Wednesday, August 05, 2020

ஒரு பாட்டு, கொஞ்சம் பின்னணி


ஓலஓல குடிசையில

எளிய மனிதர்களின் வாழ்வியல் பின்னணியைத் தத்ரூபமாகப் படம்பிடிப்பதில் என் தம்பி ராஜூமுருகனும் ஒருவன். அவன் குறித்த பெருமிதங்கள் பல. ஜோக்கர் திரைப்படத்திற்கு கிடைத்த தேசியவிருதை அவன் திருப்பியளிக்கும் சூழல் ஏற்படாதிருக்கட்டும். தர்மபுரியைக் களமாகக் கொண்டு எடுக்கப்பட்டுவந்த ஜோக்கர் படபடிப்பைக் காண என்னையும் இசையமைப்பாளர் ஷான்ரோல்டனையும் அழைத்திருந்தான். 

ஒருவாரம் அங்கேயே தங்கி அப்பகுதியில் பாடப்படும் மக்கள் பாடல்களைச் சேகரித்தோம். அப்படத்தில் இடம்பெற்ற அத்தனைப்பாடல்களும் அதேமண்ணில் வசிப்பவர்களால் பாடப்பட்டவை. சுந்தர் ஐயரும் அப்படிக் கிடைத்தவர்தான். `ஐ லவ்யூ லவ்யூ ஜாஸ்மீன்’ பாடலுக்குக் குரல் கொடுத்தவர். சுந்தரையா, சுந்தர் ஐயரெனும் புனைப்பெயர் வைத்துக்கொண்டதால் அவருக்கும் தேசியவிருது கொடுத்தார்கள் என்று குறைத்துச்சொல்லமாட்டேன். அற்புதமான மண்ணிசைக் கலைஞர் அவர். ஏஆர். ரஹ்மானும் பாட அழைத்திருக்கிறார். ஜோக்கரில் `என்னங்க சார் உங்க சட்டம்’ பாடல் அளவுக்கு `ஓலஓல குடிசையில கேட்கப்படவில்லையோ’ எனும் யோசனை எனக்குண்டு. படத்தின் தன்மையைப் பொறுத்துத்தானே வெற்றியும் ஏற்புகளும். 

ஓலஓல குடிசை பாடலில், குக்கிராம மக்களின் எண்ணவோட்டங்களைப் பகிர்ந்திருக்கிறேன். சின்னவயதில் என்னை ஆங்கிலவழிப் பள்ளியில் படிக்கவைக்க என் அம்மா பட்ட துயரங்கள் சொல்லி மாளாதவை. அப்போது என்னம்மாவுக்கு இரண்டே இரண்டு ஆசைகள் இருந்தன. ஒன்று, ஆங்கிலவழியில் என்னைப் படிக்கவைப்பது. மற்றொன்று, விமானத்தில் ஏறி ஆகாய அற்புதங்களைக் காணச்செய்வது. இரண்டு ஆசைகளும் இப்போது நிறைவேறிவிட்டன. ஆனால், என் அம்மா விமானத்தில் பறந்தது, மிகச் சமீபத்தில். 

வறுமைநிலையில் உழல்பவர்களின் தவிப்புகளும் தாகங்களும் வேறுமாதிரியானவை. ஒன்றிரண்டு முந்திரிப்பருப்புகளுக்காக சுவைகுறைந்த மொத்த பாயாசத்தையும் பாராட்டுவது போன்றது அது. இருப்பதே போதுமென்கிற நிறைவை அடிக்கடி சொல்லிக்கொள்வது. போதாமைகளை மறைத்துக்கொண்டு புன்னகைப்பது. சொல்லுக்குப் பயந்து வாழ்வது. பிறர் நம்மையும் சொல்லமாட்டார்களா என ஏங்குவது. 

கழிப்பறை இந்தியாவின் அடிப்படை பிரச்சனை. வடக்கில் இப்பிரச்சனையின் தீவிரம் மிகுதி. அதை ஒரு திரைக்கதையாக அமைத்து தம்பி என்னிடம் சொல்லியபோது மகிழவில்லை. வருத்தமுற்றேன். எண்பதாண்டுக்கால இந்தியாவில் கழிக்கக்கூட வழியும் வசதியும் இல்லாத சனங்களின் கண்ணீர் கொடூரத் துரத்தல். ஒருநாள் அரச மிருகங்களைச் சனங்கள் வேட்டையாடுவர். கதையை கேட்கையில், கிளீன் இண்டியா மற்றும் கிரீன் இண்டியா கோஷங்கள் காதைத் துளைத்தன. ஷான்ரோல்டன் இசைக் கொம்பன். எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன். சங்கீதத்துடன் இங்கீதமும் பயின்றவர். `பல்லவியை எழுதுங்கள்’ இசையமைக்கலாம் என்றார். ஒரே ஒரு கிராமத்திலே படத்திலுள்ள ஓல குடிசையிலே (இளையராஜா, ஜானகி) எனும் பாடலை நினைவில்வைத்து எழுதிக்கொடுத்தேன். 

ராஜூமுருகன் என் வீட்டிலேயே வளர்ந்தவன் என்பதால் என் உணர்வுகளைப் புரிந்துகொள்பவன். குறுக்குச்சால் ஓட்டுவதில்லை. திருமணத்திற்குப் பிந்தைய வாழ்வை அந்த அவனும் அவளும் கற்பனை செய்வதுதான் சூழல். `வாசலே இல்லா வீட்டில் பூசணிப்பூ நீதானே’ என்றதும், `பாப்பாபட்டியும் கீறிப்பட்டியுமாண்ணே’ என்றான். `தண்டையார்பேட்டையும் தாராவியும் என்றுகூடச் சொல்லலாமே’ என்றேன். சிரித்து சிரித்து பத்தே நிமிடத்தில் முழுபாடலையும் எழுதவைத்தான். `வேர்வையில நூலெடுத்து / சேல நெஞ்சி நாந்தாந்தருவேன்’ என்றேன். `வெக்கப்பட்டு நீ சிரிச்சா’ என்று நிறுத்தினான். `கட்டிக்குவேன்’ என்று சந்தத்தை நேர்செய்தேன். அன்பும் காதலும் மிகுந்த தருணங்களை உருவாக்க முடியாது. அமையவேண்டும். 

`தும்மலிடும் சத்தத்துக்கே சாமிவரும் எனும் தொடர். அடிக்கடி என் அம்மாச்சி சொல்வது. அம்மாச்சிக்கு, தும்மலை அய்யனாரே எனச் சொல்லியே ஏந்தும் பழக்கம். எந்தப்பாடலுக்கும் நான் சொற்களுக்காக காத்திருப்பதில்லை. கொஞ்சமே கொஞ்சம் பழைய காலத்தை நினைத்துக்கொள்வேன். பக்கத்தில் இருப்பவரை பார்ப்பேன். அவர்கள் உதிர்க்கும் சொற்களில் இருந்தே பல்லவியோ சரணமோ எழுதுவேன். ஒரே ஒரு நிபந்தனைதான். குறைந்தபட்சம் எனக்காவது சில வரிகள் பிடிக்கவேண்டும். 

இந்தப்பாட்டில் எல்லாவரிகளும் எனக்குப் பிடித்தன. ஏனெனில், இதுவே நம் அனைவரின் கனவும் வாழ்க்கையும். இல்லாமையில் நகைகளே பொய்யென்று சொல்லிவந்த என் அம்மாவுக்கு, இப்பாடலில் கிடைத்த பணத்தில் தங்கச் சங்கிலி வாங்கிக்கொடுத்தேன். இப்போது அது என் மகளின் கழுத்தில் மின்னிக்கொண்டிருக்கிறது. விட்டுத்தருவதும் விடாமல் தருவதுமே அன்பு. துணையாய்ச் சேர்ந்திருந்தால் நள்ளிரவில் வெள்ளிவரும். அத்தனை இயலாமைகளுடனும் எதிர்பார்ப்புகளுடனும்தான் ஒருநாள் கழிகிறது இல்லையா?

No comments: