ட முறையில் என் வாழ்வுக்கு வழங்கிய கொடையாகவே அவ்வாக்கியத்தை அறிகிறேன். பதிமூன்று பதினான்கு வயதில் கவிதைமீது எனக்கேற்பட்ட ஒட்டுதல் அல்லது பற்றுதல் இத்தனை ஆண்டுகள் ஆகியும் விடுபடவில்லை. கவிதையை மட்டுமே கைப்பொருளாகக் கொண்டு வாழ்வை நடத்திச்செல்ல முடியும் என்கிற நம்பிக்கையை அவ்வாக்கியமே அளித்தது. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ என்று திருக்குறள் சொல்கிறது. பற்றற்றவனைப் பற்றுவதே பற்று என்பதாகப் புரிந்தகொண்ட நான், லௌகீகப் பற்றற்ற பாரதியை என் பெயராகப் பற்றிக்கொண்டேன். என்னை நான் பாரதியாகக் கருதிக்கொண்ட அல்லது நினைத்துக்கொண்ட நிலையில் இருந்து இன்றுவரைப் பிறழவில்லை. 

இப்பொழுதும் மனம் சோர்வுறும் பொழுதிலெல்லாம் பாரதியை எடுத்து வாசித்தால், கவலைகள் அத்தனையும் காணாமல் போய்விடுகின்றன. பாரதி ஆய்வாளரான கடற்கரை மத்தவிலாசம் தொகுத்துள்ள ‘பாரதி விஜயம்’ நூல், சமீபத்தில் என்னை வெகுவாக ஈர்த்தது. பாரதியின் மெய்யான சொரூபத்தை அந்நூலில் அவர் காட்டியிருக்கிறார். இதுவரை நாம் புரிந்துவைத்திருந்த பாரதியைவிட, அந்நூல் வழியே அறியும் பாரதி அசாத்தியமானத் தன்மைகளைக் கொண்டிருக்கிறார். 

எளிய வாழ்வுக்கே சிரமப்பட்டதாக வரையப்பட்ட பாரதியின் சித்திரத்தை அந்நூல் மாற்றி வரைந்திருக்கிறது. உயர்ந்த பீடத்தில் உட்கார்ந்திருந்த பாரதி, எளிய மனிதனாகவே இருந்தான் என்பதையே அந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் தெரிவிக்கின்றன. கவ்வியதை விடாமலிருக்கப் பாரதி, கடைசிவரைக் கறாராக இருந்திருக்கிறான். அவனுள்ளே குடிகொண்டிருந்த தேசாபிமானமும் பாஷாபிமானமும் கூடிக்கொண்டே இருந்திருக்கின்றன. 

பாரதி என்கிற பெருந்தீயிலிருந்து பெறப்பட்ட கங்கு, என்னுடைய ஆரம்பகாலத் திரைப்பாடல்களில் மிகுதி. ‘பாலும் கசந்ததடி சகியே / படுக்கையும் நொந்ததடி / தாயின் முகம் பார்த்தாலும் / சலிப்பு தோன்றுதடி என்னும் பாரதியின் வரியை உள்வாங்கியே  ‘என் தாயோடும் பேசாத மௌனத்தை நீயே தந்தாய்’ என்று எழுதியிருக்கிறேன். “ரன்” திரைப்படத்தில் வெளிவந்த ‘காதல் பிசாசே’ பாடலில் மேற்கூறிய வரிகள் இடம்பெற்றுள்ளன. பாரதியின் ஒரு வாக்கியத்தை வைத்துக்கொண்டு பல திரைப்பாடல்களை யோசிக்கவும் எழுதவும் முடியும். எத்தனையோ பாடல்களும் கவிதைகளும் எதிர்பார்த்த அளவு மக்களிடம் போய்ச்சேராத தருணங்களில், கவ்வியதை விடேல் என்கிற வாக்கியத்தையே வைராக்கியமாகப் பற்றியிருக்கிறேன். எழுத்தும் இலக்கியமும் எனக்குள் வந்தவுடனேயே பத்திரிகையாளனாக வேண்டும் என்றுதான் விரும்பினேன். அதன்படியே சில பத்திரிகைகளிலும் பணியாற்றினேன். ஆனாலும், காலத்தின் சுழற்றியில் நான் அதிகமும் விரும்பாத திரைத்துறைக்குள் புக நேர்ந்தது. 

வாழ்வின் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள அதுவே வழியென்று கவ்விக்கொண்டதை விடாமல் இருந்ததால்தான் இத்தனைத் தூரம் பயணிக்க முடிந்திருக்கிறது. ஆரம்பத்தில் மெட்டுக்குப் பாட்டெழுதுவதில் எனக்கிருந்த மனத்தடைகள், நாள்கள் செல்லச்செல்லத் தாமாக விலகின. இப்போது மெட்டமைக்கும் இடத்திலேயே அசுரவேகத்தில் எழுதும் ஆளாக ஆகியிருக்கிறேன். காரணம், பற்றிக்கொண்டதை விடாமலிருந்ததும் அப்பற்றுக்காக என்னை நானே தயாரித்துக்கொண்டதும்தான். 

உடன்பாடுள்ள ஒரு காரியத்தைத் திரும்பத் திரும்பச் செய்வோமானால் அக்காரியம் நம்மை யாரென்றும், நம்முடைய தன்மைகள் என்னவென்றும் உலகிற்குக் காட்டிவிடும். முரண்பாடுள்ளவை முதலிலேயே பற்றுக்கோட்டிலிருந்து விலகிவிடுவதால் அதுகுறித்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.கவ்வுதல் என்கிற சொல்லை வாயாலும் கையாலும் பற்றிக்கொள்ளும் செயலாகக் கருதுகிறோம். உண்மையில், மனத்தினால் சிந்தனைகளைப் பற்றிக்கொள்வதையே பாரதி சொல்லியிருக்கிறார். ஞான வாழ்வை மேற்கொண்ட ஷேக் பரீத்தும் கபீர்தாஸூம் நேரில் சந்தித்தபோது ஒரு வார்த்தைகூட பேசிக்கொள்ளவில்லை. 

ஒருவர் இன்னொருவரைச் சந்திக்கும்போது சமயம் குறித்தும் தத்துவங்கள் குறித்தும் அதிகமாகப் பேசிக்கொள்வார்கள் என்று நம்பிய சீடர்களுக்கே அச்சந்திப்பு ஏமாற்றம் அளித்திருக்கிறது. அதுகுறித்து அவர்கள் இருவரிடமும் அவரவர்களுடைய சீடர்கள் கேட்டிருக்கின்றனர். நானும் அவரும் ஒன்றையே பற்றியிருக்கிறோம். அப்படி இருக்கையில், அவர் என்னுடனும் நான் அவருடனும் பேசுவதற்கு ஒன்றுமில்லையே என்றிருக்கின்றனர். 

ஒருவேளை அவர்கள் பேசியிருந்தால் ஒருவர் இன்னொருவர் பற்றினைக் குறைத்தோ கூட்டியோ விவாதித்திருக்க வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பினை இருவருமே தவிர்த்திருக்கின்றனர். பற்று, மௌனத்தில் இருந்தே தொடங்குகிறது. எவருடனும் சட்டென்று பேசுவதிலும் பழகுவதிலும் தயக்கமுற்றிருந்த என்னைக் கவிதைகள் பற்றிக்கொண்டன. அப்பற்றே இன்று வாழ்வின் எல்லா தருணங்களையும் அழகாக்கிக் கொண்டிருக்கின்றன. பொதுவாக நல்லதைப் பற்றிக்கொள்ளுதல் அல்லது நல்லதென நாம் நம்புவதைப் பற்றிக்கொள்வதில்தான் சகலகேள்விகளுக்குமான விடை இருக்கிறது. இறுதிவரை காந்தி தாம் கொண்டிருந்த கொள்கைகளில் பின்வாங்கவில்லை என்று சொல்லமுடியாது. 

பல விஷயங்களில் அவர் பின்வாங்கியும் சமரசமும் செய்திருக்கிறார். அம்பேத்கருடனும் இன்னபிற தலைவர்களுடனும் அவர் உடன்பட்டும் முரண்பட்டும் விவாதித்த பல கருத்துகள், அடிப்படையாக காந்தி பற்றிக்கொண்டிருந்த அகிம்சைக்கு எதிர்த்திசையில் போகவில்லை.  அடிநாதமாக அகிம்சையைப் பற்றிக்கொண்டே அவர் அத்தனை விஷயங்களையும் அணுகியிருக்கிறார். மதத்தின் பேரால் நிகழ்ந்த கலவரங்களைக் காணச் சகியாத அவர் பிரார்த்தனைகளையே பிரதானப்படுத்தியிருக்கிறார். 

எந்த இறைவனுக்காக இரண்டு தரப்பினரும் அடித்துக்கொள்கிறார்களோ அந்த இறைவனே அதற்கான தீர்வுகளையும் தீர்ப்புகளையும் வழங்குவான் என அவர் நம்பியிருக்கிறார். குண்டுகள் துளைத்தபோதும் ‘ஹேராம்’ என்று உதிர்த்த அந்த உதடுகள், மதச்சார்பின்மைக்கு மாற்றாக மத நல்லிணக்கத்தையே வலியுறுத்தின. தம் கட்சியைச் சேர்ந்த பலரும் தேவதாசி முறை நீடிக்கவேண்டுமென விரும்பியபோதிலும், மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டியைச் சந்தித்தபின் அம்முறைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்பவராக காந்தி இருந்திருக்கிறார். ஒன்றைப் பற்றும்வரை அவரிடம் காணப்படும் தயக்கங்களை முன்வைத்தே அவர்மீதான விமர்சனங்கள் எழும்பியுள்ளன. அவரே பரிசோதித்து அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்கிவிட்டால் அதன்பின் பின்வாங்காமல் இருந்திருக்கிறார். அவர் வாழ்வில் நிகழ்ந்த எத்தனையோ சம்பவங்கள் அதைத்தான் காட்டுகின்றன. 

உடும்புப்பிடியாக பிடித்துக்கொள்ளுதல் என்று நம்மூர்களில் இயல்பாகப் பயன்படுத்தும் சொலவடையின் மறு ஆக்கமே கவ்வியதை விடேல். உலகத்தின் பார்வைகளை தம் பக்கம் திரும்பிய அத்தனைபேரின் சுயசரிதையுமே அவ்விதத்தில் அமைந்ததுதான். இன்றைக்கு நம் கையில் கிடைத்துள்ள சங்க இலக்கியப் பாடல் முழுவதையும் தொகுத்தளித்த உ.வே.சாமிநாதைய்யர், பழைய சுவடிகளைத் தேடிப்போனதைக் கதை கதையாக எழுதியிருக்கிறார். 

ஆடிப்பெருக்கில் காவிரியில் வீசுவதற்காக எடுத்துச்செல்லப்பட்ட ஓலைச்சுவடிகளைச் சேமித்து வைத்திருந்த ஒருவரிடமிருந்து குறிப்பேட்டின் இடைவரிகள் சிலவற்றைப் பெற்றிருக்கிறார். அதற்காக அவர் செலவழித்த நேரமும் வேர்வையும் கொஞ்சமல்ல. ஒரு பாடலில் ஒருவரிதானே என அவர் விட்டிருந்தால் இத்தனைச் செப்பமான இலக்கியத்தைத் தமிழ்ச்சமூகம் பெற்றிருக்க வழியில்லை. 

கீழடியின் அகழ்வாய்வுக்குப் பின் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட காலத்திலிருந்து பின்நோக்கிப் போகலாம் என்கிறார்கள். அப்படிப் பின்னோக்கிப் போனால் அதை நிறுவும் சான்றாகச் சங்க இலக்கியங்களே உதவக்கூடும். மண்ணாய்வுகளும் மானுடவியல் ஆய்வுகளும் மேற்கொள்ளும் காலகட்டத்தில் இலக்கியத்தைச் சான்றாகக் கொள்ளும் சமூகமாகத் தமிழ்ச்சமூகம் விளங்கப் போகிறது. கவ்வியதை விடேல் என்கிற சிந்தனையைப் பற்றியிருந்த உ.வே.சா.வின் தமிழ்ப்பணி, மேலும் பல உயரங்களை எட்டவுள்ளது. தமிழின் மரபும் பண்பாடும் இடையில் திரிந்ததற்கு அது பற்றியிருந்த கயிறுகளை அறுத்துக்கொண்டதுதான். தற்போது தமிழ், மீண்டும் தம் மரபையும் பண்பாட்டையும் மீட்டுக்கொள்ளும் அரிய சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. கவ்வியதை விடாதிருந்தால் காணாமல் போன கலாச்சாரமும் கலை இலக்கியச் செயல்பாடுகளும் கைவசமாகலாம். 

நவீனத் தமிழ்க் கவிதையின் போக்குகளைத் தீர்மானித்த பாரதி, ஆத்திசூடியில் ஒற்றை வாக்கியக் கவிதைகளை உற்பத்தி செய்திருக்கிறான். ஒரு வாக்கியம் எங்கே கவிதையாகிறது? எந்த வாக்கியம் சிந்தனைக்கானப் பொறியாகிறது என அவனுக்குத் தெரிந்திருக்கிறது. கவ்வியதை விடேல் என்பது அவன் நமக்குச் சொல்லிய அறிவுரை அல்ல. அவனை நாம் விடாமல் கவ்விக்கொள்ள வேண்டும் என்பதும்தான். தீக்குள் மட்டுமல்ல, பாரதியின் வரிகளைத் தீண்டினாலும் நந்தலாலாவை நாமும் உணரலாம்.

(நன்றி: புதிய தலைமுறை கல்வி)
No comments: