நடைவண்டி நாட்கள் - 18

ல்லூரியில் சேர்ந்துவிட்ட முதல் வாரத்தில் இருந்து என் நடவடிக்கையில் கொஞ்சம்போல நம்பிக்கை பரவிவிட்டிருந்தது எனவே சொல்லத் தோன்றுகிறது.
வாழ்வை அதன் போக்கிலேயே விட்டுவிட்டால், அந்தப் பாதை நம்மை வெற்றியை நோக்கி நகர்த்திக் கொண்டு போகிறது.
இடமே கிடைக்க வாய்ப்பில்லாமல் இருந்த எனக்கு, கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தது விசுவநாதன் அண்ணன் சொன்னதுபோல 'செருப்படி சாமி'யின் கிருபையாகவே இருந்தாலும்கூட, அது அது நடக்க வேண்டிய காலத்தில் நடந்தே தீருகிறது.
கல்லூரியில் பெரும்பாலான மாணவர்களுக்கு நான் கவிதை எழுதுகிறவனாக அறிமுகமானபடியால் எனக்காகவே அவர்கள் இதழ்களில் புதுவிதமான சிரிப்பு ஒன்று இருந்தது. செல்லமான, சினேகமான அந்தச் சிரிப்பை இன்னதென்று விவரிக்க முடியாது. நடைவழியே என்னைக் கடக்கும்போதெல்லாம் அந்தச் சிரிப்பை உதிர்ப்பார்கள். அச்சிரிப்பை என் எழுத்துக்குக் கிடைக்கும் கௌரவமாகக் கருதிக்கொள்வேன். என் முதல் வாரம் முழுக்க எங்கள் கல்லூரியில் வியத்தகு மனிதர் ஒருவரைப் பற்றிய பேச்சுதான் பிரதானமாக இருந்தது. இரண்டாம் ஆண்டு படிக்கும் நந்தகுமார்தான் அந்த வியத்தகு மனிதர். ராகிங் செய்வதில் வினோதமான ஒரு முறையை அவர் கையாண்டார்.
கல்லூரி வாயிலில் எதிர்ப்புறத்தில் இருக்கும் புளியமரத்தடியில்தான் அவர் சதா அமர்ந்திருப்பார். கையில் எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் சிகரெட்டை பேராசிரியர்கள் வரும்போதுகூட மரியாதைக்காக மறைக்கமாட்டார். அவர் கல்லூரிக்கு உள்ளே இருக்கின்ற நேரத்தைவிடவும் கல்லூரிக்கு வெளியே அமர்ந்திருக்கும் நேரம்தான் அதிகம்.
அவருடைய சொந்த ஊர் ஈரோடு என்று பின்னால் தெரியவந்தது. முகம் முழுக்க தாடி, ஏறு நெற்றி, வžகரிக்கும் கண்கள், எதையோ இழந்துவிட்டதைப்போன்ற சோக ரேகை அவர் முகத்தில் காட்சியளிக்கும். அவர் ரேகிங் செய்யும் முறையைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் மூன்று வாசகங்களை எங்களிடம் சொல்வார். அந்த மூன்று வாசகத்தையும் ஒரு வெள்ளைக் காகிதத்தில் ஐநூறு முறை எழுதி வந்து மறுநாள் தர வேண்டும். அந்த வாசகங்கள் வேறொன்றுமில்லை. ஒன்று - 'லவ் இஸ் டேஞ்சரஸ்', இரண்டு - 'லவ் இஸ் இன்ஜூரியஸ்', மூன்று - 'லவ் இஸ் ஸ்வீட் பாய்சன்'.
இந்த மூன்று வாசகங்களை முதல்நாள் இரவு முழுக்க விடுதியில் மாணவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள். நான் அவர் பார்வையில் சிக்காததால் தப்பித்தேன். ஆனால் அவர் கண்ணில் தட்டுப்படும் அன்று மண்டகப்படி இருக்கிறது என்று மாணவர்கள் கிண்டல் அடித்தார்கள். நந்தகுமார் ஒரு காதல் தோல்விக்காரர் என்றும் அதனால்தான் மாணவர்களை இவ்வாறு எழுதச் சொல்கிறார் என்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பேசிக் கொண்டார்கள். உண்மையை நான் அறியேன்!
முதலாண்டு மாணவர் விடுதிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் விடுதிக்கும் அறை கிலோ மீட்டர் இடைவெளி இருக்கும். விடுதி மாணவர்களுக்கான உணவறை இரண்டாம் ஆண்டு விடுதியிலேயே அமைந்திருக்கும். உணவு நேரத்தில் கூட்டாகக் கிளம்பி கையில் தட்டுடன் இரண்டாம் ஆண்டு விடுதிக்குப் போக வேண்டும். முதல் ஆண்டு மாணவர்கள் பகல் நேரத்தில் தட்டை எடுத்துக்கொண்டு அந்த அரை கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க கூச்சப்படுவார்கள். அந்த அரைகிலோ மீட்டர் தார்ச்சாலையில் அரசுப் பேருந்தும் செல்வதால், மாணவர்களுக்கு என்னவோ போல் இருப்பதாகக் கருதி, தலையைக் குனிந்து கொள்வார்கள். கைதிகளைப்போல தார்ச்சாலையைக் கடக்க வேண்டியிருக்கிறதே எனப் புலம்புவார்கள்.
ஆனாலும் வேறு வழியில்லாமல் ஒரு வாரத்தை எதிர்கொண்ட பிறகு, இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சிலர் பழகவே, அவர்களின் அறையில் தட்டை வைத்துக்கொள்ள அனுமதி கிடைத்தது. அப்படியும் என்போன்ற சில பயந்த சுபாவம் உடையவர்கள் தட்டை தூக்கிக்கொண்டே போக வேண்டியிருந்தது.
என் அசூயையைப் புரிந்துகொண்ட சந்திரபாபு, என் தட்டையும் வாங்கிக்கொண்டு தனக்குத் தெரிந்த ஒருவரின் அறையில் வைப்பதாகக் கூறினார். நான் வேண்டாம் என்று மறுத்தேன். ஆனாலும் அவர் வலுக்கட்டாயமாக வாங்கிக்கொண்டு போனார். சந்திரபாபு மட்டும்தான் ராகிங்கில் இருந்து முழுதாகத் தப்பித்தவர். அவர் உடல்வாகு அப்படி. பெரிய மனிதரைப் போல இருப்பார். இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அவரை மூன்றாம் ஆண்டு மாணவர் என்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவரை இரண்டாம் ஆண்டு மாணவர் என்றும் நினைத்து விட்டுவிடுவார்கள். முதல் நான்கைந்து நாளில் நானே அவரை மூன்றாம் ஆண்டு மாணவர் என நினைத்து, பயத்தோடு வணக்கம் சொல்லியிருக்கிறேன்.
சந்திரபாபு அச்சுஅசல் தூத்துக்குடி பாஷை பேசும் ஆள். இரண்டாவது சந்திப்பிலேயே யாருடனும் நெருக்கமாகிவிடும் இயல்புடையவர். அவர் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, கொஞ்ச காலம் விவசாயம் பார்த்துவிட்டு பின் படிப்பைத் தொடர, கல்லூரியில் சேர்ந்திருந்தார். கரடுமுரடான அவரது பேச்சுக்கு பேராசிரியர்களே சில சமயம் பணியும் நிலை வந்திருக்கிறது. அவர் நந்தகுமாரின் அறையில்தான் தன் தட்டை வைக்க அனுமதி பெற்றிருந்தார். நந்தகுமாரின் அறையில்தான் சந்திரபாபுவின் அன்பால் என் தட்டும் வைக்கப்பட்டது.
நந்தகுமார், 'இது யாருடைய தட்டு?' எனக் கேட்க, 'நம்ம கவிஞருடையது' என்று சொல்லியிருக்கிறார். உடனே, 'கவிஞரா... நான் பார்க்க வேண்டுமே?' என்று மறுநாள் உணவறைக்கே வந்துவிட்டார்.
அவர் தன் இடது காலை தாங்கித்தாங்கி நேராக என்னைப் பார்த்து வந்ததும், வரிசையாக அமர்ந்திருந்த மாணவர்கள் கொல்லெனச் சிரித்தார்கள்.
அவர்கள் சிரித்தது, எனக்கு வேதனையையும் நந்தகுமாருக்கு வெறுப்பையும் ஏற்படுத்தின!
நந்தகுமார் அவர்களைத் திரும்பி ஆவேசமாக முறைத்துவிட்டு என் பக்கம் திரும்பினார். என் அருகில் அமர்ந்திருந்த சந்திரபாபு, என் தொடையை நிமிண்டி, எழுந்து கொள்ளச் சொன்னார்.
'· கவிஞனா?' என்றார் நந்தகுமார். நான் மௌனமாக 'இல்லை' என்பதுபோல தலையைசைத்தேன்.
'ஆமாம்... · கவிஞன்தான் என்று சந்திரபாபு சொன்னானே?' என்றார்.
'சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு வா' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். எனக்கு ஐநூறு முறை எழுத வேண்டிய பயம் கவ்வத் தொடங்கியது.
அன்று சாப்பிடவே இல்லை!
பாபு எவ்வளவோ சொல்லியும் எனக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை!
'· பேசாம சாப்பிடுமய்யா... நான் கூட வாரேன்... ·ர் எதுக்கு தயங்குறீர்...' எனத் தூத்துக்குடி அன்பை அவர் பொழிந்தபோதும், என்னால் ஒருவாய் கூட சாப்பிட முடியவில்லை.
உணவறையில் அமர்ந்திருந்த மாணவர்கள் அத்தனை பேரும் என்னைப் பாவத்தோடும் கவலையோடும் பார்ப்பதுபோல் தோன்றியது.
பாபு எனக்காக வேகவேகமாகச் சாப்பிட்டுவிட்டு, 'வாமய்யா... போய்ட்டு வருவோம்...' என்றார்.
நந்தகுமாரின் அறைக்குள் நுழைந்தபோது, என் அடிப்பாதங்கள் வியர்த்துவிட்டன. கைகள் நடுங்கின.
'வணக்கம் அண்ணா' என்றேன்.
'வணக்கம் சொல்லுப்பா....' என்றார் நந்தகுமார்.
நான் மடமடவென்று அவருடைய புகழ்பெற்ற வாசகங்களான 'லவ் இஸ்' என்று ஆரம்பித்தேன்.... 'உனக்கும் தெரிஞ்சு போச்சா... ஹா ஹா ஹா' என இதழ் மலர்ந்து சிரித்தார்.
என்னை, '·யும் பயந்துட்டியாப்பா... சும்மா இதெல்லாம் ஒரு விளையாட்டுக்கு... · இதெல்லாம் சொல்ல வேணாம். · இதெல்லாம் எழுதவும் வேணாம். · பெரிய கவிஞராச்சே... நிக்க வெச்சே பேசறேன் பார்... உட்கார் உட்கார்...' என்றார்.
சந்திரபாபு நந்தகுமார் சொல்வதற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டார்.
'நம்ம கவிஞர் நிறைய பத்திரிகையில் எழுதிக்கிட்டிருக்காரு... அவர் பேர் வராத பத்திரிகைகளே இல்லை' என்று அள்ளிவிடத் தொடங்கினார்.
கல்லூரியில் வியத்தகு மனிதர் என்னை வியப்போடு கண்களை உருட்டி பார்த்துக் கொண்டே நகைத்தார்.
'நம்ம கவிஞர்... பெரிய ஆளா வரப்போறாப்ள...' என்றார் சந்திரபாபு.
பாபுவைப் பார்த்துக் கொண்டிருந்த நந்தகுமார் என் பக்கம் திரும்பி, 'ஏய்ம் (AIM) என்ன?' என்றார். 'அதாம்பா... லட்சியம் இலக்கு' என்று மீளவும் கேட்டார்.
'இலக்கு வேறு, லட்சியம் வேறு அண்ணா' என்றேன்.
'எப்படி எப்படி?' என்று ரஜினிகாந்த் கேட்பதுபோல் கேட்டார்.
'இலக்கு என்பது நாம் எட்டிவிடக் கூடியது. லட்சியம் என்பது நாம் எட்ட முடியாததை எட்ட முனைவது' என்றேன்.
'ஓ... · கவிஞராச்சே... உன்கிட்ட தப்பிக்க முடியாது. நான் கேட்க வந்தது... உன்னுடைய எதிர்கால ஆசை கவிஞராவதா... இன்ஜினியராவதா...?' என்றார்.
நான் உடனே 'கவிஞர் ஆவது ஃபுரொஃபெஷனல் இல்லையே' என்றேன்.
'சரிதான்... அப்புறம் எதற்கு கவிஞர் என்ற அடைமொழியை மறுத்தாய்?' என்றார்.
நான் மௌனமாய் இருந்தேன். முதல் அறிமுகத்தில் அவருடன் மேலும் மேலும் விவாதம் புரியும் துணிவு எனக்கு ஏற்படவில்லை. அவர் நிறைய பேசினார். அவரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவர் ஏதோ மாணவர்கள் மத்தியில் நையாண்டிப் பேர்வழி என்பதாக வெளிப்பட்ட விமர்சனத்திற்கு அவர் பொருத்தமற்றவராக இருந்தார். அவரால் 'க்ஷண' நேரத்தில் மனப்பாடமாக பல புகழ்பெற்ற கவிதைகளைச் சொல்ல முடிந்தது. அறிவியல், தத்துவம், அரசியல் என்று தாவித்தாவி பல திக்குகளுக்கும் அவர் உரையாடல் சென்றது. கம்மியான தொனியில் ஒரே žரான நேர்க்கோட்டில் அவர்போல பேசும் இன்னொருவரை இப்போதும் என்னால் நினைக்க முடியவில்லை.
அவரிடம் கேட்பதற்கு என்னிடம் நிறைய கேள்விகள் இருந்தன.
- பயணம் தொடரும்.

1 comments:

said...

பதினேழாவது அத்தியாயம் இல்லை.அதை பதிவு செய்யவும்.........