Tuesday, June 15, 2021

ஜனநாதனின் ஆஸ்பிரின் மாத்திரை

லக்கியத்தை அரசியல் அக்கறைகளின் ஊடகமாகக் கருதிய இலத்தீன் அமெரிக்கப் படைப்பாளர்களை எனக்குப் பிடிக்கும். அவர்களின் படைப்புகளை ஊன்றிப் படித்து உத்வேகம் பெற்றிருக்கிறேன். அதிலும், போராளிக் கவிஞன் ரோக் டால்டனின் கவிதையென்றால் எனக்கு உயிருக்குமேல். களத்தில் நிற்கும் ஒரு கவிஞனின் இதயம், காதலாலும் கனிந்திருக்குமா? என்ற கேள்விக்கு, அவர் கவிதைகளே அத்தாட்சிகளாக விளங்குபவை. அவர் எழுதிய ‘கம்யூனிசம் என்பது / சூரியன் அளவுகொண்ட ஒரு ஆஸ்பிரின் மாத்திரை’ எனும் கவிதையை அவ்வப்போது நினைப்பதுண்டு. அதே கவிதையின் முதல்வரி, ‘உன்னைப்போலவே நானும் வாழ்க்கையை நேசிக்கிறேன்’ என்றிருக்கும். 

து.ரவிக்குமார் மொழிபெயர்த்த அக்கவிதை, தொண்ணூறுகளின் இறுதியில் அறிமுகம். வாழ்க்கையை நேசிப்பவனே போராளியாகிறான். போராளியின் நேசமே விடுதலைக்கான வித்து. இயக்குநரும் தோழருமான எஸ்.பி.ஜனநாதனின் முகமும் ரோக் டால்டனை நிகர்த்ததாக எனக்குத் தோன்றும். உள்ளத்தில் வலியவர். உருவத்திலும் உதிர்க்கும் சொற்களிலும் மெலிதிலும் மெலிய தன்மையுடையவர்.

இடது சிந்தனைகளின் வழியே படைப்பூக்க மனநிலையைப் பற்றிக்கொண்டவர். மக்கள் கலை இலக்கியத்தைச் சித்தாந்தச் செறிவுடனும் வெளிப்படுத்த விரும்பியவர். உலகமயமாக்கலுக்குப் பின்னான காப்பரேட் காட்டுமிராண்டிகளின் அச்சுறுத்தலைத் துளியும் தயங்காமல் திரையில் தோலுரித்துக் காட்டியவர். தோழமையில் தொக்கிய அன்பைக் காணும் போதெல்லாம் கண்களால் கடத்தியவர். காணும் கண்களுக்கு மட்டுமல்ல, தன்னைக் காணாத கண்களுக்கும் கடத்தியவர் எனில் இன்னும் பொருத்தம். 

நூறாண்டுக்காலத் தமிழ்ச் சினிமா அவர் நுழைவிற்குப் பின்னால் முழுமையான மாற்றங்களைக் கண்டுவிடவில்லை. ஆனால், அவரால் சிறுசிறு பொறிகளையும் கங்குகளையும் உண்டாக்க முடிந்தது. வாஞ்சை நிரம்பிய அவருடைய அணுகுதலில் பலமுறை வசமிழந்திருக்கிறேன். வணிக சினிமாவிலும் இப்படி ஒருவரா என வியந்த தருணங்கள் ஒன்றிரண்டல்ல. ‘இலட்சியவாதிகளுக்குக் காதல் வருமா?’ என்று அவரிடமும் ஒருதரம் கேட்டிருக்கிறேன். ‘காதல் வரவில்லையெனில் அவன் இலட்சியவாதியே இல்லையே’ எனச் சிரித்துபடி சிகரெட்டை உள்ளிழுத்துப் புன்னகையைப் புகையில் மறைத்திருக்கிறார். 

‘லாபம்’ திரைப்படத்தின் ‘யாழா யாழா’ பாடல், அந்த உரையாடல்களின் நீட்சியே. ஜனாவுக்குப் பட்டுக்கோட்டையாரை அவ்வளவு பிடிக்கும். ஒரு பாடலாசிரியன் பற்றி நடக்கவேண்டியப் பாதை அவருடையதே என்பார். இமான் மெட்டளந்து கொடுத்ததும் ‘பாடல் எப்படி அமையலாம்’ என்றேன். ‘உங்களை எனக்கும் என்னை உங்களுக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியுமே, இதற்குப் பிறகும் சொல்ல என்னயிருக்கிறது’ என்றார். 

அதீத நம்பிக்கைகளே அன்பைப் பதற்றமடைய வைப்பவை. அளவில்லாத சுதந்திரமும்கூட சிலவேளைகளில் அச்சத்தைப் பெருக்கிவிடும். ‘எதையும் சொல்வதற்கில்லை எழுதுங்கள்’ என்றார். கதைப்படி, புகழ்வாய்ந்த பாடகி ஒருத்தியின் காதலென்பதால் ‘யாழா யாழா காதல் யாழா / நாளும் என்னை மீட்டு தோழா / உயிர் ஓயாமல் நீ கோக்கும் ராகங்கள் / நீளும் நீளும் வாழ்நாளா’ என்றதும் இமான், அவ்வரிகள் தனக்கே எழுதப்படுகின்றன என்பதை உணர்ந்து முறுவலித்தார். தோழா என்ற சொல், ஜனாவுக்கு மகிழ்வளித்தது. 

பொதுவாகத் திரை இயக்குநரைகளை ‘சார்’ என அழைக்கும் நான், ஜனாவை தோழர் என்றே விளிப்பேன். என்னிலும் இருபது வயது மூத்தவர். என்னைவிடவும் இளையவர்களே அவர் தோழர்கள். அந்த அழைப்பும் அரவணைப்பும் அவரால் விளைந்தவை. கடிந்துகொள்வதிலும் அவரிடம் வெளிப்படும் பக்குவம் இருக்கிறதே அது, கம்யூனிசம் அவருக்குக் கற்பித்தது. 

அவருக்கும் எனக்குமான உறவு வணிக சினிமாவின் எல்லைக்கு அப்பால் விரிவது. பாடகியின் பார்வையில் பாடல் அமைவதால் ‘கடவுளுமே கேக்காத / தமிழிசையும் நீதானே / கதிரொலியும் காட்டாத / விடியலை காட்டும் உன்னைச் சேர்ந்தேன் நானே நானே’ என்ற வரிகளைக் கேட்டவுடனே ‘தண்டபாணி தேசிகரின் தமிழிசைப் புரட்சியைத் தானே சொல்கிறீர்கள், அபாரம்’ என்றார். ‘தமிழில் பாடியதால் மேடையே களங்கப்பட்டதாகக் கருதிய சங்கீத சனாதனக் கும்பலை இரண்டே வரிகளில் எழுதிவிட்டீர்களே’ என்றும் அவர் புருவமுயர்த்திய அழகே அழகு. 

கதிரொலி, விடியல், தமிழிசை, யாழ், வாழ்நாள் என்றெல்லாம் எழுதியுள்ளதால் சரணத்தை அண்ணாவின் எதையும் தாங்கும் இதயத்தை முன்வைத்து எழுத யோசித்தேன். கலைஞர் அண்ணாவிற்கு எழுதிய இரங்கற்பாவில் ‘எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாயே அண்ணா / இதையும் தாங்க எமக்கேது இதயம்’ என்றிருப்பார். 

அதைச் சற்றே உள்வாங்கி அல்லது உருமாற்றி ‘எதையும் தரும் நான் / இதயம் தரவாமாட்டேன் / உயிரின் நடுவே / உனை நான் விதையாய் போட்டேன் / மகிழ்வான நேரம் ஒன்றே தெரியாமல் முன் வாழ்ந்தேன் / புயலே உன் பார்வை தொட்ட நொடி நானும் மல்லாந்தேன்’ என்றாக்கினேன். ‘எதையும் தரும்நான் இதயம் தரவா மாட்டேன்’ என்றதும், ‘கதாபாத்திரச் சித்திரிப்பை இதைத்தாண்டியும் வெளிப்படையாக்குவதில் சிக்கலிருக்கிறதுதானே’ என்றார். ‘மகிழ்வான நேரம் ஒன்றே தெரியாமல் முன்வாழ்ந்தேன் என்பதில் காதல் உருகி ஓடுதே’ என்று இமானும் துணை இயக்குநர் ஆலயமணியும் ஒருசேரக் கனிந்தனர். முன்வாழ்ந்தேன் என்பதற்கு மல்லாந்தேன் எனும் இயைபைப் பாடிப்பாடி பரவசப்பட்ட இமான், முன்பின்னாக இருந்தால் எப்படி இருக்குமென்றும் யோசிக்காமலில்லை. 

அர்த்தங்களும் தொடர்ச்சியுமே ஒரு பாடலை ரசிக்கத் தக்கதாக மாற்றுகின்றன. எதுவுமில்லாமல் வாழ்ந்த எனக்குள் எத்தனையோ நல்லபல மாற்றங்களைக் காதலும் கவிதைகளும் வழங்கியுள்ளன. நான் அறிந்தும் அறியாமலும் எழுதியுள்ள பல வரிகளில் என்னை ஓரளவு ஊகிக்கலாம். என் பின்புலமும் அரசியலும் காதல் பாடல்களில்கூட தென்படுவதாக நெருங்கிய நண்பர்கள் சொல்வர் அல்லது அவ்விதம் சொல்பவர்களே என் நண்பர்கள். 

ஜனாவும் இமானும் இப்பாடலில் என்னென்ன எழுதுவேனோ எனப் பார்த்திருக்க ‘நரை விழும்வரை வாழ்ந்தே தீர்ப்போம் நாளை / இருப்பதை பகிர்ந்தாலே யார்தான் ஏழை’ என்றதும் ஜனாவின் உதட்டிலிருந்து முகிழ்த்த தோழமைக்குச் செவ்வணக்கம். ஏழை பணக்காரனென்னும் பாகுபாடுகளை ஒழிக்கும் வர்க்கப்போரை வார்த்தைகளிலாவது நிகழ்த்துகிறோமே என்கிற திருப்தி ஒருபுறம் இருந்தாலும், களச்செயல்பாடுகளில் கலந்துகொள்ள வழியில்லையே என்னும் துக்கம் தொண்டையை அடைக்காமலில்லை. நானே முன்பு ஒருமுறை ‘டியர் காம்ரேட்’ கவிதையில் கம்யூனிஸ்டுகளை விமர்சித்திருக்கிறேன். 

துடுக்குத்தனம் மட்டுமே நிறைந்திருந்த பதினேழு பதினெட்டுவயதில் எழுதிய அக்கவிதை என் அறியாமையின் அகம்பாவம். இன்றும் அந்தக் கவிதைக்காக என்னை நான் வருத்திக்கொள்கிறேன். ‘இருப்பதைப் பகிர்ந்துகொண்டால் யார்தான் ஏழை’ என்பதன் மூலம் பட்டுக்கோட்டையாரின் ‘காடு வௌஞ்சென்ன மச்சான்’ பாடலில் உள்ளது. ‘நாம் தேடிய செல்வங்கள் வேறோர் இடத்தினில் சேர்வதனால் வரும் தொல்லையடி’ என்று ‘அவர் எழுதியதை இப்படியும் சொல்லலாமா என ஜனநாதன் கேட்டார். 

கேட்ட மாத்திரத்தில் அவரே எதிர்பாராத சிரிப்பொன்றும் அவர் இதழ்க்கடையில் இடம்பெற்றது. மீண்டும் காம்ரேட்டாக நான் மாறிக்கொண்டிருப்பதை உத்தேசித்தே அச்சிரிப்பு அரும்பியிருக்கலாம்.  வரிகளின் திசை வேறு எங்கோ போவதாகப் படவே மீண்டும் ஜனாவுக்குச் சொல்வதுபோல ‘பதறாதே நீ / உனை படைபோலக் காத்திடுவேன் / பித்து பிடித்திட / முத்தம் கொடுத்திடு / கொட்டிடும் என்னை நீ / அள்ளி எடுத்திட்டு’ என்றேன். ‘பித்தம் தெளியத்தானே முத்தம், இதென்ன பித்துபிடிக்கும்படியான முத்தம்’ என்றீர்கள் என இமான் நக்கலித்ததை உள்ளுக்குள் ரசித்தேன். 

பாடலை சுருதிஹாசன் பாடுவதாகச் சொன்னதும் வரிகளின் ஊடே விரவியிருந்த காதலின் ஓட்டங்களை ஒருமுறைக்கு இருமுறை உற்று நோக்கினேன். பெண்குரலில் வெளிப்படும் பாடல்களை எழுதும்பொழுது சராசரியான தன்மையிலிருந்து கொஞ்சமேனும் ஜாக்கிரதை கொள்வேன். ஏனெனில், பெண்ணின் உணர்வை ஆண் பார்வையில் எழுதி ஏற்கெனவே சங்கடப்பட்ட சம்பவங்களைப் பல பாடலாசிரியர்களுக்கு உண்டு. 

எனக்கு அப்படியான அசம்பாவிதங்கள் நிகழவில்லை எனினும் நிதானித்துக்கொண்டேன். ‘பித்தா பிறை சூடீ பெருமானே அருளாளா / எத்தால் மறவாதே நினைக்கின்றேன்? / மனத்து உன்னை வைத்தாய்; பெண்ணைத் தென்பால் / வெண்ணெய் நல்லூர்’ அருள் என்ற சுந்தரரின் வரிகள் அந்த நேரத்தில் நினைவுக்கு வந்துபோயின. சுந்தரர் தாலிகட்டும்போது திருமணத்தை நிறுத்திய அந்தணரின் சொற்களும் அடிமை சாசனமும் ‘மனத்து உன்னை வைத்தாய்’ என்பதாக விரிந்தன. பாடலில் பெண்ணை என வரும்சொல், பெண்ணையாற்றைக் குறிப்பது. பெண்ணைத் தென்பால் என்பதை பெண்ணைக் குறிப்பதாகவும் பொருள் கொள்வது தனி ருசி. 

அத்துடன், `எத்தாற் பிழைப்பேனோ எந்தையே நின்னருட்கே /பித்தானேன் மெத்தவுநான் பேதை பராபரமே‘ என்ற தாயுமானவரையும் நினைத்துக்கொண்டேன். பொதுவுடைமைக் கட்சித் தலைவரான ஜீவா, இவ்விதமான ஆன்மீகக் காதல்குறித்து நிறைய எழுதியிருக்கிறார். மக்கள் புரட்சியை முன்னெடுக்கும் இலட்சியவாதியாக இருந்த அவருள்ளும் காதலென்னும் மனப்புரட்சிக்கு இடமிருந்தது. 

கம்பனையும் வள்ளலாரையும் அவர் விழிகளே எனக்குக் காட்டின. ரோக் டால்டன், ‘ஜூலியா கொத்தசாருக்கு’ என்னும் கவிதையில்’ஊசி முனையில் / தனிமையில் அமர்ந்திருக்கும் தேவதை / யாரோ ஒருவர் / மூத்திரம் பெய்வதைக் கேட்கிறாள்’ என்ற வரிகள், என்னை அடிக்கொருதரம் அதிர்ச்சியடைய வைக்கும். ‘தனிமையில் அமர்ந்திருக்கும் தேவதை’ எனும் சொல்லாட்சிக்காக அக்கவிதையைப் பெயர்த்தளித்த யமுனாவையும் உதயக்குமாரையும் பாராட்டுவேன். 

அமைதியை ஊடறுக்கும் மூத்திர ஓசை தேவதையின் காதுகளில் விழுவதாக எழுத ரோக் டால்டனால் மட்டுமே முடியும். இப்பாடலில் காட்சியின் ஊடே கதாநாயகி அசைவத்துண்டுகளைக் கடித்துத் தின்பதாக ஜனா காட்டியிருக்கிறார். ஆண்களுக்கு மட்டுமே அப்படியான காட்சிப்பதிவுகளைப் பாடல்களில் வைப்பவர். உண்பதிலும் உடுத்துவதிலும்கூட ஒருவித மரபைப் பேணும் சினிமாவில், மனதில் தோன்றுவதைத் தயக்கமின்றி வெளிப்படுத்தும் திராணி ஜனாவுக்குண்டு. 

ஆணுக்குச் சமமே பெண்ணென வெளியே பேசிவிட்டுப் படைப்புகளில் கட்டுப்பெட்டியாக வாழாத கவனம் அவருடையது. புரட்சிகரச் சிந்தனைகளின் வழியே காதலைப் பார்ப்பதில் அலாதியான இன்பமுண்டு. பெரும் கொடையாகக் கிடைத்த வாழ்வை வெல்ல இரண்டு தேவைப்படுகிறது. ஒன்று, கலை இலக்கியம். மற்றொன்று, காதல். கலைஇலக்கியக் காதலல்லாமல் போராட்டமில்லையென்று ஜனாவுக்குத் தெரியும். என் நூல் வெளியீட்டில் தன்னை மிகமிகச் சாதாரணனாகவும் சாராயம் விற்வனாகவும் தாழ்த்திக்கொண்டார். 

மக்களில் ஒருவனே தானென்னும் எண்ணம் அவருடையது. எங்கேயும் அந்த எண்ணத்தை விட்டுத்தர அவர் விரும்பியதில்லை. ஆட்சி அதிகார கித்தாப்புகளுக்கு மயங்கியோ மனம் கலங்கியோ ஒரு படைப்பையும் அவர் செய்ததில்லை. தெளிந்த நீரோடையில் தடுமாற்றமில்லாத தெப்பமே அவர் திரைப்படங்கள். வெற்றி தோல்விகளுக்கு அப்பாலும் அவர் சிந்தித்த திரைக்கதைகளில் பேராண்மையும் ஈயும் முக்கியமானவை. தனக்குக் கிடைத்த வாய்ப்புகளே தன்னை உயர்த்தின என மேடைதோறும் முழங்கிய உண்மையே ஜனா. எம்.ஜி.ஆர்.,ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட லாட்டரி சீட்டு முதன்முதலில் ஜனாவின் அண்ணனுக்கே விழுந்தது. அதன்மூலம் ‘ஒரேநாளில் எங்கள் குடும்பம் பணக்காரக் குடும்பமாக ஆகியது’ எனச் சொல்லிய அவர், ‘அந்த அதிர்ஷ்டம் எல்லா ஏழைகளுக்கும் கிடைக்குமா’ என்று ஆதங்கப்படாத நாளில்லை. 

ஒரு புரட்சிக்காரன் அதிர்ஷ்டத்தை நம்பிக்கொண்டிருக்க மாட்டான். மாறாக, அதன் சாத்தியங்களுக்காக உழைக்கத் தொடங்குவான். உதிரிகளும் உபரிகளும் உண்டாக்க முடியாத புரட்சிகர சிந்தனைகளை ஒரு நல்ல திரைப்படத்தால் நிகழ்த்தமுடியும். ‘நானும் நம்புகிறேன் / இந்த உலகம் அழகானது / ரொட்டியைப் போல / கவிதையும் எல்லோருக்கும் உரியது’ என்ற ரோக் டால்டன் என்னிலிருந்தும் வெளிபடவே ஏங்குகிறேன். கருத்தியலின் பலத்தில் வீசப்படும் கல், காலத்தின் காம்பிலுள்ள கனிகளைக் கொய்துவரும். ஆஸ்பிரின் மாத்திரை இதயத்திற்கு நல்லதில்லையென சமீபத்திய மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. ரோக் டால்டனும் ஜனாவும் கிடைத்த பிறகு ஆஸ்பிரின்கள் எதற்கென்றுதான் நானும் கேட்கிறேன்? 
No comments: