நடைவண்டி நாட்கள்:பதினைந்து

மாத சம்பளக்காரர்களின் மனோநிலையை எத்தனையோ விதமாக நானும் சரவணனும் இன்னும் சில நண்பர்களும் விமர்சித்திருக்கிறோம். சம்பளத்துக்காகக் குஞ்சு பொறுக்கும் ஊதியக் கோழிகள் என்று வாய்க்கு வந்தபடியெல்லாம் கிண்டலடித்திருக்கிறோம். ஆனால், அந்த கிண்டலுக்கும் கேலிக்கும் நானும் உரியவனாகிப் போனதைப் போல உள்ளூர சிறு வருத்தம். என்ன செய்வது... வயிறும் மனதும் ஒன்றோடு ஒன்று இணைந்து பயணிப்பதில்லையே.
நண்பர்களை மாலை காத்திருக்கச் சொல்லிவிட்டு அலுவலகத்துக்கு வந்த என்னை உடனே மதுரைக்கு கிளம்ப வேண்டும் என ஆசிரியர் பணித்தார். கம்யூனிஸ்ட் கட்சி பெண் கவுன்சிலர் தோழர்.லீலாவதி சாராய வியாபாரிகளால் வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தீப்போல் பரவியிருக்கவே அது குறித்த செய்தி சேகரித்து வரும்படி மதுரைக்கு கிளம்பச் சொன்னார். ஒரு பத்திரிகையாளனாக என் கடமை ஆசிரியர் இடும் கட்டளைக்கு அடிபணிவதே அன்றி மாற்று அபிப்ராயத்தை கூறுவதல்ல என்பதால் உடனே கிளம்புவதற்கு ஆயுத்தமானேன். நண்பர்கள் காத்திருப்பார்களே என்று உள்ளுக்குள் ஒரு கவலை வந்து என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. சம்பளம் கிடைத்தவுடன் கம்பி நீட்டிவிட்டான் பாரு என்று சொல்லிவிடக் கூடாதென்று அரவிந்தன் மூலம் தகவலை நண்பர்களுக்கு சொல்லச் சொல்லிவிட்டு மதுரைக்குப் போய்ச் சேர்ந்தேன்.
மதுரை நகர் முழுவதும் அமைதியாயிருந்தது. சிவப்பு நிற போஸ்டர்களால் கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி கண்டனங்கள் எழுதப்பட்டிருந்தன. ஆனாலும் ஆளும் கட்சிக்காரர்களின் அட்டூழியங்களை வெளிச்சமிட்ட அச்சுவரொட்டிகள் தோழர். லீலாவதிக்கான அஞ்சலியை செலுத்தவும் தவறவில்லை. செய்தி சேகரிப்பதற்காக எல்லா மட்டத்து பிரமுகர்களையும் சந்தித்து பேசினேன். அங்கு பாகுபாடு இல்லாமல் ஒவ்வொருவரும் நடந்த கொலையை கண்டித்தும் தோழர் லீலாவதியைப் புகழ்ந்தும் சிலர் பணியை சிலாகித்தும் பேசினார்கள். பொதுவாழ்வில் ஈடுபடுகிற ஒரு பெண் இப்படியான முறையில் வெட்டிச் சாய்க்கப்பட்டால் இந்த நாட்டில் எந்தப் பெண் தைரியமாக பொதுவாழ்வில் ஈடுபட முன்வருவாள் என நினைத்துக்கொண்டேன்.
தோழர் லீலாவதியின் வீட்டுக்குப் போனேன். எனக்கு உதவியாக எங்கள் பத்திரிகையின் மதுரை பகுதி விநியோகிஸ்தர் வந்திருந்தார். மிகச் சின்ன வீடு. பத்துக்கு இருபது அடி மட்டுமே உள்ள ஒண்டிக்குடித்தன வீடு. அதை வீடு என்பதைவிட சற்றே பெரிய அறை என்றுதான் சொல்ல வேண்டும். அறையின் இடது பகுதியில் விசைத்தறி இருந்தது. தோழரின் தொழில் தறிநெசவு என்பதும் அப்போதுதான் தெரிய வந்தது. கொஞ்சம் அலுமினிய பாத்திரங்கள். இந்த சின்ன அறையின் வலது மூலைச் சுவரில் புத்தக அலமாறி. இந்தச் சின்ன வீட்டில் இரண்டு வயதுக்கு வந்த பெண் குழந்தைகளோடு எப்படி வாழ்ந்தார்கள் என்பதே ஆச்சர்யமாயிருந்தது. தறிக்கு அருகில் சின்ன மாடம் இருந்தது. அந்த மாடத்தில் மண்ணால் செய்யப்பட்ட பாரதியாரின் உருவ பொம்மை இருந்தது. கையடக்க பாரதி. நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை. திமிர்ந்த ஞானச் செருக்கை தோழர் லீலாவதிக்கு உணர்த்திய பொருளை அச்சிலை என்னை கசிய வைத்தது. வீட்டிலிருந்து வெளியேறினோம்.
விநியோகஸ்தர் அடுத்த யாரை, எங்கு பார்க்க வேண்டும் என கேட்டபடி தனது இரண்டு சக்கர வாகனத்தை முடுக்கினார். பார்ட்டி ஆபீஸ”க்கு போங்கள் என்றேன். பார்ட்டி ஆபீஸுக்கு என்றதும் அவர் விளங்காமல் என்னது என்றார். கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு போங்கள் என்றேன். பார்ட்டி என்றதும் குற்றம் சாட்டப்டட்வரின் ஆபீஸுக்கு என்று புரிந்துகொண்டார் போல. எங்களுடன் ஒரு புகைப்படக்காரர் வந்தால் சௌகர்யமாக இருக்கும் என்றேன். அவரே ஏற்பாடும் செய்தார். அந்த புகைப்படக்காரர் என்னிலும் சின்னவன் என்பதால் விளையாட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்டுக்கொண்டே வந்தான்.
கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்ததும் சற்றே காத்திருக்கும்படி சொன்னார்கள். தோழர்கள் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து விவாதித்துக் கொண்டிருப்பதாகவும் கூட்டம் முடிந்தவுடன் சந்திப்பதாகவும் கூறினார்கள். காத்திருந்தோம். தே·ர் அருந்த கடைத்தெருவுக்கு வந்தபோது புகைப்படக்காரர் சென்னை அலுவலகத்தில் வந்து பணியாற்ற விரும்புவதாகவும் ஆசிரியரிடம் பேசி பதில் சொல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டான். சரி என்பதுபோல சிரித்துவைத்தேன். தேநீர் கடைக்கே ஓடிவந்து ஒரு தோழர் எங்களை அழைக்கிறார்கள் என்றார். பாதித் தேநீரோடு அலுவலகம் திரும்பினோம்.
அலுவலகம் என்றால் அது ஏதோ ஆளுயர கட்டிடம் என்றோ அண்ணாந்து வியக்கும் கட்டிடம் என்றோ நினைத்துவிடாதீர்கள். கூரை கொட்டகையைத்தான் ஊர்தோறும் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாகக் கொண்டிருக்கிறது. என் அப்பாவும் அதே கட்சியின் தஞ்சை நகரச் செயலாளராக இருக்கிறபடியால் தோழர்களின் மொழி எனக்கு அத்துபடி. வயது வித்தியாசமில்லாமல் கட்சி உறுப்பினர்கள் தோழர் என்று அழைப்பதையே விரும்புவார்கள். தோழமை பாராட்டும் அவர்களிடம் கள்ளமோ கபடமோ யாரும் அறிந்திருக்க முடியாது. அரசியல் வணிகமாகிவிட்ட இக்காலத்திலும் கூட அவர்கள் வணிக அரசியலுக்கு எதிரானவர்களாகவே இருந்துவருகிறார்கள்.
அலுவலகத்தில் வெற்றுமார்போடு எங்களைச் சந்தித்தவர் மாவட்டச் செயலாளர் மோகன். சம்பவத்தின் முழு விவரத்தையும் தோழர் லீலாவதியின் தியாக மாண்புகளையும் பகிர்ந்துகொண்டார். பிறகு தோழர் நன்மாறனும் தோழர் ஜோதியும் கூடுதல் விபரங்களை வெளிப்படுத்தினார்கள். அலுவலகத்தில் உள்ள மின்விசிறி சப்தம் எழுப்பவே நிறுத்திவிடுவோமா என்றார் இன்னொரு தோழர். மின்விசிறியைக் கூட பழுது பார்க்க இயலாமல் மக்களின் பழுதுகளை போக்க துடிக்கும் தோழமை நிரம்பியவர்கள்தான் கம்யூனிஸ் கட்சியின் வீரஞ்செறிந்த உறுப்பினர்கள். தற்போது மதுரைத் தொகுதியில் தோழர் மோகன் எம்.பி. ஆகி மக்கள் பணியைத் தொடர்ந்து வருகிறார். தோழர் நன்மாறனும் சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இரவு வெகு நேரமாகிவிட்டபடியால் உடன் திரும்ப முடியவில்லை. விடிகாலை கிளம்பி அன்று மாலையே சென்னைக்கு வர முடிந்தது. வந்தவுடன் சேகரித்த தகவல்களை எழுதி முடிக்க நள்ளிரவு நகர்ந்துவிட்டதால் அலுவலகத்திலேயே தங்கிவிட்டேன்.
சம்பளம் கிடைத்ததும் பிரியாணி வாங்கித்தருவதாக நண்பர்களிடம் சொல்லிய எனக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தில்லியில் இருக்கும் பத்திரிகை நிறுவனர் வேறு சில சிக்கல் காரணமாக சென்னை அலுவலகத்திற்குப் பணம் அனுப்ப முடியாமல் போய்விட்டதாம். ஆதலால் சம்பளம் கையில் கிடைக்க பத்து நாள் பிடிக்கும் என்றார்கள். கையில் ஐம்பதே ரூபாயோடு விடுதிக்கு திரும்பினேன். நண்பர்கள் யாரிடமோ சென்று கடனாக முந்நூறு ரூபாய் வாங்கி வைத்திருந்தார்கள். சம்பளம் வந்ததும் கொடுத்துவிட்டால் ஆகிறது என்றார்கள். இரண்டு நாள் அலைச்சலில் எனக்கு உடல் நோவு கண்டுள்ளதாகக் கூறி நாளை கடைக்குப்போய் உணவருந்துவோமா என்றேன். நண்பர்கள் ஏற்றுக்கொண்டார்கள். மறுநாளும் உடல் சரியாகவில்லை. அவர்களாகவே திட்டத்தை கைவிட்டு அந்த முந்நூறு ரூபாயை என் மருத்துவத்திற்கு செலவிட்டார்கள். நான் கண்­ணீரில் குளித்து கரையேறும் போதெல்லாம் நண்பர்கள் கைகுட்டையோடும் ஆறுதலோடும் காத்திருந்தார்கள். மாதச் சம்பளக்காரனின் மனவலியை உணர அந்த சம்பவங்கள் பயன்பட்டிருக்கின்றன.
-(பயணம் தொடரும்)

1 comments:

said...

அன்புள்ள அண்ணன் பாரதிக்கு,

நலம்தானே?

இதுவரை நீங்கள் எழுதிய தொடரிலேயெ வெகு சிறந்ததென இத்தொடரைச் சொல்வேன். நீங்கள் பக்கத்திலிருந்து பேசுவது போலிருக்கிறது.

உங்களது இத்தொடர் நானொருவன் மட்டிலும், நடுக்கடல் தனிக்கப்பல், நேற்றையக் காற்று (தலைப்பெல்லாம் எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களொ) போன்றவற்றிலிருந்து வெகுவாக விலகியும் அகத்துடன் வெகுவாக நெருங்கியும் இருக்கிறது. அடுத்த அடுத்த பகுதிகளுக்காக காத்திருக்கிறேன்.


சென்னையில் வேலையில்லாமல் திரிந்து கொண்டிருந்த போது நீங்களும், உங்கள் கவிதைகளும் உங்கள் அறை முழுக்க பரவிக்கிடக்கும் புத்தகங்களும்தான் எனக்கு ஆறுதலாக இருந்தன(குறுந்தொகையிலிருந்து கோணங்கி வரை எல்லாம் இலவசமாக எனக்கு அறிமுகமானது உங்கள் அறையில்தான்). நீங்கள் வேலையில்லாமல் சென்னையில் சுற்றிய தினங்களைப் பல முறை எனக்கு சொல்லியிருக்கிறீர்கள்.
உங்களுக்குத் தெரிந்தவர்கள் மூலம் எனக்கு சில வேலைகளும் வாங்கிக் கொடுத்தீர்கள். அப்போது பொறுப்பற்று
இருந்த என்னால்தான் அதை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இப்போது பொறுப்புகளோடு சுற்றிக்கொண்டிருக்கிறேன். இத்தொடர்
உங்களருகில் இருந்த நாட்களை மீண்டும் மீண்டும் அசை போட வைக்கிறது.
**************

அண்ணன் என்றால் எல்லோரும் கவிஞர் அறிவுமதியைத்தான் சொல்வார்கள். என்னைப் பொறுத்தவரை அண்ணன் என்றால் நீங்கள்தான். ஒரு முறை “அபிபுல்லா சாலை” என்று அண்ணன் அறிவுமதியையும் அவரது கவியுலகத் தம்பிகளையும் பற்றி ஒரு கட்டுரை ஆனந்தவிகடனில் வெளியிட்டார்கள்.

கண்டிப்பாக ஒரு நாள் அபிபுல்லா சாலையைப் போல் உங்கள் தெற்கு சிவன் கோயில் தெருவும் பத்திரிக்கையில் வரும்.

என்றும் அன்புமிக்க தம்பி,

பாபு,
பெங்களுர்.