Thursday, June 10, 2021

லாகிரியான காலநிலை

ஷர்மிளா தாகூரும் ராஜேஷ் கண்ணாவும் இணைந்து நடித்த `ஆராதனா’ திரைப்படத்தை இந்திய திரைரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. 1969இல் வெளிவந்த அத்திரைப்படத்தை தமிழில் `சிவகாமி செல்வன்’ என்னும் தலைப்பில் எடுத்திருக்கின்றனர். சிவாஜியும் வாணிஸ்ரீயும் நடித்தது. 

கதையும் காட்சிகளும் அதுவே எனினும், பாடலும் இசையும் புதிதாகச் செய்திருக்கின்றனர். ஆராதனா பாடலை ஆனந்த பக்க்ஷி எழுதியிருக்கிறார். தமிழல், புலவர் புலமைப்பித்தன். ஒரே சுழலுக்கு இரு கவிஞர்களும் வெவ்வேறு மாதிரி சிந்தித்திருக்கிறார்கள். இரண்டு பாடல்களையும் பின்னூட்டத்தில் இணைத்திருக்கிறேன். 

எஸ்.டி.பர்மனின் இசைக்குச் சற்றும் குறைவில்லாத வகையில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தாலும், பாடலைக் காட்சிப்படுத்தியவிதம் அத்தனை ரசிப்புக்குரியதாக எனக்குப் படவில்லை.  காதல் பாடலில் தென்படவேண்டிய உடல்மொழி, உக்கிரப்பட்டிருப்பதன் பின்னணியில் என்னச் சிக்கலோ?  

ரூப்பு ஹேரா மஸ்தானா பாடல், அறுபதுகளில் பட்டித் தொட்டியெல்லாம் கேட்ட காலத்தில் இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன், அந்த மெட்டை உள்வாங்கி, `லூப்பு தரான் சரிதானா / மாட்டலன்னா விடுறானா’ என்றெழுதி கம்யூனிஸ்ட் மேடைகளில் பாடியிருக்கிறார். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த அரசு கொண்டுவந்த கருத்தடை சாதனத்தைக் கண்டித்தும் கிண்டலடித்தும் பாடிய அப்பாடல், அப்போதே பல சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன. 

`பார்த்தீர்களா கம்யூனிஸ்ட்டுகள் எப்போதுமே இப்படித்தான்’ என இனியும்கூட இவ்விவாதத்தைத் தொடர ஏப்ப சாப்பைகள் எழுந்துவரலாம். மக்களைத் தொகையைக் கட்டுப்படுத்தியதால்தான் ஜி.எஸ்.டி.மூலம் வரவேண்டிய பங்குத்தொகை குறைந்ததென உ.பி.யை வேறு சிலர் உதாரணம் காட்டலாம்.

பாவலரின் நோக்கமும் அப்போதைய புரிதலும் என்னவென்பதைக் காலத்தின் கைகளுக்கு விட்டுவிடலாம். இப்பாடலில், `லாகிரியான காலநிலை என்ற இந்திப் பதமும், `உதட்டுக் கனிக்குள் இருக்கும் சிவப்பு’ என்ற தமிழ்ப் பதமும் கவனிக்க வைப்பவை. இப்பாடலை நினைவூட்டிய ஆசிப் மீரானுக்கும் மொழிபெயர்த்த லதாவுக்கும் நன்றி. 

சி.வி. ராஜேந்திரன் போன்ற இயக்குநர்களால் சிவாஜியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியுமென்றா  நினைக்கிறார்கள்?

ரூப்புத் ஹேரா மஸ்தானா பாடலின் தமிழாக்கம்:

உன் வடிவம் மயக்கக் கூடியது
என் காதல் பித்தானது
தவறு ஏதும் நிகழக் கூடாது
நம்மால்

போதையூட்டும் இரவு, சுகமான சூழல்
இந்த இடம் பூராவும் போதையில் உள்ளது
இந்த லாகிரியான காலநிலை 
மேலும் கிளர்ச்சியூட்டுகிறது

கண்ணும் கண்ணும் 
எப்படிச் சந்தித்துக் கொள்கின்றனவென்றால்
புயலில் சிக்கித் தவிப்பவர்களைப் போல
அலைகள் கரையுடன் மோதுவதைப் போல 
இந்த உலகம் நம்மைத் தடுக்கிறது

தூரத்திலேயே  இரு அருகில் வராதே
ஆனால் இந்த மனதுக்கு எப்படி 
இதைப் புரிய வைப்பது? 

மூலம்: ஆனந்த பக்‌ஷி
தமிழில்: எழுத்தாளர் லதா

சிவகாமியின் செல்வன் திரைப்படத்தில்
இடம்பெற்ற பாடலின் வரிகள்
:

எத்தனை அழகு கொட்டிக்கிடக்குது
எப்படி மனதை தட்டிப்பறிக்குது
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
அங்கங்கே இளமையும் துடிக்குது

தினம் வந்து கொஞ்சும் மலர் கொண்ட மஞ்சம்
இதழ் கேட்கும் நெஞ்சம் இருந்தாலும் அஞ்சும்
அம்மம்மா உடலெங்கும் சிலிர்க்குது
ஆனாலும் அச்சம்தான் தடுக்குது

உதட்டுக் கனிக்குள் இருக்கும் சிவப்பு
விழிக்குள் நடக்கும் விருந்தைப் படைக்கும்
செந்தாழம்பூ மலரவும் சிந்தாமல் தேன் பருகவும்
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும் .

அணைத்து சுவைக்கும் நினைப்பில் துடிக்கும்
மனத்தில் நடுக்கம் விலக்கித் தடுக்கும்
பெண் பாவைதான் கனிரசம் கண்பார்வைதான் மதுரசம்
ஒரே சுகம் தினம் தினம் வரும் வரும்

- புலவர் புலமைப்பித்தன்


No comments: