நடைவண்டி நாட்கள் - 20

ந்தக்குமாரிடம் நான் கேட்க விரும்பிய கேள்விகளில் ஒன்று, ஏன் எல்லோரையும் போல் இல்லாமல் தனித்தீவாக ஒதுங்கி வாழ்கிறீர்கள் என்பது. சந்தர்ப்பம் வாய்க்கும் போது தான் இம்மாதிரியான கேள்விகளைக் கேட்க வேண்டும். நம்மோடு நெருங்கிப் பழகாதவரை, ஒருவர் மீது நமக்கு உள்ள விமர்சனத்தை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தக் கூடாது. அப்படி வெளிப்படுத்துவதால் எதிராளியின் இதயம் காயம் பட்டுவிடும் என்பதோடு நம் அறிமுகத்தையே அவர் துண்டிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பதால் அமைதி காத்தேன்.

இன்னும் சொல்லப் போனால் நந்தக்குமாரிடம் அக்கேள்வியைக் கேட்பதற்காகவே, அவரிடம் கூடுதல் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள விரும்பினேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போது சந்திப்பது என்றில்லாமல் அவரை சந்திப்பதற்காகவே சந்தர்ப்பங்களை உண்டாக்கிக் கொள்ள முனைந்தேன். எப்போது சந்தித்தாலும் அவரிடம் எனக்கு சிலாகிக்க சில விஷயங்களாவது கிடைத்து விடும்.

வாழ்வை தத்துவ தரிசனத்தோடு பார்க்க அவர் எங்கிருந்து கற்றுக் கொண்டார் என்று தெரியவில்லை. அவர் பிற மாணவர்களிடம் காட்டிக்கொண்ட முகமல்ல அவருடைய அசல் முகம். அசல் முகம் வெகுளியானது. வெளிப்படையானது. காதல் தோல்விக்காரர் போல தன்னை பறைசாற்றிக் கொள்வது அவர் ஏற்படுத்தி சந்தோஷம் காணும் நாடகத்தனம். தன்னைப்பற்றிப் பிறர் பேசுவதற்கு ஏற்ப இம்மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஒருமுறை அவரே ஒத்துக் கொண்டிருக்கிறார். அவர் பேச்சுக்கும் செயலுக்கும் இருந்த பாரிய வித்தியாசத்தை விமர்சிக்க வேண்டும் போலிருக்கும். தன்னைப் பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக தன்னை கோமாளியாக்கிக்கொள்ள வேண்டுமா என்ன?

கோமாளித்தனம் தான். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை. அரசியலில், இலக்கியத்தில், சினிமாவில் இப்படியான கோமாளிகள் தான் கோலோச்சுகிறார்கள். நாம் சந்தைப் பொருளாக வேண்டுமானால், நமக்கு அடையாளமும், நம்மைப் பற்றி பிறர் அறிந்தும் இருக்க வேண்டும். ஒரு சாமியார் எதற்காக தொலைக்காட்சியில் தோன்றிப் பேட்டி அளிக்கிறார். ஆன்மீகம் அல்லது தியானம் உயர்ந்தது என யாவருக்கும் தெரியும். ஆனாலும், விளம்பரப்படுத்திக் கொண்டாலன்றி போய்ச்சேராது. அப்படித்தான் இதுவும் என்றார்.


எனக்கு தொடக்கத்தில் அவர் பேசுவன யாவும் குழப்பத்தையே கொண்டு வந்தன. காலப் போக்கில் அவர் மீது ஈர்ப்பு ஏற்படவே, அவர் சொல்வன யாவும் வேதம் போல் மாறி விட்டது. செய்தித்தாள்களை வாசித்துவிட்டு காலை உணவுக்காக விடுதிக்குப் போகும் போது அவருடன் விவாதிப்பேன். பேசுவார்.. பேசுவார்.. பேசிக்கொண்டே இருப்பார். என்னையும் அவருக்குப் பிடித்திருந்தது. என்னுடன் உரையாடுவதை, விவாதிப்பதை பெருமையாகக் கருதுவதாகக் கூறுவார். ஆவுடையார் கோயில், தார்ச்சாலை, புளியமரங்களுக்கு வாயிருந்தால் நந்தக்குமாரின் உரையாடல்களைச் சொல்லும். புளியம்பூ படர்ந்த அச்சாலையில் நீளமான நடையோடு அவர் சிகரெட் புகைத்துக் கொண்டே பேசிய பேச்சுகள் ஒரு தலைமுறைக்குப் போதுமான பேச்சு.

இந்தியக் கல்வி முறை அவருக்கு அறவே பிடித்திருக்கவில்லை. "மனப்பாடம் செய்து தாளிலே வாந்தியெடுப்பதற்கு பெயர் கல்வியா.." என்று பொருமித் தீர்ப்பார். "அது எப்படின்னா.." என்று இரண்டு வாக்கியங்களுக்கு இடையே ஒருமுறையாவது சொல்வார். அது எப்படி? என்ற கேள்விதான் அவரை எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ள தூண்டியிருக்க வேண்டும்.

என் பள்ளிச் சூழல், குடும்பச் சுழல் போல கல்லூரிச் சூழலும் இனியதாகவே மாறிக்கொண்டிருந்தது. பாடத்திற்கு அப்பாலும் நான் கற்க வேண்டியது நிறைய இருந்தன. அவ்வப்போது என் கவிதை, இலக்கியப் பேச்சுக்கு தீனி போடுவது போல் ஆள் கிடைத்து விடுவது ஆச்சர்யமாகவே படுகிறது. கல்லூரியில் மாணவர் தேர்தல் நடந்தது. மூன்றாம் ஆண்டு மாணவர்கள் தான் தலைவருக்குப் போட்டியிட முடியும். நந்தக்குமார் போட்டியிட்டால் எளிதாக வெற்றியடைவார் என்று சொல்லிக் கொண்டார்கள். உண்மை அதுதான் என்றாலும், நந்தக்குமாருக்கு அதில் பெரிதாக ஈடுபாடு இல்லை. மாணவர் தேர்தலென்பது மடச்செயல். இந்தக் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக நடக்கும் அநியாயங்களை இந்தத் தேர்தல் தட்டிக்கேட்க உதவாது. தேர்தல் என்றால் அதிகாரங்களைக் கைப்பற்றுவது. அதிகாரங்களைக் கைப்பற்றி, துஷ்பிரயோகங்களை நிறுத்துவது. ஆனால், இங்கே என்ன நடக்கிறது? துஷ்பிரயோகம் செய்வதற்காகவே, அதிகாரங்களைக் கைப்பற்றுகிறார்கள். மாநிலத் தேர்தல் ஆனாலும், மத்தியத் தேர்தல் ஆனாலும், மாணவர் தேர்தல் ஆனாலும் இதுதான் நிலைமை என்பார்.

விடுதியில் நிறைய சீர்கேடுகள் நடந்து வந்தன. விடுதிக் காப்பாளர், பொய்க்கணக்கு காட்டி மாணவர்களின் தொகையை சுவீகரித்துக் கொண்டிருந்தார். உணவு, அரசுக் கல்லூரிகளுக்கே உரிய நிலையை விட படுமோசமானதாக இருந்தது. ஒரே மாதிரியான பதார்த்தங்களும், ஊசிப்போன வாடையடிக்கும் உணவையும் விடுதி நிர்வாகம் வழங்கிக் கொண்டிருந்தது. இதையெல்லாம் சீர்படுத்துவதாகச் சொல்லியே இரண்டு மூன்று பேரில் தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்ச்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது நாள் கல்லூரியே அமளி துமளிப்பட்டது. தமிழ்ச்செல்வன், நந்தக்குமாரைத் தாக்கி விட்டதாகவும், நந்தக்குமார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கதறினார்கள்.


நந்தக்குமார் என்னைப்போல பலரையும் ஈர்த்திருக்கிறார் என்ற செய்தி மருத்துவமனையில் தான் தெரிய வந்தது. ஒரு மாணவருக்காக கல்லூரியின் மொத்த மாணவர்களும், கூடி நின்றது ஒருவிதமான உணர்வு தளத்தை எட்டி விட்டது. தமிழ்ச்செல்வன் எதற்காக நந்தக்குமாரை காயப்படுத்தினார் என்பது அப்போதைய பெரும் மர்மமாக பேசப்பட்டது. ஆயினும் தமிழ்ச்செல்வனுக்கும் நந்தக்குமாருக்கும் எவ்வித உட்பகையும் இருந்ததாக எங்களால் ஊகிக்க முடியவில்லை. பிறகு எதற்காக நந்தக்குமார் , தமிழ்ச்செல்வனால் தாக்கப்பட்டார் என்று மாணவர்கள் தங்கள் தங்கள் யூகத்திற்கேற்ப பேசிக்கொண்டார்கள். எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. சந்திரபாபு, "வாமய்யா.. தமிழ்ச்செல்வனைப் போய் நாலு சவுட்டு சவுட்டிட்டு வருவோம்.." என்றார். சவுட்டுதல் எண்றால் தூத்துக்குடி பாஷையில் அடிப்பது என்று பொருள். "நிலையிழந்து விடக்கூடாது பாபு.. நீங்கள் சொன்னால் மாணவர்கள் எதற்கும் தயாராகி விடுவார்கள்.. எனவே, நீங்கள் தான் கவனத்தோடு செயல்பட்டு அவர்களை வழிநடத்தி அமைதிப்படுத்த வேண்டும் என்றேன்.

மறுநாள் காலை, கல்லூரிக்கு போலீஸ் வந்தது. கல்லூரிகளின் வரலாற்றில் காம்பஸுக்குள் போலீஸ் வருவதற்கு எந்தக் கல்லூரி நிர்வாகமும் அனுமதிப்பதில்லை. ஆனால், தமிழ்ச்செல்வன் கைது செய்யப்பட்டிருப்பதால் அவர் மாணவர் தலைவராக இருப்பதால் விசாரணைக்காக போலீஸ் வரவே, முதல்வரும் விசாரணைக்கு ஒத்துழைப்புத் தர ஒத்துக் கொண்டார். மாணவர்கள் ஒரே நாளில் நந்தக்குமாருக்கு எதிராக திரும்பி விட்டார்கள். மாணவர்களுக்குள் ஆயிரம் பிரச்னை. இருந்தாலும், அதை காவல்துறையிடம் போய்த்தான் தீர்வு காண வேண்டுமா? கருத்து வேறுபாடு இருந்தாலும், தமிழ்ச்செல்வன் நம் கல்லூரியின் மாணவர் தலைவர். அவருக்கெதிராக செயல்படுவது அபத்தம். நந்தக்குமாருக்கும் தமிழ்ச்செல்வனுக்கும் இடையே உள்ள தனிப்பட்ட பிரச்னைக்கு ஒட்டுமொத்த மாணவர்களும் போலீஸ் விசாரணைக்கு உட்பட வேண்டுமா என்றார்கள். மாண்வர்கள் கொதிநிலையில் இருப்பதைப் புரிந்து கொண்ட முதல்வர் விசாரணையை கல்லூரிக்கு வெளியே வைத்துக் கொள்ளுங்கள் எனப் பின்வாங்கினார்.

நானும், சந்திரபாபுவும், நந்தக்குமார் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த மருத்துவமனைக்குப் போனோம். பாபு, நந்தக்குமாரை கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்
தார். தொடர்ந்து மாணவர்களின் மனநிலையையும், படுக்கையிலிருந்த நந்தக்குமாருக்கு விளக்கப்படுத்தினார். எல்லாவற்றையும் அமைதியோடும், கூர்ந்தும் கேட்டுவிட்டு நந்தக்குமார், எனக்கும் போலீஸ் வருவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை பாபு என்றார். நான் கீழே விழுந்து அடிபட்டதாகத்தான் மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறேன். தமிழ்ச்செல்வன் என்னைத் தாக்கியதற்குக் காரணம். அவர் விடுதிக் காப்பாளரோடு சேர்ந்து மது அருந்தியது. மாணவர்கள் நலனைப் பாதுகாக்காமல், மாணவருக்கு எதிராக செயல்படும் விடுதிக் காப்பாளரோடு சேர்ந்து கூத்தடிக்கிறாயே.. மாணவர்களை ஏமாற்றுகிறாயே.." என்று கேட்டதற்காகத்தான் குடிவெறியில் என்னைத் தாக்கினார். மற்றபடி தனிப்பட்ட பகை என்ன இருக்கிறது?

இதை ஏன் நீங்கள் மாணவர்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றார் பாபு. நான் அமைதியாக கைக் கட்டிக்கொண்டு தூணில் சாய்ந்து நின்றிருந்தேன். தெரிவித்தால் என்ன ஆகும்? ஒட்டுமொத்த மாணவர்களும், தமிழ்ச்செல்வனுக்கு எதிராகத் திரும்பி, அவரது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குவார்கள். வேறென்ன நடக்கும்? நிர்வாகம், அவரைக் கல்லூரியை விட்டு விலக்கி வைக்கும் அல்லது வெளியேற்றி விடும். என்போல, உங்கள் போல மிக எளிய குடும்பத்திலிருந்து படிக்க வந்த ஒரு மாணவன் வேறு வேறு காரணங்களுக்காக படிப்பை இழக்க வேண்டுமா என்ன? எல்லாம் சரியாகிவிடும் பாபு என்று எங்களை நந்தக்குமார் ஆறுதல் படுத்துகையில் என் கண்கள் கசிந்திருந்தன. அவர் காயப்பட்டபோது கூட அழத் துணியாத நான், இன்னா செய்தாருக்கும் நன்மை நினைக்கும் அவர் கருணையை, மாண்பைக் கண்டு விக்கித்துப் போனேன்.

நாங்கள் வருவதற்குள்ளாகவே, தமிழ்ச்செல்வன் காவல்துறையினரிடம் சிக்கியதற்குக் காரணம் அவர் குடியிருக்கும் வீட்டுக்கருகே உள்ள ஒரு பெண்ணிடம் விடியற்காலையில் தவறாக நடந்து கொள்ள முயன்றதற்காக எனத் தெரிய வந்தது. மேலும், நந்தக்குமார் சொன்ன விவரங்களையும் மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டோம். நாள்கள் ஓடின. தமிழ்ச்செல்வன், கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். விடுதிக்காப்பாளர், வேறு கல்லூரிக்கு மாற்றல் செய்யப்பட்டார். எப்பவும் போல கல்லூரியின் வெளிப்புறம் உள்ள மரத்தடியில் நந்தக்குமார் வழக்கமான தனது மூன்று வாசகங்களோடு சிகரெட் பிடிக்கத் தொடங்கினார்.


(தொடரும்..)

2 comments:

said...

வணக்கம்
நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.

http://www.thamizhstudio.com/

Add a Gadget - ல் இதை பயன்படுத்துக

வழி --> Add a Gadget --> select HTML/JavaScript

Title : தமிழ் ஸ்டுடியோ.காம்

Content : img alt="தமிழ் ஸ்டுடியோ.காம்" src="http://thamizhstudio.com/images/home_stud_logo.jpg"/>

said...

சொய் சொய் song is awesome. But I want to know the meaning of the word சொய்.Could you please clear my doubt.