நடைவண்டி நாட்கள்: ஒன்று

த்தனையோ பேர் வந்திறங்கிய சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நானும் சரவணனும் வந்திறங்கிய அந்த அதிகாலை மார்கழியை நினைத்துப் பார்க்க, நெகிழ்வு கூடி, நெஞ்சு கனக்கிறது.
நோக்கமும் ஏக்கமும் கூடின மனநிலையில் கவிழ்ந்திருந்த பனி இரவு மெல்ல விடியும் வரை எதிரே இருந்த தே·ர்க் கடையில் பேசிக் கொண்டிருந்தோம்.
பேசுவதற்கு வார்த்தைகள் தவிர வேறு எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. இரண்டு கருத்த இளைஞர்கள் தன் கடையில் தேநீர் பருகியதை விசேஷ விஷயமாக அக்கடைக்காரர் கருதவும் இல்லை.
யாரோ இரண்டு பேர் நான்கு ரூபாய் வியாபாரத்திற்கு உதவினார்கள் என்பதற்காக அவர் சிரித்தபோது, நாங்களும் பதிலுக்குச் சிரித்து வைத்தோம்.
ரயில் நிலையத்தை ஒட்டிய காலனியில் சரவணனின் சித்தப்பா இருப்பதாக எப்போதோ ஒருமுறை தஞ்சாவூருக்கு வந்திருந்தபோது கொடுத்திருந்த முகவரிச் சீட்டை நைந்து போன தோல்பையின் அடிப்பகுதியிலிருந்து சரவணன் எடுத்துக் காட்டினான்.
காலனிக்கு இடதுபுறத்தில் அந்த வீடு இருக்கிறதா, அல்லது வலதுபுறத்தில் இருக்கிறதா எனத் தெரியவில்லை.
தேநீர்க் கடைக்காரரிடம் கேட்டிருக்கலாமே என பத்து சுற்று சுற்றிவிட்டு முடிவெடுத்தோம். எப்போதும் முடிவுகளை தாமதமாக எடுப்பதே எனக்கும் சரவணனுக்கும் வேலையாகிவிட்டது.
நான் பட்டயப் பொறியியல் படித்துவிட்டு சென்னை வருவதாக இருந்த முடிவு தாமதப்பட்டுப் போயிருந்தது. ஏறக்குறைய இரண்டு வருடம் குடும்பத்தின் சூழலை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அலைக்கழிப்புக்கு ஆளாகியிருந்தேன். சரவணனும் கூட முதுகலை படித்து வருடங்கள் ஓடியிருந்தது.
சென்னைக்குப் போய் என்ன செய்ய்ப போகிறீர்கள்? என்ற கேள்விக்கு இருவரிடமும் அப்போது பதில் இல்லை.
சரவணனுக்கு சினிமாவும் எனக்குப் பத்திரிகை துறையும் கனவாக இருந்தன. கனவுகளைச் சுமந்து தஞ்சை தெருக்களில் நடந்த நாட்கள் இன்னும்கூட ஒளிர்கின்றன.
ஜெயித்த மனிதர்களின் கதைகளையும் வரலாறுகளையும் பேசிப்பேசி உருவேற்றிக் கொள்வோம்.
முடியும், நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கை சில சமயம் 'நமக்கு யாருமில்லையே தடுக்கி விழுந்தால் தூக்கிவிட' என்பதுபோல தோன்றும்.
உண்மையில், ஜெயித்தவர்கள் எல்லாம் இரட்டை மனநிலையை சாமர்த்தியமாகக் கையான்டவர்கள். இல்லாத தைரியத்தை இயல்பாக்கிக் கொண்டு அல்லது இருப்பதாக நினைத்துக் கொண்டு முயன்றவர்கள்தான்.
முயல்வது ஒன்றே நம் வசம். மற்றபடி வெற்றியும் தோல்வியும் தகுதியும் காலம் வழங்குவன.
முடிவு எதுவாயினும் சின்னதாகவேனும் முயன்று பார்ப்போம் என்று துணியவே தொடங்கியது எங்கள் பயணம்.
கையில் இருந்த முகவரிச் சீட்டை கடந்து போன கண்களிடம் காட்டிக் காட்டி ஒருவழியாக அந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம். அந்த வீடு, நிறைய இளைஞர்களால் சூழப்பட்டிருந்தது. எந்த முகமும் எங்களை விரட்டவில்லை.
போலவே, எந்த முகமும் எங்களை நெருங்கி வந்து சிரிப்பை உதிர்க்கவில்லை. தே·ர்க் கடைக்காரர் சிரித்து சென்னைக்கு வந்ததை வரவேற்றாரே, அதுபோல கூட!
சரவணன் தனது சித்தப்பா இங்கே வசிப்பதாக சொல்லிய தகவலை, ஒரே ஒருவர் செவியில் வாங்கிக் கொண்டு 'ஓ அவரா!' என்று இழுத்தார்.
சித்தப்பா பெயர் செல்வம்.
'செல்வமா, இங்கேதான் இருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு வேறு எங்கேயோ தங்கிக் கொள்வதாகக் கூறி கிளம்பிவிட்டாரே' எனப் பேச்சை முடிக்க.... எனக்குப் பெருநகரத்து அச்சம் தொற்றிக் கொண்டது.
'உங்களிடம் சித்தப்பாவின் தற்போதைய முகவர இருக்கிறதா?' என சரவணன் கேட்க, 'இல்லையே' எனப் பொட்டில் அறைந்தது போல முடித்துக் கொண்டார்.
அந்த வீட்டு வாசலிலேயே நின்று கொண்டிருந்தோம்.
இருந்த ஒரு முகவரியும் இல்லாத கணக்காகிவிட்டது. அதிகாலைப் பனி அறவே மறைந்து, சூரிய வெப்பம் உடலில் பரவியது.
மீண்டும் ஒரு தேநீர்ப் பருகித்தான் இந்த தீர்க்க முடியாத சிக்கலை ஆலோசிக்க வேண்டும்போல் தோன்றிற்று.
சிக்கல் என்றால் எதிர்பார்த்து நடப்பதில்லை. எதிர்பாராமல் நடந்து என்ன செய்வதென்றே தெரியாமல் போவதுதானே!
தமிழர்கள் தங்களின் பெரும்பாலான சிக்கல்களுக்கு தே·ரில் தீர்வு கிட்டுவதாக நினைக்கிறார்கள். தேநீரில்தான் வாழ்வின் கசப்பும், இனிப்பும் சூடும் கலந்திருக்கின்றன.
சரவணனுக்கு கூடுதலாகப் புகைக்க ஆசை.
இழுத்து மெல்ல வெளிவிட்ட புகைக்குப் பின் சரவணனுக்கு சித்தப்பா மீது கோபம் கோபமாக வந்தது. கொடுத்த முகவரி மாறிவிட்டதைக் கூட சொல்லத் தவறிய அவரது உறவு அலட்சியத்தைப் பொருமித் தீர்த்தான்.
வழியற்று நிற்கையில் வார்த்தைகளின் வெம்மையை மனதும் உதடும் ஏனோ வாரி இறைக்கின்றன.
'சித்தப்பா எங்கே வேலை பார்க்கிறார்?' என்றேன்.
"'சஸ்பென்ஸ்' என்ற மாத நாவல் வெளியீட்டகத்தில்" என்றான்.
'அங்கே போய் விசாரிப்போமே' என்றேன்.
விண்வெளி ஆராய்ச்சிக்கு விடை கண்டுபிடித்தது போல 'சரி' என்று சிரித்தான்.
குளித்தால் தேவலாம் போலிருந்தது. எங்கே குளிப்பது?
வீட்டு வாசலிலேயே நின்றிருந்தோம். சித்தப்பா வீடாக இல்லாமல் யாரோ சிலரின் வீடாக இருந்ததால் அங்கே குளிக்க வழியில்லை.
ஹோட்டல் அறையெடுத்து காலைக்கடனை முடிக்கும் அளவுக்கு எங்களிடம் பணமும் இல்லை.
'கொஞ்சம் தூரம் நடந்து வருவோமே? எழும்பூரில் நம்மைப் போன்ற நிராதரவு பிராணிகளுக்கு ஒரு இடம் கூடவா கிடைக்காது?' என்பதுபோல நடந்தோம்.
பத்தடி நடந்ததும், எங்களைப் போல பையோடும், பார்வையில் பரிவோடும் ஒருவர் எதிர்பட்டார். அவரும் அந்த அறையில் வசிப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னைக் கவிஞனாக சரவணன் அறிமுகப்படுத்தினான்.
சரவணனுக்கு நான் கவிஞன் என்பதில் சின்னதாய் கர்வம் உண்டு. என் நண்பன் மிகச்சிறந்த கவிஞன் என்று கொண்டாடும் பாங்கு சிலசமயம் என்னையும் மகிழ்ச்சிப்படுத்தும். என்னை அறிமுகப்படுத்தியதும் எதிர்பட்டவர் என் பெயரை பத்திரிகையில் பார்த்திருப்பதாகப் பெருமிதத்தோடு கூறிக்கொண்டார்.
அந்த வார குமுதம் இதழில் கூட என் கவிதை பிரசுரமாகி இருந்ததால் அவர் முகம் மலர பேசத் தொடங்கி, தானும் கவிஞன் என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.
பெயர் சீனிவாசன். ரயில்வேயில் பணிபுரிவதாகவும் சித்தப்பாவின் நெருங்கிய நண்பர் எனவும் பெருமைபட நெருக்கமானார்.
சரவணனுக்கு மெல்ல சிரிப்பு வந்தது. சித்தப்பா மீது கொண்டிருந்த பொருமலை மாற்றிக் கொள்ளத் தொடங்கினான்.
பத்திரிகையில் எழுதியதால் கிடைத்த அறிமுகம் முதல் நாள் குளியலுக்குப் பயன்பட்டது.
குளித்து முடித்து அறையில் தலைவாரிக் கொள்ளும்போதுதான் சீனிவாசனிடம் என் கவிதை ஆல்பத்தை சரவணன் காட்டினான். பத்திரிகையில் வெளிவந்த கவிதைகளைக் கத்தரித்து அம்மா வடிவமைத்திருந்த ஆல்பம். இந்த ஆல்பத்தையும் தனது காதுக் கம்மலை அடகுவைத்துக் கொடுத்த ஆயிரத்து ஐநூறு ரூபாயையும், இரண்டு பழைய உடுப்புகளையும் தவிர நான் கொண்டு வந்தது எதுவுமில்லை.
இன்னும் சொல்லப்போனால், நடைவண்டியில் நடைபழகிய அனுபவம் எனக்கு இல்லவே இல்லை.
எப்படிச் சொல்வது?
நடைவண்டி வாங்கித் தரும் அளவுக்குக் கூட வசதியற்ற வீடு என்னுடையது.
இருவரும் கிளம்பி சீனிவாசனுக்கு நன்றியைத் தெரிவித்து அறையை விட்டுப் புறப்பட்டோம்.
சென்னையின் கொளுத்தும் வெயிலுக்கு உடலை தயாரிக்கத் தொடங்கினோம். சித்தப்பா பணிபுரியும் அலுவலக முகவரியை žனு கொடுத்திருந்தார்.
கண்டுபிடித்து அலுவலகத்தின் வாசலில் போய் நின்றோம்.
சித்தப்பா வேலையை உதறிவிட்டுப் போய் பதினைந்து நாட்கள் ஆகிவிட்டது என்று சுரத்தே இல்லாமல் ஒரு பெண் பதில் அளித்தார்.
சரவணன் அழுதே விடுவான் போல முகம் இறுகினான்.
என் கவலை - இன்று இரவு எங்கே தூங்குவது?
- தொடரும்.

3 comments:

said...

ezhia nadaiel viru viru-ppaga irukkirathu!

Ndai vandi pazhgiyathu illai neeingal, enralum ungal nadai ennai thol pottu alaiithu selgirathu oru nanbanai pol!

ungal adutha alaippukku kathirukkiren nagai vaniyel payanikka!

said...

அன்பின் பாரதி.. எப்படி இருக்கீங்க ? ரொம்ப நாளாச்சு சந்தித்து. நீங்க வலைத்தளம் வைத்திருக்கும் தகவல் கூட எனக்குத் தெரியாமலேயே போய்விட்டது :)

நேரம் கிடைக்கும் போது அழையுங்கள்.

பொழுதுகிடைத்தால் வாருங்கள்

http://xavi.wordpress.com
http://sirippu.wordpress.com

அன்புடன்
சேவியர்

said...

//பேசுவதற்கு வார்த்தைகள் தவிர வேறு எதையும் நாங்கள் கொண்டு வரவில்லை. இரண்டு கருத்த இளைஞர்கள் தன் கடையில் தேநீர் பருகியதை விசேஷ விஷயமாக அக்கடைக்காரர் கருதவும் இல்லை.
யாரோ இரண்டு பேர் நான்கு ரூபாய் வியாபாரத்திற்கு உதவினார்கள் என்பதற்காக அவர் சிரித்தபோது, நாங்களும் பதிலுக்குச் சிரித்து வைத்தோம்.//

//கையில் இருந்த முகவரிச் சீட்டை கடந்து போன கண்களிடம் காட்டிக் காட்டி ஒருவழியாக அந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்தோம்.//

//தேநீரில்தான் வாழ்வின் கசப்பும், இனிப்பும் சூடும் கலந்திருக்கின்றன.//

//வழியற்று நிற்கையில் வார்த்தைகளின் வெம்மையை மனதும் உதடும் ஏனோ வாரி இறைக்கின்றன.//

மிக அழகான ரசனை மிக்க வரிகள்,சோகத்தின் சாயத்தை மனதில் பூசிச் செல்கின்றன.