Tuesday, June 15, 2021

கோடிடாத இடங்களையும் நிரப்புதல்

மூகப் படிநிலைகளுக்கு ஏற்பவே காதலும் நிகழ்கிறது. சேரி, ஊர், நகரம், மாநகரம் என வசிப்பிடங்களுக்குப் பெயர் வைத்திருக்கிறோம். ஆனால், இவை அனைத்துமே ஒரே தரத்திலோ ஒரே வர்க்கத்தினாலே கட்டமைக்கப்படவில்லை. குழுவாக வாழத்தொடங்கிய மனிதன், மற்றொரு குழுவைத் தாழ்த்தியோ உயர்த்தியோ பார்க்க எண்ணிய நொடியிலிருந்தே அரசியலும் ஆட்டமும் ஆரம்பிக்கின்றன. சொற்களைத் திரைப்பாடல்களுக்குப் பயன்படுத்தும்பொழுது இந்த வேறுபாடுகளை உற்றுணராமல் எழுதுவது சாத்தியமில்லை. 
கவித்துவத்தின் கனபரிமாணம், ஒருமொழியைப் பேசும் மக்களின் உதட்டிலும் மனத்திலும் இருந்தே உருவாகிறது. ‘ரம்மி’ திரைப்பட இயக்குநர் ஆர்.பாலகிருஷ்ணன், என் முதல் திரைப்பாடலான ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் வெளிவர உதவியவர். தயாரிப்பாளரும் இயக்குநரும் தயங்கிய நிலையில் உதவித் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவராக இருந்த அவரே நம்பிக்கையளித்தவர். பதினெட்டு வருடத்திற்குப் பின் அவருமே இயக்குநராக அவதாரமெடுப்பாரென்று நான் நினைக்கவில்லை. 

சினிமாவில் எப்போது, யார், எவ்விதமான உயரங்களை எட்டுவார்களெனச் சொல்வதற்கில்லை. கதையையும் சூழலையும் விளக்குவதில் அவருக்குச் சிரமமிருந்தது. சைக்கிளில் தட்டுக்கூடையை வைத்துக்கொண்டு அக்காவுடன் கதாநாயகி பயணிக்கிறாள் என்று மட்டுமே விவரித்தார். பாடலில் ‘கூடை’ எனும்சொல் இடம்பெற்றால் மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டார். ‘கூடையில கருவாடு / கூந்தலுல பூக்காடு’ மாதிரியா என்று இமான் கேட்டபோது நானும் சிரித்தேன். 

அத்துடன், ‘காட்சியையே சூழலாகவும் காதலாகவும் மாற்றி எழுதுங்கள்’ என்றார். அவர்கள் போவதைப் பார்க்கும் கதாநாயகன் ‘என்னுடன் எப்போது வரப்போகிறாய் என்பதுபோல இருந்தால் தேவலாமா’ என்றேன். கூடையை எங்கே கொண்டுபோய் கவிழ்ப்பதென அப்போதும் தீர்மானிக்கவில்லை. தமிழ்ப் பாடல்களில் எங்கெல்லாம் கூடை வருகிறதென்று ஆராய்ந்தபோது சட்டென்று, நாட்டார் பாடல்களைத் தொகுத்தளித்த காவ்யா சண்முகசுந்தரம் நினைவுக்கு வந்தார். வட்டார வழக்கிலுள்ள இலக்கிய நுணுக்கங்களை நா.வானமாமலையே முதலில் தீவிரமாக ஆராய்ந்த பெருமைக்குரியவர்.

அவர்கள் இருவருடைய தொகுதிகளிலும் இடம்பெற்றுள்ள ‘கூடமேல கூடவச்சி’ என்னும் பதமே திரைப்பாடல்களில் தென்படக் காரணம். முதலில் அப்பதத்தைத் திரைப்பாடலில் திணித்தவர் வைரமுத்து என்றே நினைக்கிறேன்.இமானின் மெட்டிற்கு இயல்பாக எழுதிவிடும் பழக்கமுள்ளதால் ‘கூடமேல கூடவச்சி / கூடலூரு போறவளே / உன்கூட கொஞ்சம் நானும் வரேன் / கூட்டிக்கிட்டுப் போனா என்ன? என்றேன். ‘இவ்வளவு கூட போதுமா? என்றதும், ‘இதற்குமேல் கூடையில் எதையாவது போடுங்கள்’ என்றார். 

நானோ கூடையுடன் வருவதையும் கூட வருவதையும் இணைத்து மேற்கொண்டு கேள்வி பதிலாக ‘ஒத்தையில நீயும் போனா அது நியாயமா / உன்னுடனே நானும் வாரேன் ஒரு ஓரமா’ என்றெழுதினேன். ‘இந்தப்பாட்டுல எல்லாரையும் கூட்டிக்கிட்டுப் போயிடலாம் போலயே’ என உற்சாகமான இமான், கருப்பு வெள்ளைக் கட்டைகளை ஆவலுடன் மீட்டினார். சுருதி பிசகாமல் மெட்டுக் கிடைத்ததும் ‘நீ வாயேன்னு சொன்னாலே / வாழ்வேனே ஆதாரமா / நீவேணான்னு சொன்னாலே / போவேன்டி சேதாரமா’ என்றேன். ‘ஆதாரம், சேதாரம் அழகோ அழகு அய்யா’ என்ற பாலகிருஷ்ணன். ‘இவ்வளவுகூட கொடுத்த உங்களுக்கு சம்பளத்தையும் கூடக் கொடுக்கணுமய்யா’ என்றார். மெட்டின் சுகம் கருதி பெண் பாடுவதாகவும் இதே வரிகளை வைக்கலாம் என்னும் யோசனையை இமான் சொன்னதும், முதலிரு வரிகளை மீட்டு ‘நீ கூட்டிகிட்டுப் போகச் சொன்னா/ என்ன சொல்லும் ஊரும் என்ன’ என்று பதிலளித்தேன். 

தாப உணர்வுகளைத் தர்க்கத்திற்கு உட்படுத்தியதும் ‘ஒத்துமையா நாமும் போக இது நேரமா / தூபக்கால தேச்சு வெச்சேன் துருவேறுமா’ என்னும் வரிகள் கிடைத்தன. சம்பந்தமில்லாமல் தூபக்கால் வருகிறதே என இயக்குநர் கேட்பதற்குள் ‘வாசனையாகப் புகையும் மனதைத் தூபக்காலெனும் சொல்லால் அலங்கரித்திருக்கிறேன்’ என்றேன். தூபக்காலோ வாசனையோ அது, பாடலாக வந்தால் சரியென்று தலையசைத்தார். தூபக்கால் துருவேறினாலும் அது வழங்கும் வாசனையில் பிழைபடுவதில்லை. 

பல்லவியின் இறுதியை ’நான் போறேன்னு சொல்லாம / வாரேனே உன் தாரமா / நீ தாயேன்னு கேட்காம தாரேனே தாராளமா’ என்றதும், ‘இந்தத் தாராளமே உங்களை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது’ என்ற இயக்குநரிடம், ‘தாராளமா கொடுத்தா நானுமே வாங்கிக்கொள்கிறேன்’ என்றேன். இது பாட்டெழுதுகிற இடமா சம்பளம் பேசும் சபையா எனப் புரியாத இமான் பேந்தப் பேந்த விழித்ததை விட்டுவிடுகிறேன். காதலும் கவிதைகளும்
உற்சாகப்படுத்தினால் உள்ளதையெல்லாம் தந்துவிடுபவை. 
இப்பாடல் பணி நடந்த அதேநாளில்தான் கும்கி திரைப்படமும் வெளியாகியிருந்தது. 

எனக்கும் இமானுக்கும் அன்றைய நாள், விலகிக்கிடந்த வெளிச்சங்கள் உள்ளத்துள் ஊடுருவிய நாள். எனவே, உத்வேகத்தின் உச்சிக்கிளையில் அமர்ந்து உலகத்தைத் தரிசிக்க ஆரம்பித்தோம். சரணத்திற்கான மெட்டை இசைத்ததும் ‘சாதத்துல கல்லப்போல / நெஞ்சுக்குள்ள நீ இருந்து / செரிக்காம சதி பண்ணுற’ என்ற முதல் வரியை எழுதியதும், ‘சீயக்காயப் போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட / உறுத்தாம உயிர்க் கொல்லுற’ என்னும் வரிகள் தன்னியல்பாக உதித்தன.

சந்தோசங்கள் பெரும்பாலும் உறுத்தாமல் உயிர்கொல்பவை. போதுமென்று நினைக்க நினைக்க பூரித்து நெகிழும் மனநிலையை விரிக்க ‘அதிகம் பேசாம / அளந்துதான் பேசி / எதுக்கு சடபின்னுற என்ற சொல்லாட்சியை வியந்த இயக்குநர், கால்களாலும் கைகளாலும் சடைப்பின்னும் செய்கையைக் காட்சிப்படுத்திக் காட்டினார்.

எனக்குப் பிடித்த ‘சுட்டுவிழிச் சுடர்தான்’ என்னும் பாடலில் முத்துக்குமார் ‘சட்டைப்பையில் உன்படம் / தொட்டுத்தொட்டு / உரச’ என்றெழுதியதை உள்வாங்கி ‘சல்லிவேர ஆணிவேராக்குற / சட்டப் பூவ வாசமா மாத்துற’ என்றாக்கினேன். ஒன்றை இன்னொன்றாக ஆக்கிப்பார்ப்பதே படைப்பூக்கம். நானும் இமானும் அன்று அணிந்திருந்த பூப்போட்ட சட்டையில் தாழமும் நாகலிங்கமும் வாசனைகளை மாறிமாறி வீசின. 

கூடவரும் பயணம் குறித்தே பாடல் சொல்வதால் கிறுகிறுப்பின் தொனி வெளிப்பட ‘நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுற’ என்று முத்தாய்ப்பு வைத்தேன். போகாத ஊருக்குப் பொய்யான வழிகளைச் சொல்லும் காதலின் றெக்கைகளில் காலம் பறக்கிறது. 
முதல் சரணத்தை செல்லும் வழியில் முடித்ததால் இரண்டாவதை ‘எங்கவேணா போயிக்க நீ / என்ன விட்டுப் போயிடாம / இருந்தாலே அதுபோதுமே’ என்று தொடங்கினேன். தன்னை நேசித்தவளோ திருமணம் செய்துகொண்டவளோ எங்கு போகவேண்டும், போகக்கூடாது என வரையறை வகுப்பவன் ஆணாதிக்கவாதி. 

கடந்துவிட்டால் நம்மைக் கைகழுவிவிடுவாளென்ற அச்சமே அவனை அவ்விதம் யோசிக்கவைக்கிறது. இப்பாடல் வெளிவந்த சமயத்தில் ஒரு பிரபலக் கவிஞர்,’ எங்கவேணா போயிக்கோன்னு ஒரு ஆண் சொல்லலாம’ என்று கேட்டார். கேட்டதுடன் நீள் பதிவொன்றையும் எழுதினார். ‘எங்கு வேண்டுமானாலும் போ’ என்றதை ‘எவருடனேனும்’ எனப் புரிந்துகொண்ட அந்த பிரகஸ்பதிக்கு விளக்கமோ பதிலோ தர வேண்டாமென என் மனைவி கூறியதை மறைக்காமல் பதிந்துவைக்கிறேன். 

கோடிட்ட இடங்களை நிரப்பும் மௌனத்தைக் குறித்து சுகுமாரன் எழுதிய ‘இன்று எனக்கு / யோசிக்க, பரிமாற, பிழைக்க மூன்று மொழிகள் தெரியும் / உபரியாக மௌனமும்’ என்ற கவிதையை இத்துடன் இணைக்கத் தோன்றுகிறது. ‘பூமியை வாசிக்கும் சிறுமி’ நூலிலுள்ள அக்கவிதையை மௌனங்களின் அர்த்தங்களாக மடைமாற்றிக்கொள்கிறேன்.

நம்பிக்கையிலும் நடவடிக்கையிலும் இருக்கவைப்பதே காதல். விருப்பமில்லையெனில் பிரிவதும், பிரியத்தை வேறு எங்கேனும் பெற்றுக்கொள்வதுமே வாழ்க்கை. எனினும், இந்த சுதந்திரக் கையளிப்பில் கருத்தோ மரமோ பிசகிவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என எழுதும்போதே இமான் சொல்லாமலில்லை. 

தொக்கிநிற்கும் ஏதோ ஒன்று, இவ்வரிகளில் கலந்துள்ளது. அதை சரிகட்டும் விதமாக ‘தண்ணியத்தான் விட்டுபுட்டு / தாமரையும் போனதுன்னா / தரமேல தலசாயுமே’ என்றும் ‘மறைஞ்சி போனாலும் / மறந்து போகாத / நெனப்புதான் சொந்தமே’ என்றும் சரிகட்டினேன். காதலை திரும்பத் திரும்பப் பரிசுகளாலும் முத்தங்களாலும் புதுக்கிக்கொள்ள ‘பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே / உன்ன பார்க்க பார்க்க தான் இன்பமே’ என்று கேள்வியும் பதிலுமாக எழுதிக்கொண்டே போனேன். அடத்தியான சூழலும் பின்னணி நிகழ்வுகளும் இல்லாத காதல் பாடலை எழுதுவதும் எப்படியென இப்பாடலே எனக்குக் கற்பித்தது. 

ஏழேழு சென்மமும் அவளுடனே, அவனுடனே என்ற எதிர்ப்பார்ப்பில் வாழ்வதை, ‘நீ பாக்காமப் போனாலே / கெடையாது மறுசென்மமே’ என்று சுருக்கி வைத்தேன். கூடக்கூட காதலின் அழகும் ஆனந்தமும் குறைவதேயில்லை. உடம்பென்னும் கூட்டில் காதல் கூடினால் எங்கேயோ பயணிக்கத் தோன்றும். ஆகாயவெளிகளில் சஞ்சரிக்கும் என் எழுத்தும் பாடலும் றெக்கையில்லாமலும் பறக்கும் பறவை. ஏனெனில், அது காதலுக்காகக் காதலுடன் காதலாகவே பிறந்தது.

பாடலைக் கேட்க: https://www.youtube.com/watch?v=VpJDmKKz3yg


No comments: