Thursday, June 10, 2021

ஆலிஃப் லைலாவின் அற்புதக்கதை

 இசைமாமேதை நுஸ்ரத் ஃபதே அலிகானின் பாடல்களெனில் எல்லாவேலைகளையும் போட்டதுபோட்டபடி கேட்க ஆரம்பித்துவிடுவேன். எழுகமலப் பூமலரும் ஏகந்த இசை அவருடையது. 

சென்றவாரத்தில் ஒருநாள் தோழர்களுடன் இசைபற்றிய உரையாடலில் இங்கே குறிப்பிட்டுள்ள பாடலைப் பற்றி பகிர்ந்துகொண்டேன். இப்பாடலை எழுதிய ஜாவேத் அக்தரின் சிறப்புகளையும் சிந்தனைகளையும் சொல்லிக்கொண்டே இருக்கலாம். 

கவிதைகளைப் பாடல்களாக மாற்றும் போதிலும் அவர் தவறவிடாத கவித்துவங்களை இப்பாடலில் நுகரலாம். வரிவரியாக முகிழ்க்கும் அன்பின் நறுமணங்களே அவர். கஸலும் கவ்வாலியுமாக நுஸ்ரத் கலந்துகட்டும் ஸ்வரங்களில் ஜாவேதின் சொற்கள், ஓர் முதன்மை அதிகாரிபோல அட்டணக்காலிடிட்டு அமர்ந்துள்ளன. 

ஆலாபனைகளிலேயே ஒருத்தியின் அழகை மேன்மைப்படுத்தும் நுஸ்ரத்தின் குரலும், காதல் பெருங்களியின் கனிவுகளை ஜாவேத்தின் விரலும் ஒரே பதத்தில் உணர்த்துகின்றன. வதனம் அதாவது முகம், ஒருகணம் நிஜம்போல மறுகணம் மாயைப் போல என்பதை நினைத்து நினைத்து கிறங்கியிருக்கிறேன். 

https://music.youtube.com/watch?v=2F7G9bOIwlk&list=RDAMVM2F7G9bOIwlk

கண்கள், முகம், தேகம், கூந்தல் என வரிசையாகக் கற்பனை உச்சியில் நின்று மயிலிறகால் மனதை வருடியிருக்கிறார். காதலிக்கவேண்டும்போல் இருக்கிறது. இம்மாதிரியான இசையும் பாடலும் ஏங்கிச் சுழலும் ராட்டினங்களாக இதயத்தை மாற்றுகின்றன.

 `கேசம் சிக்குண்டால் உலகம் துயரில் ஆழ்கிறது’ என்கிறார். மீதூறும் காதலுக்காக மீண்டுமொரு பிறவியைக் கோரக் தோன்றுகிறதுதானே?


பாடல் வரிகள்:

பேரழகே பேரழகே

அவளுடைய எழிலைப் புகழ்வதென்பது 

சாத்தியமான காரியம் இல்லை

நீ அவளைப் பார்த்தாலும் உண்மைதான் என்று 

சொல்வாய் எம் நண்ப 


அவளைப் போன்ற அழகியை

இதுவரை கண்டதில்லை

அஜந்தா சிற்பம் போன்ற 

மேனியுடையவள்


கண்களை மந்திரத்தால் 

கட்டிப் போடுவது போன்ற தேகம்

தேகம் ஒரு கவிதையா? நறுமணமா?


தேகம் மனதை மயக்கும் 

இனிய ராகம் போன்றதா

தேகம் நறுமணம் கமழும் 

நிலவொளியா


தேகம் பூத்துக் குலுங்கும் 

பூந்தோட்டமா?

தேகம் சூரியனின் 

முதற் கதிரொளியா?


கண்ணைக் கவரும், 

மனதைச் சிறை பிடிக்கும்

 செதுக்கி வைத்தாற் போன்ற  

சிற்பமா தேகம்?


சந்தனத்தின் மென்மை

பளிங்கின் தூய்மை

வதனம் ஒரு பூவைப் போல 

மலர்ந்திருக்கிறது


வதனம் அவளுடையதா அல்லது நிலவா

வதனம் கஸல் போல உள்ளது,

கஸலின் இனிய வரிகள் போல உள்ளது


வதனம் கூம்பிய மொட்டுப் போல,

வதனம் விரிந்த தாமரை போல

வதனம் மொத்தக் கற்பனையையும் 

திரட்டிச் செய்த சித்திரம் போல உள்ளது


வதனம் ஒரு கனவும், 

வதனம் கனவின் பொருளும் கூட

வதனம் ஆலிஃப் லைலாவின் 

அற்புதக் கதை


வதனம் ஒரு கணம் நிஜம் போல, 

மறு கணம் மாயை போல

வதனம் எங்குமே காண முடியாத அபூர்வம்

நிலவின் பிறை போன்ற நெற்றி, 

தேகமும் அது போலவே.


கண்களைப் பார்த்தவன் 

கண்களையே பார்த்துக் கொண்டே நின்று விட்டேன்

இரு  மது நிறைந்த கோப்பைகள், 

இரண்டும் தகிப்பவை


அவை கண்களா, மதுக் கூடத்தின் வாயில்களா

அவற்றைக் கண்களென்பேனா, கனவென்பேனா

அவையிரண்டும் தாழ நோக்குகையில்

 நாணம் ததும்புகிறது


அவை உயர நோக்குகையில்

பிரார்த்தனையாகின்றன

உயர்ந்து தாழ்கையில் அது

அவளது எழிலாகிறது


தாழ்த்திய பின் மீண்டும்  

உயர நோக்குகையில் அது என்னை வதைக்கிறது

கண்களில் நிலமும் ஆகாயமும் சரணடைகின்றன

நர்கீஸ் மலர்கள்..நர்கீஸ் மலர்கள்..

மை தீட்டிய விழிகள்..மை தீட்டிய விழிகள்


எனதன்பின் கேசத்தின் கதையும்

அதைப் போன்றே நீளமானது

அடர் கேசம் என் இதயத்தில் 

நிழல் படர்த்தியுள்ளது



கேசம் கருமேகங்கள் ஒன்றோடொன்று 

பின்னிப் பிணைந்தது போல

கேசம், ஏதோ கருமையின் சாயையா

கேசம் சிக்குண்டால் உலகம் துயரில் ஆழ்கிறது


கேசம் சீராக இருந்தால் 

இந்தக் கவிதை புனைவது எளிதாகிறது

கேசம் கலைந்து கிடந்தால் 

இரவு கவியத் தொடங்குகிறது


கேசம் அலைபாய்கையில்

இரவு பாடத் துவங்குகிறது

கேசம் ஒரு பிணை சங்கிலி போல உள்ளது, 

ஆயினும் எத்தனைஅழகாக உள்ளது


பட்டுப் போல..பட்டுப் போல..

ஆகாயத்தைப் போல ஆகாயத்தைப் போல..


- ஜாவத் அக்தர்

தமிழில்: லதா








No comments: