Wednesday, August 05, 2020

ஒருபாட்டு, கொஞ்சம் பின்னணி



கனாக் கண்டேனடி தோழி

சிநேகப் புன்னகைகளைச் சேகரித்து வைத்திருக்கிறேன். ஒன்றிரண்டல்ல, ஒருநூறுக்கும் மேலென்பது உத்தேசக் கணக்கு. களங்கமும் கபடமுமற்ற புன்னகைகளால் ஈர்க்கமுடியாதததை திட்டத்தாலும் சட்டத்தாலும் வயப்படுத்த எண்ணுவது வழுக்குப் பாறை. இரண்டாயிரத்தில் பாடலெழுத வந்தபோது அறிமுகமில்லாத ஓர் இயக்குநர், என் எல்லா நல்லதுகளிலும் நம்பிக்கைகளிலும் பங்கெடுக்கிறாரெனில், அது புன்னைகையால் விளைந்த முகூர்த்தம். 

எல்லோருக்கும் சிரிக்கத் தெரியும். சிநேகிப்பதில் கரு. பழனியப்பன் திரையற்றவர். எவர்மீதும் விமர்சனக் கத்தியை வீசுவார். அதேசயம், அன்பாளன். வாசிப்பின் வழியே தனக்குப்பட்டதைச் சொல்லுவார். தவறெனில் திருத்திக்கொள்ளவும் தயங்கியதில்லை.`பார்த்திபன் கனவு’ திரைப்படத்திற்கு எழுத அழைத்தபோது `நல்லா எழுதுறீங்க. ஆனா, பாட்ட இலக்கியமாக்கப் போராடுறது தெரியுது. அது, தேவையா? கண்ணதாசனைப்போல இயல்பா எழுதலாமே’ என்றார். 
எப்படி என்றதற்கு `நான் பேச நினைப்பதெல்லாம்’ பாடலை உதாரணப்படுத்தினார்.

அதுவரை எளிமை என்பதன் பொருள் என் சிந்தைக்கு எட்டவில்லை. தீவிர இலக்கிய வாசிப்பினால் அதீத புனைவையே திரைப்பாட்டிலும் எழுதிவிடும் ஆர்வம் அப்போதிருந்தது. திரைவெளியின் பங்குதாரர்கள் சராசரி ஜனங்களென தெரியவில்லை. முட்டையும் மூர்க்கமும் உடைபட்ட தருணமது. ஒருவர், முன்னிழுக்கிறாரா பின்னிழுக்கிறாரா எனும் தெளிதல் எனக்குண்டு. 

`கனவு காணவே வழியில்லாத ஒருவன். தனக்கு வரப்போகிறவளைக் கனவு காண்கிறான். இதுவே சூழல் எழுதுங்கள்’ என்றார். `என்னை எளிமையாக எழுத எச்சரித்துவிட்டு, சிக்கலைச் சூழலாகச் சொல்லுகிறீர்களே’ என்றேன். காதல் பிசாசு வெற்றியில் திளைத்திருந்த வித்யாசாகர், வழக்கமற்ற புன்னகையை வாரி வழங்கினார். கனவு என்றதுமே ஆண்டாளின் `நாச்சியார் திருமொழி’ நினைவுக்கு வந்தது. வாரணமாயிரம் பாசுரத்தின் இறுதிவரி `கனாக் கண்டேனடி’ என வரும். அதைப் பல்லவியாக்காலாமா’ என்றேன். வித்யாசாகரும் பழனியப்பனும் தமிழ்ப்பிரியர்கள். அபாரம். `மேலே எழுத சந்தம் தரட்டுமா’ என்றனர்.

தமிழில் ஒழுங்குச் சந்தங்கள் பல உண்டு. தனிப்பாடல்கள் பலவும் அந்த வகையில் அமைந்தவை. அறுசீர், எண்சீர் விருத்தம்போல எழுத லெகுவாகத் தோன்றும். எழுதும்போதுதான் பிரச்சனை. குறிலிணைச் சொற்களாக வந்த அம்மெட்டிற்கு,`உன் விழிமுதல் மொழிவரை / முழுவதும் கவிதைகள் / அகமெது, புறமெது / புரிந்தது போலே’ என்றேன். இருவரின் கண்களும் மின்னின.
அடுத்தடுத்த வரிகள் தாமே அமைந்தன. வித்யாசாகர், மெட்டின் இறுதியை பல்லவியின் முதல் வார்த்தையுடன் கொண்டுவந்து இணைப்பதில் எனக்குத் தெரிந்த கே.வி.மகாதேவன். அட்சரம்பிசகாமல் எழுத தோதாகவே சந்ததங்களைத் தருவார். நான் பேச நினைப்பதெல்லாம் பாடலையே கொஞ்சம் உள்வாங்கி `எதையோ என் வாய் சொல்லத் தொடங்க’ என்று ஆரம்பித்தேன்.

ஆறே வார்த்தையில் கண்ணதாசன் எழுதியதற்குப் பத்து வார்த்தையில் பதவுரை எழுதினேன். மேலும், அவர் நிலத்தில் என்னை நிழலாக உருவகித்து, `ஒரு கண்ணில் அமுதம், மறுகண்ணில் அமிலம்’ என்று நீட்டினேன். யாப்பிலக்கணக்கனப் பயிற்சியளித்த புலவர் செல்லகணேசனை மறப்பதற்கில்லை.கனாக் கண்டேனடி என்று தொடங்கியதால், ஆண்டாளின் பாசுரம் ஒன்றையேனும் எடுத்தாள எண்ணினேன். எட்டாம் நூற்றாண்டுத் தமிழ், எதார்த்தத்திலும் பொருந்த `கொடியினில் காய்கிற சுடிதார் எடுத்து / மடிக்கிற சாக்கில் வாசனைப் பிடித்து / மூச்சிலுன்னைச் சொட்டச் சொட்ட / நான் கண்டேன்’ என எழுதிக் காண்பித்தேன். உலர்ந்த துணியிலும் காதல் சொட்டுவதாகச் சொன்னது என் ரசனை. அன்பையும் காதலையும் பர்வெர்ஷனாகப் பார்க்கிறவர்கள் இல்லாமலில்லை.

பழனியப்பனுக்கு ஆண்டாளின் `பெருமான் அரையிற் பீதக / வண்ண ஆடை கொண்டு என்னை / வாட்டம் தணிய வீசிரே’ என்ற பாசுரம் தெரிந்திருந்தது. `ஆண்டாள், கண்ணன் உடுத்திய ஆடையையே கேட்டாள். நீங்களோ துவைத்த ஆடையைச் சொல்றீர்கள். அழகுதான். சுடிதார் என்றிருப்பதால் புரிந்துவிடும்’ என்றபடி மூக்குக் கண்ணாடியைக் கழற்றித் துடைத்தார்.
ஆடை, அரசியலுக்கு மட்டுமல்ல காதலுக்கும் உரியது. அதைத் துல்லியமாக விளங்கிக்கொண்ட இருபெரும் இந்தியத் தலைவர்கள் இப்போது இல்லை. `கூச்சம் என்னை நெட்டித் தள்ள’ என்றதை வித்யாசாகர் வியந்தார். கூச்சம் வேறு. வெட்கம்வேறு. வெட்கமுள்ளவர்கள் தொடர்ந்து குற்றம் செய்வதில்லை. அத்துடன், ஆதித் தமிழ்ச் சமூகத்தில் குற்றமற்ற காதல் புகழுக்குரியது.

கூச்சமெனும் சொல் பதின்மத்தை வெளிப்படுத்துவது. அச்சொல்லை ஆண்,பெண் இருவருக்கும் பொருத்தலாம். மானமும் அறிவும் மனிதர்க்கு முக்கியம். கூச்சமோ கூடுதல் வசீகரம். `நிறமில்லா உலகம் கண்டேன் / நிறமெல்லாம் உன்னில் கண்டேன்’ என்றதும், கனவு ஈடேறிய உணர்வுக் கிடைத்தது. எங்கெங்கோ தேடித்தேடி எங்கேனும் கிடைத்துவிடாதா என்றேங்குவதுதானே மனிதமனம்?

இப்பாட்டில் எழுதாத சொற்களின் அர்த்தங்களைக் கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் சொல்லக்கூடும். நினைப்பதைச் சொல்வதற்கு மொழியெதற்கு? நிதானமும் நீங்காத நினைவுகளுமே சாட்சி. சிநேகத்தைப் பிரதிபலிக்கும் புன்னகைகளே பார்த்திபர்களின் கனவு. எனக்குப் பகலிலும் கனவுகாணும் பழக்கமுண்டு. எனக்கு மட்டுமா? 

1 comment:

Muthu said...

ஆகா! எனக்கு மிகப் பிடித்த பாடல் இது அண்ணா, பாடல் பின்னணியைப் படித்து மேலும் மகிழ்ந்தேன். உங்களுடைய இலக்கிய நயத்தைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். உங்களுடைய "என் அன்பே நானும் நீயின்றி நான் இல்லை" பாடல் வரியின் இலக்கியச் சிறப்பைப் பற்றி ஒரு வலைப்பூ எழுதி இருக்கிறேன். பார்த்து உங்கள் கருத்தைத் தெரிவித்தால் உவகையுறுவேன்:

http://muthusblog.blogspot.com/2020/12/blog-post_6.html?m=1