Friday, August 07, 2020

என்னங்க சார் உங்க சட்டம்







ஒருபாட்டு கொஞ்சம் பின்னணி:17

மாற்றுக் கருத்துடன் செயலாற்ற தைரியத்தைவிட, தெளிவே பிரதானம். இன்றும் மக்கள் நலன் சார்ந்து இயங்குபவர்களைத் தெளிவற்றவர்களாகச் சித்திரித்து ஒருசிலர் செய்துவரும் சூழ்ச்சிகளையும் அவதூறுகளையும் அறிகிறோம். 

தனிநபர்களைத் தாங்கவேண்டிய அவசியம் கொள்கைகளுக்கில்லை. ஆனால், ஒருவர் துன்புறுத்தலுக்கு ஆட்படும்போது துயருறுவதே அறம். எந்த நேரத்திலும் என்னை ஊக்கி உந்தியெழ வைக்கும் `நம்மைப்பிடித்த பிசாசுகள் போயின, நன்மைக் கண்டோமென கும்மியடி’ என்கிற பாரதியின் வரிகளை நினைத்துக்கொள்கிறேன். 

தளர்வுற்று வீழும் தருணங்களில் தன்னம்பிக்கை ஊசியாக அவ்வரிகளையே எனக்குள் ஏற்றிக்கொள்கிறேன். `இழப்பதற்கு எதுவுமில்லை’ என்பதே எதார்த்தம். கனவுகள் சுகமானவை. என்ன நடந்தாலும் மெளனமாகக் கடந்துவிடும் கீழ் மத்தியத் தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாக என்னை என் குடும்பம் வளர்க்கவில்லை. ஓரளவு வாசிக்கவும் கேள்வி கேட்கவும் அனுமதித்தது. அதன் பொருட்டு சமூக விஷயங்களில் என்னை நான் இயல்பாகவே ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறேன். 
சிறுவயதில் போராட்டக் களங்களில் ஆளும் அரசுகளுக்கு எதிரான பதாகைகளை ஏந்திக்கொண்டு நடந்ததை மறப்பதற்கில்லை. முழுவதுமாக அக்காரியங்களில் என்னை நான் இணைத்துக்கொள்ள வாழ்வும் வயிறும் வழிவிடவில்லை. குடும்பத்தின் மூத்த மகனாக ஆற்றவேண்டிய கடமைகளை உத்தேசித்து ஒதுங்க நேர்ந்தது. ஆனாலும், காலத்தைக் கவனிக்காமலில்லை. 

பாசத்தின் பதுங்குகுழியிலும் தேசத்தையே நினைத்து வந்திருக்கிறேன். திரைப்பாடலாசிரியனாக அறியப்பட்டதும் என் எழுத்துகளின் வழியே விட்டதைத் தொடரும் வேட்கைகள் விரியத் தொடங்கின. தம்பி ராஜூமுருகன் இயக்கிய `ஜோக்கர்’ திரைப்படத்தில் `என்னங்க சார் உங்க சட்டம்’ பாடலில் எனக்குள்ளிருந்த சமூக மனிதன் விழித்துக்கொண்டான். 

அபாயகரமான திட்டங்களால் மக்களைப் பிளவுபடுத்தும் ஆட்சியாளர்களை நோக்கிய கேள்வியே அது. இயற்கை வளங்களைத் தனியாருக்கும் பெருமுதலாளிகளுக்கும் தாரைவார்க்கும் அதிபயங்கர அரசக் கொடூரத்தை எழுதித்தரும்படி ராஜூமுருகன் கேட்டுக்கொண்டான். அரசியல் சாக்கடையில்லை. ஆனால், அதை அவ்விதம் ஆக்கியவர்களைக் காத்திரமான சொற்களால் கண்டிக்கவும் விரும்பினான். 
பாடல்களால் புரட்சியை உருவாக்கும் எண்ணமில்லை. அதேசமயம், பாடலில்லாமல் புரட்சிகள் நிகழ்வதில்லை என்பதே அவன் தீர்மானம். கவிதைகளின் நுட்பம் தெரிந்தவன். கட்சி அரசியலின் கசடுகளை வெறுப்பவன். இடதுசாரிகளின் ஏக்கங்களை திரையில் பிரதிபலிக்கத் தயங்காதவன். கட்சிமேடைகளில் பாடப்படும் பிரச்சாரப் பாடல்களைப் போல அமையவேண்டுமென நினைத்தோம். 

அதிர்ந்து சொல்லவேண்டியதை இசைக்காகவும் மெட்டுக்காகவும் குறுக்கவேண்டாமென்று இசையமைப்பாளர் ஷான்ரோல்டனும் எண்ணினார். எழுதியே பாடலாக்கினோம். பாடலை பாடவந்த அறந்தை பாவா மெட்டுக்குள் நிற்காமல் தன்னியல்பாகப் பாடினார். அதுவுமே நேர்த்தியாக அமைந்ததால் அப்படியே இருக்கமென்று விட்டுவிட்டோம். 
கட்டுக்குள் நிற்குமா சமூகக் கோபமென்று அந்த நேரத்திலும் தம்பி ராஜூமுருகன் ஒலிப்பதிவுக்கூடத்தைக் கலகலப்பாக்கினான். `ஆண்ட பரம்பர கைநாட்டு / ஆட்டி படைக்குது கார்ப்பரேட்டு / நாட்ட விக்கிற மந்திரிமாருக்கு / நல்லா வைய்யி சல்யூட்டு’ என்றதும், `வஞ்சப்புகழ்ச்சியாண்ணே’ என்றான். `வஞ்சத்தையும் புகழவேண்டிய சூழல்’ என்றேன். 

அறந்தை பாவா ஆவேசமாகச் சிரித்துவிட்டு `ரேஷன் அரிசி புழுவுல / வல்லரசு கனவுல / தேசம் போற போக்க பாத்தா / தேறாதுங்க முடிவுல’ என்று பாடினார். பாடல் நாம் நினைத்ததற்கு மேலாகத் தேறிவிடும்போல என்ற ஷானை, `கருத்துசொல்ல முடியல / கருப்புப் பணமும் திரும்பல / ஆளுக்காளு நாட்டாமதான் / பார்லிமெண்ட்டு நடுவுல’ வரிகள் கலங்கடித்தன 
`சார் பிரச்சனை ஏதும் வந்துடாதே’ என்றார். `வந்த பிரச்சனையதானே பாடுகிறோம்’ என்று ராஜூமுருகன் முறுவலித்தான். `இதுக்கே பயந்தா எப்படி’ என்றதும் `தேசியப் பாதுகாப்புச் சட்டம் பற்றி தெரியாதே’ என்றார். உணர்வுகளைக் கோபங்களாக வெளிப்படுத்துவதில் சங்கடமுண்டு. சமயத்தில் எழுதப்படும் வார்த்தைகளே நமக்கு எதிராகத் திருப்பப்படும். கவிதைகளுக்காக காவு வாங்கிப்பட்ட பலபேரை வரலாறு குறித்துவைத்திருக்கிறது. அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாதே என்கிற எச்சரிக்கை எங்கள் எல்லோருக்கும் இருந்தது. 

குறிப்பாக, படத்தின் தயாரிப்பாளர்களான பிரபுவும் பிரகாஷும் எங்களை மிகுந்த ஜாக்கிரதையுடன் வழிநடத்தினர். அதையும் உள்வாங்கியே `இயற்கை என்ன மறுக்குதா / எதையும் உள்ள பதுக்குதா / எல்லாத்தையும் சூறையாட / சர்க்கார் கூட்டிக் கொடுக்குதா’ என எழுதினேன். எளிதல் பதற்றமுறாத ராஜூமுருகனே `அண்ணே கூட்டிக்கொடுக்குதா வார்த்தைக் கடுமையாகத் தோன்றுகிறது’ என்றான். 
`கூட்டிக்கொடுத்தல் என்பது நிறுவனங்களுக்கு அரசு அளித்துவரும் மானியத்தைப் பற்றியதே தவிர, தரக்குறைவான வார்த்தையில்லையே’ என்றேன். `இருந்தாலும் அப்படித் தொனிக்கிறது தவிருங்கள்’ என்றான். அதுமட்டுமல்ல, `படத்தை ஆட்சேபிக்க தணிக்கைத்துறைக்கு நாமே வாய்ப்பேற்படுத்தித் தரவேண்டுமா’ எனவும் கேட்டான். 

வெகுநேரம் அவனே யோசித்துவிட்டு `ஆடியோவில் மட்டுமேனும் இருக்கட்டும்’ என்றான். `ஆட்சேபம் வந்தால் மாற்றிக்கொள்ள வேறு வரியும் எழுதுங்கள்’ என்றதும் நிதானமானேன். ஒரு பாடலுக்குள் என்னைநான் எங்கேயேனும் வெளிப்படுத்த விரும்பினாலும் சூழல் கருதி சுருங்கிய சம்பவங்கள் ஒன்றிரண்டல்ல. உடனிருப்பவர்கள் அல்லது உடனுழைப்பவர்கள் ஒத்துழைத்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். 

எத்தனையோ பாடல்களில் எத்தனையோ நான் விரும்பிய வரிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. திரைப்பாடலின் அனுகுமுறைகளை உணர்ந்ததால் அத்தவிர்ப்புகள் என்னைத் தொந்தரவுச் செய்வதில்லை. கிடைத்த வாய்ப்புக்குள் என்னென்ன இயலுமோ அவையே என் பாதையும் பயணமும். 
பொதுஜனங்களின் உணர்வுகளை நகலெடுக்காத கலையும் இலக்கியமும் காலத்தால் புறந்தள்ளப்படும். காலத்தே செய்யவேண்டிய பயிர்களைத் தள்ளிப்போட்டாலும் களைகளே மண்டும். கொள்கைகளும் கோட்பாடுகளும் கலை இலக்கியப் பிரதிகளுக்குக் கட்டாயமில்லை. ஆனால், அவற்றையும் இணைத்துக்கொண்டால் எரியும் தீயாகலாம். 

பாடலின் இறுதிவரிகளாக `நல்ல தண்ணி கெடைக்கல / நல்ல காத்து கெடைக்கல / அரசாங்க சரக்குலதான் / கொல்லுறீங்க சனங்கள’ என்று எழுதியதை ராஜூமுருகன் வரவேற்றான். `கள்ளுக்கட காசிலதாண்டா / கட்சிக்கொடி ஏறுதுபோடா என்ற புலமைப்பித்தன் வரிகளே இப்பாடலுக்கான உந்துவிசை. நேர்த்தியான சொற்களில் எளிய அரசியலை அவரிடமிருந்தே திரைப்பாடலில் படித்துக்கொண்டேன். `நீதிக்கு தண்டனை’ திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றொரு பாடலும் அவர் எழுதியதில் என்னைக் கவர்ந்தது. 
எல்லாப் பாடலுக்குமே முன்மாதிரியும் வகைமாதிரியும் உண்டாக்கிக் கொடுத்தவர்களை வணங்குகிறேன். அவர்களின் வழித்தடத்தை அறியவும் புரியவும் நேரமில்லாததால் திரைப்பாடல்களைத் தீட்டாகக் கருதும்போக்கே தொடர்கிறது. ஆட்சேபத்துக்குரிய வரியைக் குறிப்பிட்டு தணிக்கைத்துறை அதிகாரி என்னையும் ராஜூமுருகனையும் பாராட்டியது தனிச் சங்கதி. 

எல்லாமட்டத்திலும் மக்களை நேசிப்பவர்கள் இருக்கிறார்கள். மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகையில் அதிகார வட்டத்திற்குள்ளிருந்தும் குரல்கள் எழும்பும். மாற்றங்களை மனத் தெளிவினாலும் சட்டத்தினாலும் கொண்டு வரமுடியும். ஒரேஒரு சிக்கல், சட்டங்களை மாற்றுமிடத்தில் இருப்பவர்கள் மக்கள் விரோதிகளாக இருப்பர் அல்லது மனத் தெளிவற்றவர்களாக அமைந்துவிடுவர். 

கேள்விகளில் இருந்தே போராட்டங்கள் தொடங்குகின்றன. எனினும், தற்போதோ போராட்டங்களைக் கேள்விக் கேட்பவர்களே தலைவர்களாக அவதாரமெடுப்பது ஆச்சர்யமல்ல, அவலம்.

No comments: