Saturday, May 29, 2021

தட்டிப்பார்த்த கொட்டாங்கச்சி

தோழர் ஷாகுல், டி. ராஜேந்தர் எம்.ஏ.வின் அதிதீவிர ரசிகர்.  நேற்று மதியவாக்கில் அவருடன் சமூகம், கலை, இலக்கியம் எனச் சுற்றிச்சுழன்று பேசிக்கொண்டிருக்கையில் சட்டென்று இறுக்கத்தைத் தளர்த்த `தட்டிப்பார்த்தேன் கொட்டாங்குச்சி / தாளம் வந்தது பாடம்வச்சி’ என்னும் பாடலை ராகத்துடன் பாடத்தொடங்கினார். 

என்ன தோழர், நீங்களும் டி.ஆரின் ரசிகரா? என்றேன். கேட்டதுதான் தாமதம், கடகடவென்று டி.ஆரின் ஒருதலை ராகத்திலிருந்து அவர் கடைசியாக இயக்கிய வீராச்சாமிவரை ஒவ்வொரு திரைப்படத்திலிருந்தும் சில பாடல்களை முணுமுணுக்கத் தொடங்கினார். இந்த இடத்தில் ஷாகுலைப் பற்றிய குறிப்பு அவசியம். 

தோழர் ஷாகுல்  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் தஞ்சை நகர தலைவராக இருப்பவர். `பிம்பம்’ என்னும் பெயரில் தஞ்சையில் பிரபலமான ஒளிப்படக் கூடத்தை நடத்திவருபவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மெலட்டூர் கிளையில் அவருடைய தந்தையார் மிகமுக்கிய பொறுப்பு வகித்தவர். மக்கள் அரசியலை மனதில் தாங்கியவர். என்னுட்படப் பலரின் எழுத்து முயற்சிகளுக்குத் துணை இருப்பவர். 

ஒருகாலத்தில் சினிமாவில் கதாநாயகனாகும் தீர்மானத்துடன் சென்னைத் திருத்தலத்தை சேவித்துக் கிடந்தவர். வாய்ப்புகள் கனியாததால் அழகை மட்டும் பராமரித்துக்கொண்டு, தற்போது சொந்த ஊரில் வேறு சிலரை சினிமாவில் கெட்டழியச் சிபாரிசித்து வருபவர். எத்தனை பேரை டி.ஆர்., ஊக்கி அந்தக் காலத்தில் சென்னையை நோக்கியும் சினிமாவை நோக்கியும் வரவழைத்திருக்கிறார் என்பதற்குக் கணக்கில்லை. இன்றளவும் ஷாகுல் வளர்த்துவரும் தாடியின் பின்னணியிலும் டி.ஆர் இருக்கிறாரோ? எனத் தோன்றும். `பொன்னான மனசே பூவான மனசே வைக்காத பொண்ணுமேல ஆச என்னும் பாடல், அசரீரியாகக் கேட்பதைத் தவிர்க்கமுடியவில்லை. 

ஷாகுல், திரைப்பாடல்களை நுட்பமாக ரசிப்பவர். மட்டுமல்ல,  பாடல் வரிகளை மென்று விழுங்கியபடியே அவர் சிகரெட்டை இழுத்துவிடும் புகையழகு, பூரிக்கத்தக்கது. இரண்டாயிரங்களில் கதாநாயகர்களில் ஒருவராக வந்திருக்க வேண்டியவர். கால வில்லனின் கர்ணகொடூரச் சதியால்  தமிழ் சினிமா ஒரு நல்ல வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறது. நடிகர்களும் இறுதியில் அரசியலை நோக்கியே வருகிறார்கள் என்பதால், நடிப்பாசையைத் துறந்து அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். தொழில்முறைப் புகைப்படக் கலைஞர் என்றாலும், அவர் புகைப்படமெடுப்பதை யாராவது படமெடுக்கலாம் என்பதுபோல அத்தனை நேர்த்தியான உடல் மொழியை வெளிப்படுத்துவார். அவருக்குள் டி.ஆரின் ஆவியும் சத்யஜித்ரேவின் சாவியும் சிக்கியிருப்பது பலர் அறியாதது. 

இனி, டி.ஆரைப் பேசலாம். நடிகர் வடிவேலுக்கு நிகராக இன்றளவும் மீம்ஸ்களில் தென்படும் டி.ராஜேந்தர், பொழுது போகாதவர்கள் கும்முவதுபோல அத்தனை எளிதான ஆளுமையில்லை. அவருக்கென்றொரு பாணியும் பக்குவமும் உண்டு. கீழ் மத்தியதர வர்க்கத்துப் பாடுகளை மிகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தியவர். வசதியும் வாய்ப்புகளும் கிடைத்தவர்களுக்கு மட்டுமே அது மிகையுணர்ச்சி. மற்றவர்க்கு அவர் அதீத நம்பிக்கையின் சிகரம். வறிய பின்னணியிலிருந்து ஒருவர் எழ முடியுமென நிரூபித்தக் கலைஞன். அசல் சகலகலா வல்லவன். 

கதை, திரைக்கதை தொடங்கி அனைத்துத் துறையிலும் பங்காற்றிய ஆச்சர்யம் அவருடையது. ஆனால், ஒன்றிலும் தன்னை நிலைப்படுத்தத் தெரியாதவர்கள், அவரைப்பற்றிப் பகடி செய்வதுதான் பாமர பரிதாபம். தோழர் ஷாகுல், டி.ஆரின் சகல பாடல்களையும் நினைவிலிருந்து பாட ஆரம்பித்தவுடன் மிரண்டு போனேன். குறிப்பாக, `தங்கைக்கோர் கீதம்’ திரைப்படத்தில் வெளிவந்த `தங்க நிலவே உன்னை எடுத்து தங்கச்சிக்கு என்னும் பாடல், கண்ணீரை வரவழைத்தது. அப்பாடலில் `ஜவுளிக்கடைப் பொம்மைகூட கட்டுதம்மா பட்டுச்சேலை’ என்னும் வரிகள், அண்ணன் தங்கை பாசத்தின் உச்சபட்ச வெளிப்பாடு. 

அவை நாடகீயமான மிகையுணர்ச்சிப் பதங்களாகச் சிலருக்குத் தோன்றலாம்.  எனக்கோ ஒரு காட்சியை அவர் எப்படிப் பாடலுக்குத் தோதாக மாற்றியமைத்திருக்கிறார் எனப்படும். பாடலின் முடிவில் ஷாகுலின் கண்களும் கசிந்ததைக் கண்டு, `கூடையில கருவாடு / கூந்தலிலே பூக்காடு’ பாடலைப் பாடுங்களேன், என்றேன். எள்ளலும் துள்ளலுமாக உரையாடல் கச்சேரி உற்சாகத்தை அதிகப்படுத்தியது. `தஞ்சாவூரு மேளம் / தாலிக்கட்டும் நேரம் / தங்கச்சிக்கு கல்யாணமாம் என்னும்  பாடலும் டி.ஆரின் நடனமும் விழித்திரையில் பூத்தன. 

மரபார்ந்த தமிழ் கொஞ்சமும் மக்கள் மொழியும் கலந்து டி.ஆர். எழுதி அளித்துள்ள திரைப்பாடல்கள் கவனித்தக்கவை. இயக்குநர்களில் ஓரளவு கவித்துவமானப் பாடல்களை எழுதியவர்கள் எனில் டி.ராஜேந்தர், ஆபாவாணன், ஆர்.வி. உதயக்குமார், அகத்தியன் ஆகியோரைச் சொல்லலாம். இது என் தனிப்பட்ட அபிப்ராயம். நல்ல பாடல்களை எழுதிய வேறு சிலரும் இருக்கலாம். நான் ரொம்பவும் வியந்த ரவிஷங்கர் `ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ பாடலில் `நிழலுக்கும் நெற்றி சுருங்காம / குடையாக மாறட்டுமா என்று எழுதியதை நானும் முத்துக்குமாரும் நாள் கணக்கில் பேசியிருக்கிறோம்.  

அநேகமாக டி.ஆரின் எல்லாப்பாடல்களையும் ஒருமுறையாவது தமிழ்ச்சமூகம் கேட்டிருக்க வாய்ப்புண்டு. இளையராஜாவே ஒற்றை இசை ஆளுமையாகப் பரிணமித்த காலத்தில் நுழைந்தும் தனக்கான அங்கீகாரத்தை அவரால் பெறமுடிந்தது. பின்னணி எதுவுமில்லாமல் திரைத்துறையைக் கைப்பற்றிய அவர், சொந்த சாதி அபிமானத்துடன் எங்கேயும் நடந்ததோ வெளிப்படுத்தியதோ இல்லை. வைதீகப் பற்றுடையவர்களும் இடைநிலை சமூக அபிமானிகளும் செய்த சூசகமான குறியீடுகளைக்கூட மிகக் கவனமாகத் தவர்த்ததிலும் அவர் முதன்மையானவர். இன்றைய முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், மணிசர்மா போன்றோரெல்லாம் அவரிடம் வாத்தியக் கருவிகள் வாசித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எளிய குடும்பங்களின் ஆசாபாசங்களை நேரடித் தன்மையுடன் திரைப்பாடலில் கொண்டுவந்த அவர், மக்கள் மத்தியில் தனித்த செல்வாக்கை பெற்றுக்கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகச் சார்புடையவர் என்பதாலும், எம்.ஜி.ஆரையே எதிர்த்தவர் என்பதாலும் அவர் மீதான ஆர்வம் எல்லோருக்கும் இருந்தது. எண்பதுகளில் அவர் எழுதி, இசையமைத்துத் தயாரித்த தேர்தல் பிரச்சாரப் பாடல்கள், நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல் களத்திலும் ஒலித்தன. கலைஞரின் குறளோவியத்தையும் மு.மேத்தாவின் `ஊர்வலம்’ கவிதை நூலையும் திரையில் காட்டிய பெருமை அவருக்குண்டு. எம்.ஜி.ஆர். எதிர்ப்பை கொள்கைரீதியாக அணுகிய துணிச்சல்காரர் என்றும் அவரைக் கருதலாம். பின்னாளில் அவர் திசையும் பாதையும் பிறழ்ந்ததைக் காலம் அறியும்.

பாடல் காட்சிகளுக்கு பிரம்மாண்ட செட்டுகளை அறிமுகப்படுத்திவர் சந்தரலேகாவைத் தயாரித்த எஸ்.எஸ்.வாசன். அவருக்குப் பிறகு தமிழ்த்திரையில் மிகமிக பிரம்மாண்ட செட்டுகளை வடிவமைத்த டி.ஆர்., ஷங்கர் போன்ற இயக்குநர்களுக்கு முன்னோடி. இன்னொன்று, டி.ஆரின் பிரபல சினிமா பட்டியலில் வராத `ராகம் தேடும் பல்லவி, நெஞ்சில் ஒரு ராகம், வசந்த அழைப்புகள் ஆகியவற்றிலும்  கேட்கும்படியான பாடல்கள் உள்ளன. அவற்றில் `அழகினில் விளைந்தது / மழையின் நனைந்தது’ எனும் பாடலும் ஒன்று. டி.ஆரின் எழுத்துமுறையை கண்ணதாசனும் வியந்த தகவலுண்டு. 

பாட்டெழுதும்போது நேரும் மனத்தடையை எப்படித் தாண்டுவதென அவரிடம் கற்கலாம். இயைபிற்கு அதிகமும் முக்கியத்துவம் அளித்த பாடலாசிரியர் என்றாலும் பல நல்ல உவமைகள் அவரிடம் உண்டு. ரசிக்கவும் வியக்கவும் எவ்வளவோ உள்ள அவர் பாடல்கள், அந்தகாலத்து நவீனம். டிரம்ஸ் சிவமணி அவர் பற்றிப் பேசியதைக் கேட்கவேண்டும்.  சம்பிரதாயமான ஹம்மிங்களுக்கு மாற்றாக ஏலேலம்பர, டண்டனகக்கா போன்ற ஒலிச்சொற்களை அல்லது அசைச் சொற்களைப் பாடலுக்கு முதலிலும் இடையிலும் அவரே இணைத்திருக்கிறார். சாஸ்திரிய இசையைப் பயின்றவர்களுக்கும் ரசிப்பவர்களுக்கும் அப்படியான செருகல்கள் சங்கடத்தை ஏற்படுத்திய சூழல்கள், கவனிக்க வேண்டாதவை. வெகுசன ரசனையை எந்த அளவு குஷிப்படுத்தமுடியுமா அந்த அளவு அவர் கலைக்கோடுகளைத் அழிக்கவும் முயன்றிருக்கிறார். 

டி.ஆரை ரகசியமாக இன்னமும் ரசிப்பவர்களை நானறிவேன். ஒரு பழைய காதலியைப்போல எண்ணிக்கைக்குள் அடங்காத ஆசையுடனும் ஆர்வத்துடனும் அணுகுவதை அறிந்திருக்கிறேன். இன்று டி.ஆரின் ரசிகர்கள் என்றால் நகைப்பார்களோ? என்று கருதுபவர்களின் உள்ளத்தவிப்புகள் உண்மையானவை.

ஒரே கும்மாளமா போகுதே தோழர்,  `ஒரு சீரியஸ் பாட்ட எடுத்துவிடுங்களேன் என்றதும், `மைதிலி என்னைக் காதலி’ திரைப்படத்தில் வந்த `நானும் உந்தன் உறவை / நாடி வந்த பறவை’  பாடலுக்குத் தயாரானார். அது என் இளவயது விருப்பப்பாடல். அதாகப்பட்டது, காதலியும் மைதிலியும் என்னவென்றே தெரியாத வயதில் அடிக்கடி கேட்டது.  தலைப்பே கவிதை என்று தகுதிச் சான்றிதழ் வழங்குமளவுக்கு ரசித்தது. ஷாகுல் பாடிய தொனியைப் பார்த்தால் அவருக்கு எங்கேயோ ஒரு மைதிலி இருந்திருக்கலாம் எனத் தோன்றியது

திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் கதைப்படி, வில்லன்களின் பிச்சுவாக்கள் துளைக்க, டி.ஆர்., அவசர அவசரமாக அமலாவைக் காப்பாற்ற ஓடிவருவதும், சிறைப்பட்ட நாயகி பரத அபிநயங்களில் பரபரத்து நிற்பதும் ஒரே ரணகளம். அந்த ரணகளத்திலும் அதகளத்திலும் அதே பிச்சுவாக்களை உருவி எதிரிகள் மீது வீசிக்கொண்டே பாடும் தத்ரூபம் இருக்கிறதே, அது தனி ஆவர்த்தனம்.  இன்றைக்கு நகைச்சுவையாகத் தெரிவது, ஒருகாலத்தில் உயிர் உருக்கும் சம்பவமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 

தம்மீது எய்த பிச்சுவாக்களை உருவி, எதிரிகளைத் துவம்சம் செய்தபடியே பாடுவதெல்லாம் கொஞ்சம் ஓவரான காட்சியே என்றாலும், அந்தப் பக்கத்தில் அமலா ஆடும் பரதமிருக்கிறதே அது கலாப்பூர்வ அணுகுமுறை. `எந்தச் சூழலுக்கும் சோடையில்லாத சொற்களைப் பாடலாக்கும் திறனை டி.ஆர். இயல்பிலேயே பெற்றிருக்கிறார். அவருடைய முத்த மகன் நடிக்க, இளைய மகனின் இசையமைப்பில் பாட்டெழுதி, ஆனானப்பட்ட டி.ஆரிடமே சன்மானம் பெற்றவன் என்னும் முறையில் சொல்கிறேன், டி.ராஜேந்தர் தவிர்க்கப்படமுடியாதவர். 

பிம்பக் கட்டமைப்பில் ஒருசில பிறழ்வுகள் இருந்தாலும், அசலான, ஆவேசமான கலைஞன் என்பதில் சந்தேகமில்லை. எனக்கு அவர்மீது ஷாகுலைப் போலவே பிரமிப்பும் பிரியங்களும் உண்டு. சண்டைகளும் பாடல்களும் வெவ்வேறாக இருந்த தமிழ்சினிமாவில், பாடலைப் பாடிக்கொண்டே சண்டையிட்ட முதல் கதாநாயகனும் அவரே. ஜெயின் ஜெயபாலாக, ஜாக்கியாகத் தோன்றி வாழைக்காய் பஜ்ஜிக்கும் வசனத்தில் இடமளித்தவர். `ஒருதாயின் சபதம் திரைப்படத்தில் இடம்பெற்ற `ராக்கோழி கூவையில’ பாடலை ஷாகுல் மிகமிக லயித்துப் பாடியதும், டி.ஆரின் மன்மத விகசிப்புகள் குறித்த திசைநோக்கிப் பேச்சு திரும்பியது. பொதுவில் சொல்லமுடியாத ரகசியத் தடயங்கள் அவை. 

ஆனாலும், ஜானகியம்மாவை இப்படியெல்லாம் சிணுங்க வைத்திருக்க வேண்டுமா எனத் தோன்றியது. `உறவைக் காத்த கிளி திரைப்படத்தில் வெளிவந்த `பக்கத்தில் வந்தாலென்ன தீன்தனா பாடலில் மேற்படி கமகங்கள் கலவரப்படுத்துபவை. உரையாடலில் `ஆப்பத்துக்குத் தேங்கா பாலு / அய்யாவுக்கு நீதான் ஆளு என்னும் `சம்சார சங்கீதம் திரைப்பாடலும் கவனத்துக்கு வந்தது. இந்த இடத்தில்தான் ஷாகுலின் சமத்துவ சித்தாந்த கொள்கைப்பிடிப்பை உணரமுடிந்தது. 

எது ஒன்றையும் ஒதுக்காத அவருடைய உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாட்டில் அடுத்த பாடலாக டி.ஆரின் பிரசித்திப் பெற்ற `வைகைக் கரைக் காற்றே நில்லு பாடலுக்குத் தாவினார். பாடலை இடையிலேயே நிறுத்தி, ` தூது மற்றும் சங்க இலக்கியத்தின் பாதிப்பென்று தெரிகிறதா தோழர் என்றார். பதிலுக்கு `இரண்டு எம்.ஏ. வாங்கிய ஒருவர், அதெல்லாம் படிக்காமலா இருந்திருப்பார் என்றேன். டி.ஆரின் எழுத்து முயற்சிகள் மையமான மனோநிலையில் பிறப்பவை. கீழ்க் கட்டுமானத்தைத் தகர்த்துவிடாமல் எடை கூடின பிரகாரங்களை எழுப்பியவை. 

உதாரணமாக, மைதிலி என்னைக் காதலியில் இடம்பெற்ற `ஒரு பொன்மானை நான் காணத் தகதிமிதோம்’ பாடலைச் சொல்லவேண்டும். எனக்கு அப்பாடலின் எல்லாவரிகளும் பிடிக்கும். சந்தத் தமிழை மிக லாவகமாக மெட்டிற்குள் பொருத்தியிருப்பார். `சந்தனக் கிண்ணத்தில் குங்குமச் சங்கமம் / அரங்கேற அதுதானே உன் கன்னம் / மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம் / நடத்திடும் வானவில் உன் வண்ணம் / இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட / புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள் / கலைநிலா மேனியிலே சுளைபலா சுவையைக் கண்டேன்’ என்னும் சொல்லாட்சியைப் பலமுறை ரசித்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட காட்சியோ வசனமோ வித்யாசமாக இருந்தால் அதை `டைரக்டர் டச்’ என்பார்கள். விசேஷம் என்னவென்றால் ரைடக்ராகவும் நடிகராகவும் இருந்துமேகூட ஒரு நடிகையையும் அவர் தொட்டு நடித்ததில்லை. தமிழ்க் கலாசாரப் பண்புகளையும் தன்மைகளையும் பேணியவராகவே தன்னை முன்நிறுத்தியிருக்கிறார். காதல் முகிழ்க்கும் அதிரதியத் தருணங்களிலும் பெண்ணைத் தொடாத நுட்பம், இலக்கியப் பனுவல்களில் எங்கெங்கு உள்ளன எனத் தேடலா

அதேபோல, `உயிருள்ளவரை உஷா திரைப்படத்தில் இடம்பெற்ற `இந்திரலோகத்து சுந்தரி ராத்திரி கனவினில் வந்தாளோ எனும் பாடல். இந்தப்பாடலை ஷாகுல் ஓர் ஆகச்சிறந்த மரபுக்கவிதையாக நிறுவினார். வார்த்தைக்கோர்ப்பும் வாக்கிய அமைப்பும் அவ்விதமே அமைந்த அப்பாடலில் கற்பனைகள் களிநடனம் புரிந்திருக்கின்றன. `தென்றலதன் விலாசத்தைத் தம் தோற்றமதில் பெற்று வந்தவள் / மின்னலதன் உற்பத்தியை அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள் / முகத்தைத் தாமரையாய் நினைத்து மொய்த்த வண்டு ஏமாந்த கதைதான் கண்கள் / சிந்து பைரவியின் சிந்தும் பைங்கிளியின் குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள் என்ற வரிகளைக் கவியரங்கப் பாணியில் மூன்றுதரம் உச்சரித்துவிட்டு, `வசந்த காலங்கள் / இசைந்து பாடுங்கள் பாடலுக்குள் குதித்தார். 

என்ன இருந்தாலும், இந்த ஷாகுல் டி.ஆரே மறந்த வரிகளை மனத்திற்குள் அடைகாத்து வைத்திருக்கிறாரே என்று அதிசயத்தேன். `உன் மைவிழிக் குளத்தில் / தவழ்வது மீனினமோ / கவி கண்டிட மனத்தில் கமழ்வது தமிழ் மணமோ / செம்மாந்த மலர்கள் அண்ணாந்து பார்க்கும் உன் காந்த விழிகள் / ஒரு ஏகாந்த ராகம் தெம்மாங்கில் பாட ஏதேதோ குயில்கள் என்னும் வரிகளையெல்லாம் மீளவும் கேட்கையில் ஆனந்தம் பீறிட்டது. 

இன்றைய திரைப்பாடலில் இப்படியான வர்ணனைகளுக்கு வாய்ப்பே இல்லை. மரபையும் யாப்பையும் துண்டித்த  நவநவீன சொல்லாக்க முறையில் உரைநடைகளைப் பாடலாக்கும் முயற்சிகளே தொடர்கின்றன. மெளன வாசிப்புக்குரிய கவிதைகளைத் திரைப்பாடலில் எதிர்பார்ப்பவர்கள், பழந்தமிழ் இலக்கியத்தின் வாடையே இல்லாதவர்களாக இருப்பதில் வருத்தமில்லை. மேடைக்கு மேடை நாஞ்சில்நாடன் பழந்தமிழ் இலக்கியத்தின் நுட்பங்களை விவரித்து வாசிக்கச் சொன்னாலும் ஒருவரேனும் செவிமடுத்ததாகத் தெரியவில்லை. நவீனத்துவ, பின்நவீனத்துவ எழுத்துமுறைகள், காகிதங்களை அலங்கரிக்க மட்டுமே உதவுபவை. ஆனால், திரைப்பாடலைப் பொறுத்தவரை அவை, சாமான்ய மக்களுடனான கலை சம்பாஷணை. அவர்கள் நவீனத்துவத்தை ரசிக்க மாட்டார்களா? என்பவர்கள், பைபாஸ் வழியே பக்கத்தூர் இலக்கியவாதிகளைப் பார்க்கச் செல்லவும். 

டி.ராஜேந்தரை இலக்கியவாதியாக நிறுவவேண்டிய அவசியம் எனக்கில்லை. மூட நம்பிக்கை பீடித்திருந்த திரையுலகில், `நானொரு ராசியில்லா ராஜா’ என்றுப் பாட்டெழுதி, பெருவெற்றியை அவரால் எட்டிமுடிந்தது. படிப்பறிவையும் பகுத்தறிவையும் தர்க்கப்பூர்வமான அணுகுமுறைகளால் சாத்தியப்படுத்தவர் என்றும் அவரைக் கருதமுடியும். அவர் அவர்காலத்தில் போதிய அங்கீகாரத்தைப் பெற்றவர். தவிர, தன்னால் இயன்ற முயற்சிகளை நம்பிக்கையுடன் செய்து வெற்றியும் கண்டவர். அவர் இயக்காத படங்களுக்கும் இசையமைத்து கவனிக்க வைத்தார். எழுபது எண்பதுகளின் கவிதைப் போக்குகளை உள்வாங்கினால்  அவர் பாடலும் எழுதியவிதமும் பிடிபடும். `பூக்களைப் பறிக்காதீர்கள், பூக்கள் விடும் தூது’ ஆகிய திரைப்படங்கள் அவர் இசையாலும் பாடலாலும் பெருவெற்றி பெற்றுள்ளன.  `கிளிஞ்சல்கள்’ என்றொரு படம். மாற்று சினிமா முயற்சியில் ஈடுபட்ட `பசி துரை இயக்கியது. 

அப்படத்தில் `ஜூலி ஐ லவ் யூ என்னும் பாடல், இன்றைய இளம் காதலர்களும் கேட்கத் தக்கது. டி.ஆரின் `மூங்கில் காட்டோரம் குழல்நாதம் நான் கேட்கின்றேன்’ என்னும் பாடலில் இரண்டுவரி என்னை வெகுவாக கிளர்த்திற்று. `பாதத்தை வைத்தால் பழங்கதை சொல்லும் சருகுகளே / பறவையைப் பார்த்தால் மனதினில் முளைக்குது சிறகுகளே என்னும் வரிகளே அவை. 

மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் மாணவராக இருந்த சமயத்தில் அவருடன் ரயிலில் பயணித்த பலருக்கும் அவர் ஆச்சர்யமூட்டுபவராக இருந்திருக்கிறார். அதே ஆச்சர்யத்தை தமிழ்சமுகம் முழுமைக்கும் ஏற்படுத்த அவர் பட்டுள்ள பாடுகளும் அவமானங்களும் கொஞ்சமல்ல. வறுமையும் எதிர்காலம் குறித்த தவிப்பும் மண்டியிருந்த பொழுதிலும் தன்னுடைய கலைமனத்தை அவரால் காப்பாற்ற முடிந்திருக்கிறது. 

சின்னச் சின்னப் பதங்களில் வாழ்வை எழுதியவர்களில் முக்கியமானவர். இன்றும்கூட ஒருசிலர் அவரை நக்கலும் நையாண்டியுமாக அணுகுவதைப் பார்க்கலாம். எல்லாவற்றுக்குப் பின்னாலும் ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டமிருக்கிறது. ஷாகுலுடன் மூன்றுநாள் தொடந்த உரையாடலை முழுதுவமாக எழுத முடியவில்லை. ஷாகுலைப் போல் எண்ணிறைந்த இளைஞர்கள் டி.ஆரால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள். 

இறுதியாக ஒரு செய்தி. அணுஅணுவாக டி.ஆரை உள்வாங்கிய ஷாகுல், அவருக்காகக் கதையெழுதி அவரையே இயக்க எண்ணிய த்ரில் கதையைப் பின்னர் விவரிக்கிறேன். அதுநிமித்தம் எழுதிய கதையை எடுத்துக்கொண்டு டி.ஆரின் தலைமை ரசிகர் மன்றத் தலைவரும்,  தஞ்சை சினி ஆர்ட்ஸ் நிர்வாகியுமான ஜான்சனை சந்தித்த காமெடி அத்தியாயங்கள், கலகலப்பானவை. ஆர்வம் ஏற்படுத்தும் கோளாறுகளே கலையின் அடிப்படை. `பூவாங்கி வந்த நேரம் / என் பொன்னுரதம் உன்னைக் காணோம் என்ற டி.ஆரின் சொல்லுடனே ஷாகுல் வாழ்கிறார். ஆனாலும் ஷாகுல், டி.ஆருக்கே கதையும் பாடலும் எழுதுமளவுக்குப் போயிருக்க வேண்டியதில்லை.

 

 

 

 

4 comments:

selvaview.blogspot.in said...

டி.ஆர் பற்றி இதுவரை வெளிவராத தொனியில் பாடலுடன் கலந்த அற்புதமான கட்டுரை. இந்திரலோகத்தில் சுந்தரி இராத்திரி கனவினில் வந்தாளே.....
பபழைய நினைவுகளை மீட்டுக் கொடுத்தீர்....நன்றி.

பரிதியன்பன் said...

நானும் டி.ஆரின் இரசிகன் .ஒருதலை ராகம் முதல் டி.ஆரின் எல்லாப் படங்களையும் பார்த்திருக்கிறேன்.எல்லாப் பாடல்களும் அநேகமாக படம் வந்தவுடன் மனப்பாடம் எங்கே ஒலித்தாலும் கூடவே போடுவேன் ்இப்போது கூட நிறைய பாடல்களை முனுமுனுத்துக்கொண்டே இருப்பேன் .இந்திர லோகத்து சுந்தரி ,இடையின் பினலனழகில் இரண்டு குடத்தைக் கொண்ட புதிய தம்புராவை மீட்டிச் சென்றாள் ,ஜவுளிக்கடை பொம்மை கூட ,இப்படி அநேகமாக எல்லாப் பாடல்களையும் இரசித்துப் போடுவேன் .என் நண்பர்களும் அப்படி இருந்திருக்கிறோம் .ஒவ்வொரு பாடல் வரிகளை இங்கு படிக்கும் போதும் அந்தக் கால நினைவுகள் அப்படியே மனதில் எழுகின்றன.உண்மையான சகலகலா வல்லவன் டி.ஆரை நினைவூட்டியமைக்கு நன்றி தோழர்
மு.பாலசுப்பிரமணியன்
புதுவை

பரிதியன்பன் said...

பாடுவேன் தவறுதலாக போடுவேன் என வந்துவிட்டது .நன்றி

நரிக்குடி கண்ணண் said...

டி.ஆரின் வீராச்சாமி படத்தில் பிம்பம் ஷாகுல் அவர்களுக்கு பிடித்த பாடல்.....