நடைவண்டி நாட்கள் - 19

தயத்துடிப்பு ஏகத்துக்கு எகிறிக் கொண்டிருந்ததால், முதல் சுற்று முடிந்ததே தெரியவில்லை. கண்களும் கைகளும் பரபரக்க, தயாரித்துக் கொண்ட தகவல்களை நல்ல தமிழில் நயம்பட உரைத்தான் சரவணன். ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப தனது குரலில் ஸ்தாயையையும், முகபாவனையையும் கவரும்படியே அமைத்துக்கொண்டான். முதல் சுற்றில் அறுபது பேருக்கு மேல் தேர்வு செய்யப்பட்டதாய் அறிவித்தார்கள். சரவணனின் பெயர் அதில் நாற்பத்து இரண்டாவது இடத்திலோ, முப்பத்து ஆறாவது இடத்திலோ இருந்ததாக நினைவு.
போர்க்களத்தில் நிற்கிற தன்னந்தனியான படை வீரனைப் போல, உடம்பு தொப்பலாக வியர்க்க, அவன் நின்ற கோலம், ஆண்டு பலவாகியும் என் அடிநெஞ்சில் அப்படியே பசுமையாகப் பரவிக் கிடக்கிறது. பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவனும், அப்படிப் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவே இல்லை. வேறு யார் பேசுவதைப் பார்க்கும் வாய்ப்பு எனக்கும் கிட்டவில்லை.
என் தோழமை சற்றே வெறி நிரம்பியது. கொஞ்சுவதும் கோபிப்பதும் ஒரே மாதிரியான உரிமையை அல்லது உரிமை மீறலை என்னை அறியாமல் காட்டிவிடுவேன். அடுத்த சுற்றுக்கு கால்மணி நேரம் இருந்தது. நான் வேகவேகமாக வெளியே ஓடிப்போய் பெட்டிக்கடையை தேடினேன்.
அவன் ஏதோ ஒரு வெறியில் உழல்வதை மேடையை விட்டு வரும்போதே கவனித்துவிட்டேன். கீழே அமர்ந்து அடுத்த சுற்றுக்கான செய்திகளைக் குறிப்பெடுத்த காகிதத்தை மடித்து பாக்கெட்டில் வைத்துக்கொண்டு இரண்டு சிகரெட்டையும் வெட்டுக்கிளி தீப்பெட்டியையும் வாங்கிக் கொண்டு அரங்கத்திற்குள் நுழைந்தேன். அரங்கத்தின் கழிவறை அமைந்திருந்த இடத்திற்குப் பின்பு ஒரு மரம் இருந்தது. அந்த மரத்தின் மறைவில் நின்றுகொண்டு விழா ஏற்பாட்டாளர்கள் சிகரெட் புகைத்ததைப் பார்த்தபடியால், சரவணனனை அவ்விடத்திற்குக் கூட்டிக்கொண்டு போய் புகைக்கச் சொல்லி சிகரெட்டைக் கொடுத்தேன். சரவணனுக்கு அது பிடிக்கவில்லை. எத்தனை நெருக்கமான நட்பு என்றாலும், இதுமாதிரியான அன்பை நான் காட்டுவதில் அவனுக்கு விருப்பம் இருந்ததில்லை.
'எனக்காக · எதற்கு சிகரெட் வாங்கின?, நான் போய் வாங்கிக்மாட்டேனா? இனிமே இப்படிச் செய்யாத...' எனச் செல்லமாய் கடிந்து, சிரித்துக் கொண்டான்.
பின் புகையின் இடையில் அடுத்த சுற்றுக்கான தயாரிப்பு பேச்சு. முதல் சுற்றில் அவன் கைகளை அதிகமாக ஆட்டிப் பேசிய விதத்தை மேற்கோள் சொல்லும்போது சிற்சில இடத்தில் தவறியதையும் குறிப்பிட்டு திருத்திக் கொள்ளச் சொன்னேன்.
என் பெருமிதத்தை விடவும், சரவணன் நான் கூறும் திருத்தங்களில் அதிக கவனம் செலுத்துவான். இரண்டாவது சுற்றில் ஏறக்குறைய பலபேர் பின்வாங்கி ஓடத்தொடங்கினார்கள். இரண்டாவது சுற்றிலும் நம்பிக்கை தூண்டிலில் மீன்களை அள்ளிவந்தான் சரவணன். இரண்டாவது சுற்றில் பதினேழு பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதிலும் சரவணனின் பெயர் இருந்தது. மீதமிருக்கும் சிகரெட்டையும் புகைக்க ஆசைப்பட்டான். மரத்தடிக்குப் போனோம்.
'பதினேழு பேரில் ஆறுதல் பரிசாவது கிடைக்காமலா போகும்? ஐநூறு ரூபாயுடன்தான் திரும்புவோம். பதற்றம் அடையாதே...' என்றான்.
சிரித்துக் கொண்டேன்.
உணவு இடைவேளை. விழா ஏற்பாட்டாளர்களே உணவுக்கும் ஏற்பாடு செய்திருந்தார்கள். எனக்கு இதுவே போதும் போலத்தான் தோன்றியது.
மூன்றாவது சுற்று பத்மஸ்ரீ கமல்ஹாசன் முன்னிலையில் நடைபெறும் என்றார்கள்.
'சார், வந்துடுவாங்க... சாரைப் புகழ்ந்து பேசினா பரிசு கிடைக்கும்னு நினைக்காதீங்க... சாருக்குப் புகழ்வது அறவே பிடிக்காது' என்று பத்ரி அரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பொதுவான குரலில் முழங்கிவிட்டு சரவணன் அருகில் வந்து தோளை தட்டிவிட்டுப் போனார். நான் திருமதி நாசரின் முகபாவனையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். குறிப்பாக சரவணன் பேசும்போது அவர்கள் முகத்தில் எனனென்ன சம்பாஷனை பரவுகிறது எனக் கவனித்துக் கொண்டிருந்தேன். பதினேழு பேரில் முகத்திலும் அப்படியொரு பதற்றம், நடுக்கம், லேசான தவிப்பு, வெளிசொல்ல முடியாத வெறி உணர்வு.
கூட்டம் 'ஹோ'வென அலறி எழுந்தது. கலைஞானி வந்துவிட்டார். 'ஆழ்வார்பேட்டை ஆண்டவனே' எனக் கூட்டம் பெருங்குரலெடுக்க, கமல்ஹாசன் மெல்லிய கோபத்தோடு அவர்களைப் பார்த்து 'வேண்டாம்' என்பதுபோல சைகை காட்டினார். கூட்டம் அமைதியானது.
இறுதிச் சுற்று ஏகத்தடபுடலாக ஆரம்பமானது. ஒருவர் ஒருவராகப் பேசப்பேச, கைத்தட்டு அரங்கமே இடிந்துவிடும் அளவுக்கு இருந்தது. ஆரவாரம்.
இறுதியாக சரவணன், சரவணனுக்கு பயமும் தெளிவும் ஒருசேரக் கலந்துவிட்டது. பிடிவாதமான தைரியத்தோடு பேசத் தொடங்கினான்.
'மனிதநேயம் மாண்டுவிட்டதா?' என்பதுதான் இறுதிச்சுற்றுக்கான தலைப்பு.
அந்த மாதத்தில் முதல் வாரத்தில் பத்திரிகைகளில் தானு என்ற பள்ளிச்சிறுமையைப் பற்றி செய்திகள் வெளிவந்திருந்தன. அந்தச் சிறுமியின் ஆசிரியர் சாதி சொல்லி திட்டியதாகவும், கண் காயப்படும் அளவுக்கு தாக்கியதாகவும் பத்திரிகையில் செய்திகள் பரபரப்பாக இருந்தன. அது நிமித்தம் ஒவ்வொரு கட்சியும் அறிக்கை வெளியிட்டு ஆசிரியரைக் கண்டித்திருந்தன. கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பாக அச்சிறுமிக்கு உரிய ஆறுதலும் கண் சிகிச்சைக்காக தொகையும் வழங்கப்பட்டதை சரவணன் பேச்சில் இடையே குறிப்பிட்டான்.
மேத்தா ஒரு இடத்தில் சொல்கிறான். பாரதி ஒரு இடத்தில் சொல்கிறான். தணிகைச்செல்வன் ஒரு இடத்தில் சொல்கிறான். தாஸ்தாஒஸ்கி ஒரு இடத்தில சொல்கிறான் என மேற்கோள் மழையாகப் பொழிந்துவிட்டு, மனிதநேயம் மாளாது, மாண்டால் பூமி வாழாது என்றான். அரங்கம் சரவணனுக்கு கைதட்டவே இல்லை. அவன் பேசிய தொனி கைதட்ட மறந்து கூட்டத்தின் கைகளைக் கட்டிப்போட்டுவிட்டன போல!
இறுதியாக கமல் பேசும்போது, முழுதுமாக சரவணனை ஒட்டியே பேசினார். பிரபல கவிஞர்களை படைப்பாளர்களை ஒருமையில் பேசியதைக் குறிப்பிட்டு, 'அன்பு கூடினால் மரியாதை குறைந்துவிடும். நெருக்கம் அதிகமாக வேண்டுமானால் நேயம் முக்கியம்' என்பதுபோல பேசியபடியே பின் இருக்கையில் அமர்ந்திருந்த சரவணனை உற்சாகத்தோடு பார்த்தார். சரிதானே சரவணன்? என்றும் இரண்டொரு இடத்தில் குறிப்பிட்டார்.
கூட்டம் மொத்தமும் சரவணனைக் கொண்டாடியது. பின் பரிசுப் பட்டியலை திருமதி நாசர் அறிவிக்கத் தொடங்கினார். ஆறுதல் பரிசு பெறுவோரில் சரவணன் பெயர் வரவில்லை. இரண்டாம் மூன்றாம் பரிசு பெறுவோர் பட்டியலிலும் சரவணன் பெயர் வரவில்லை. சரவணன் முகம் இருண்டு போனது. எனக்கும் சோகம் கவ்வத் தொடங்கியது. என்னைப் பார்த்து 'ஒ.கே. வா போகலாம்...' எனக் கையைப் பிடித்து இழுத்தான். நானும் எழுந்து வாயில் வரை போனேன்.
அந்நேரம் பெரிய கைதட்டலுக்கு இடையே, 'முதல் பரிசு இரா. சரவணன்' என்று அறிவித்தார்கள். மெய்யாகவே பறப்பதுபோல் இருந்தது. சுளையாக ஐயாயிரம் ரூபாய் கிடைக்கப் போகிறது. ஊரிலிருந்து சென்கைக்கு வரும்போது கூட இத்தனை ஆயிரத்தைக் கொடுத்து அனுப்ப எங்கள் குடும்பங்களுக்கு இயலவில்லை. ஆனால் சமூகம் எங்களைக் காப்பாற்றிவிட்டது.
மாலை கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள அண்ணா ஆடிட்டோரியத்தில் பரிசளிப்பு விழா என்று அறிவித்தார்கள். பத்ரி ஓடிவந்து சரவணனை இறுகத் தழுவினார்.
'வாழ்த்துக்கள். பெரிசா வருவீங்க... வாங்க...' என்றார். அவர் காட்டிய பிரியத்தின் விலை அன்றைக்கு ஐயாயிரம் ரூபாய். நினைக்க நினைக்க பெருமிதமும் உற்சாகமும் கூடும் சம்பவமாகவே அது எனக்குப் படுகிறது. எந்தச் சலனமும் இல்லாமல் இந்த வாழ்வை மிகச் சாதாரணமாக எதிர்கொண்டுவிட முடியும். தேவைக்கேற்ப பணமும் புகழும் வசதியும் வந்துவிடும். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். உழைப்பு! இடையிராத உழைப்பு! செல்லும் திசை நோக்கிய தெளிவான உழைப்பு!
மாலைதான் விழா என்றாலும் போவதற்கு எங்களுக்கு வேறு இடம் இல்லாததால், கடற்கரைக்கே போய்விடுவோம் என நடந்துபோய் கடல் ரசித்தோம்.
கைக்காசு மீதம் பத்து ரூபாய் அறுபது காசு இருந்தது. அதனால் ஆட்டோவிலோ பேருந்திலோ போகவேண்டாமென பேசிக் கொண்டே நடந்தோம். கடும் வெயிலும் எங்களைச் சுடவே இல்லை.
இடையில் இரண்டொரு பிச்சைக்காரர்களுக்கு தானம் செய்தோம். அதான் ஐயாயிரம் ரூபாய் வரப்போகிறதே... வேறென்ன கவலை!
விழா மேடை சந்தோஷம் அளித்தது. சரவணனின் பெயர் அழைக்கப்பட்டது. சரவணன் கையில் கவரை வாங்கியதும், நான் இருக்கும் திக்கை நோக்கிப் பார்த்தான். அந்தக் கூட்டத்தில் அவன் கண்கள் என்னை மட்டுமே தேடின. அவனுக்கு விழுந்த கைதட்டல்களில் என் கைதட்டல் மட்டுமே அவனுக்கான, அவனுக்குத் தெரிந்த கைதட்டல்.
மேடையை விட்டு இறங்கியதும், கையில் கவரோடு என்னை வெளியே கூப்பிட்டான். உடனே கவரைப் பார்க்கும் ஆர்வம். திறந்து பார்த்தால், ஐயாயிரம் ரூபாய்க்கான காசோலையை 'அக்கவுண்ட் பே' என்ற வகையில் கொடுத்திருந்தார்கள். ஐயாயிரம் இருந்தும் அக்கவுண்ட் இல்லாத எங்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போலிருந்தது. எனினும் மகிழ்ச்சி பொங்க கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே அறையை நோக்கி நடக்கத் தொடங்கினோம்.
பெரிய நம்பிக்கை, பெரிய வெளிச்சம். வாகனங்களின் நெரிசல்களுக்கு நடுவே ஒருவரையொருவர் பாராட்டி சிரித்துக்கொண்டோம்.
'சிகரெட் வேணுமா?' என்றேன். 'வாங்கு' என்றான்.
- பயணம் தொடரும்.

8 comments:

said...

வணக்கம் யுகபாரதி அண்ணன்,

நடை வண்டி நாட்கள் 17
படிக்கவில்லை. இதில் எங்கேயும் இணைக்கப்படவில்லை.

என்னுடைய உங்களுக்கு வருகிறதா எனத்தெரியவில்லை.

உங்களுடைய நக்கீரன் கட்டுரைகளும் வாசித்துவருகிறேன். பகிரங்கமாகவே அறிக்கைவிடுத்து மீனவர்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அரசுக்கு எதிரான உங்கள் கட்டுரை அவசியமான பதிவு.

இங்குள்ள அரசியல் கட்சிகள் இப்பிரச்சனையில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக எதிர்ப்பை பதிவுசெய்ய வேண்டும்.

சினிமா பற்றிய உங்களுடைய கட்டுரைகளை காட்டிலும் சமூக பொறுப்புள்ள கட்டுரைகள் சிறப்பாக வந்திருக்கிறது

அன்புடன்
ஜெயக்குமார்

said...

Hello Yugabharathi,

My hearty congratulations and happy to see, read and cherish the content of your blog. I am thrilled to read them. I wish you sucess and all the best for what you do and continue this in the future too.

I'm subramanian, studied with you in your schooling days in Maxwell from 6th till 10th if I remember right. During those days we used to rally behind you for cultural activities, kavithai etc with Tamil teachers and other teaching staffs(Thiru. Nagendran, Thiru. Manisekharan, Thiru. Ganesan), Hope you remember me those days that we spent until 9th and then we were split into matriculation and stateboard groups and we got separated. I remember your name as Prem Kumar, been to your house in Aurlanand Nagar and I remember your block style hand writing of tamil/english letters in the class.

warm regards - subbu

said...

வாழ்த்துகள் :)

said...

ஈரோட்டுல கனேஷுன்னு ஒருத்தன், உங்கள நல்லா தெரியும்னு உதார் உட்டுகிட்டு திரியிறான், உங்களுக்கு அப்படி யாரையாது தெரியுமா?

said...

Remember me...

said...

Hi yuha,
Nice to read this.,
when u came to say about your past, at present you reached satisfied status in this world.

said...
This comment has been removed by the author.
said...

உங்கள் பயணங்களை ஆவலுடன் எதிர்பார்க்கும் கோடியில் ஒருவன் ...உங்கள் ரசிகன் ...

சக்திவேல்
குவைத்