நடைவண்டடி நாட்கள்: இரண்டு

ன் பயணம் மிகச்சாதாரண ஒருவன் தன் அடிப்படை ஜ“வாதாரத் தேவைகளுக்காக நடத்திய சமரே அன்றி அதைச் சிலாகித்துப் புகழ ஒன்றுமில்லை.
ஆயினும் இந்தச் சமருக்காக என்னை நான் இழந்தும், சிற்சில இடங்களில் தொலைந்தும் போயிருக்கிறேன்.
யார் ஒருவரையும் சூழ்நிலையே உருவாக்குகிறது. கெட்டவனாக சமூகம் சுட்டுகிற நபரைக் கூட!
என் சூழல் வெகு இலகுவாக என்னை உயரம் ஏற உதவியிருக்கிறது. எனக்குக் கிடைத்த சூழலும் வாய்ப்புகளும் இன்னொருவருக்கு கிடைத்திருக்குமேயானால் அவரும் என் போலவே ஆகியிருக்கக்கூடும் என்று சொல்வதில் தவறில்லை.
நினைத்தால் வேடிக்கையாகவும் குருட்டு தைரியமாகவும் தோன்றுகிறது; எழுத்தை முழு நேரத் தொழிலாக வைத்துக் கொண்டு பொருள் ஈட்டி, என் பெற்றோரை அவர்கள் பட்டுக் கொண்டிருந்த கஷ்டங்களிலிருந்து முற்றாக வெளிவிக்க இயலும் என்று நான் நம்பியது!
இங்குதான் நம்பிக்கையின் பிரதிபலனை உணர வேண்டியிருக்கிறது. நம்பிக்கை எந்த வடிவத்தில் உருக்கொண்டாலும் அது ஒருபோதும் பொய்ப்பதே இல்லை.
அந்தக் கால எஸ்.எஸ்.எல்.சி (பத்தாம் வகுப்பு) மட்டுமே படித்த தாய், தகப்பனின் மூத்த மகனான என்னாலும் ஓடிக்கொண்டிருக்கும் பெருநகரத்து நெரிசலிலிருந்து மீண்டுவர முடிந்திருக்கிறது.
வசந்தகுமாரி என்பதுதான் அம்மாவின் பெயர். ஆனால், வசந்தம் என்ற சொல் அம்மாவின் அகராதியில் வறுமையாகவும் அழுகையாகவும் அமைந்திருந்தன.
பரமசிவம் என்ற பெயருடைய ஒருவர் நாத்திகத்தை நம்புகிறவராகவும் எனக்கு அப்பாவாகவும் இருக்க நேர்ந்தது.
அப்பா அம்மாவின் முன்கதை சுருக்கங்கள் எந்த வகையிலும் என் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை. அவர்கள் அடைந்த சங்கடங்கள் முழுக்கவும் என் சகாப்தத்திற்கான படிக்கட்டுகளாக மாறிவிட்டன. ஆரம்பத்தில் பஞ்சாலைத் தொழிலாளியாக இருந்த அப்பா படிப்படியாக தொழிற்சங்கவாதியாகி, பொதுவுடமைக் கட்சிக்கு தன்னை ஒப்படைத்திருந்தார்.
என் பிறப்புக்கு சில வருடங்கள் பின்பாக, அவர் முழு நேரக் கட்சி ஊழியராக மாறிப்போனதால், வருமானமில்லாத வாழ்வை நகர்த்த அம்மா பெரும்பாடு பட்டிருக்கிறார். உலகம் முழுமைக்கும் சமத்துவம் என்ற கோஷத்தை முன்வைக்கும் அவருடன் இல்லத்துணைவியாக மாத்திரமே அம்மா இருந்திருக்கிறார்.
உள்ளத் துணைவியாக அப்பாவுக்கு கட்சியும், கட்சி நடவடிக்கைகளும் என்றாகிவிட்டது. எனவே சதா அலமாரியிலிருக்கும் கம்யூனிஸ நூல்களில் அவர் காலம் விரயமானது. படிப்பது, படித்ததை மற்றவர்க்கு விளக்கமாக உரைப்பது, என்பதோடு அவரது செயல்பாடுகள் அத்தனையும் பொதுச்சேவைக்கானவை, மக்களுக்கானவை!
1980-களில் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசுபொருளாக இருந்தது ஈழப்பிரச்னை. சில மைல்களுக்கு அப்பால் உள்ள இலங்கைத் தீவில் தமிழர்கள் இனப்படு கொலைக்கு ஆளாகி, இன்னலில் உழல்வதை, இங்கிருக்கும் அத்தனை இயக்கங்களும் வன்மையோடு கண்டித்து ஊர்வலும் ஆர்ப்பாட்டமும் நடத்தின. தமிழ் இன உணர்வு பொங்கிப் பிரவகித்த வருடம் அது!
பள்ளிக்கூடங்களில் கூட அந்தப் பிரச்னையின் எதிரொலியைக் கேட்க முடிந்தது. ஆசிரியர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவும் உடுப்பும் சேகரித்துக் கொடுத்தார்கள். மருந்து மாத்திரைகள் வசூலித்து அனுப்பப்பட்டன.
பிரச்னையின் முழு வீரியம் தெரியாவிடினும், ஏதோ அசம்பாவிதம் நடந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் என் வயது சிறார்களுக்குத் தெரியவந்தது.
பத்திரிகையை, அதாவது வார தின பத்திரிகையை தவறாமல் வாசிக்கும் பழக்கம் அப்பா மூலம் எனக்கும் தொற்றிக் கொண்டது. பத்தி, பத்தியாகப் புகைப்படங்களோடு வரும் அச்செய்திகள் மூலம் இலங்கையில் நடக்கும் இனப்பிரச்னையைப் பற்றி என்னாலும் யூகிக்க முடிந்தது.
மேலதிக தகவல்களை அப்பா ஏதோ ஒரு சமயத்தில் விளக்கப்படுத்தினார். என் வீட்டின் சின்ன ஜன்னல் வழியே, உலகத்தின் சகல திசைகளையும் உணர அப்பாவே உதவினார்.
அப்பாவின் நண்பர்கள் பலரும் சிவப்பு சிந்தனைகளால் பழுத்தவர்கள். பொதுவுடைமைக் கட்சிக்கு தம் பங்களிப்பை செலுத்த அப்பாவால் பணிக்கப்பட்டவர்கள். தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்றும் பொதுவுடமைகைக் கட்சியே தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பை பெற்றிருப்பதற்கு இவர்களே காரணம் என்றால் அது மிகையில்லை.
பத்திரிகைகளைப் போலவே பலதரப்பட்ட இயக்கத் தோழர்கள் எங்கள் வீட்டில் புழங்குவார்கள். கட்சிப் பாகுபாடு இல்லாமல் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தரும் ஜனநாயக மரபுக்கு, அப்பாவும் அப்பாவின் நண்பர்களும் பழகியிருந்தார்கள்.
வாசித்த நூல்கள் தொடங்கி, வரப்போகும் மாற்றங்கள் வரை எங்கள் வீட்டு முற்றத்தில் விவாதித்துக் கொண்டிருப்பார்கள்.
அவ்வப்போது தே·ர் கொண்டுபோகும் சாக்கில் நானும் அம்மாவும் அந்த உரையாடல்களால் ஈர்க்கப்பட்டிருக்கிறோம்.
ஈர்ப்பின் எதிர்வினையை விடவும் அந்த உரையாடல்கள் நடத்தும் பாடங்கள் ருசிகரமானவை.
எதைத்தான் அவர்கள் பேசவில்லை?
இலக்கியம் என்றால் சங்கம் தொடங்கி சமகாலம் வரை அலசுவார்கள். அரசியல் என்றால் மார்க்ஸ் தொடங்கி பெரியார் வரை உசாசுவார்கள்.
இந்தப் பூமியின் அத்தனை புதிர்களையும் அவிழ்த்துவிடும் ஆவேசப் பேச்சில் தன்னை இழந்து கொண்டிருப்பார்கள்.
சமயத்தில் வாதங்கள் விதண்டவாதங்களாகிவிடுவதும் உண்டுதான். தோழர்கள் இரண்டு பேர் காட்டமாக பிரச்னையின் நுட்பம் புரியாமல் விவாதித்துக் கொண்டிருக்கையில் அப்பா சொல்வார்: "வாதங்கள் பிரச்னையை அலசுவதாக அமையவேண்டுமே தவிர, நட்பை பிரச்னையாக்கிவிடக் கூடாது."
தெளிவுகளை மிகச்சரியாக வெளிப்படுத்தும் ஒருவர் எனக்கு அப்பாவாகக் கிடைத்தது நான் செய்த புண்ணியம்.
வீடுதான் நம்மை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரமான பாடசாலை.
பரீட்சை பயமில்லாமல் தன் இஷ்டப்படி விரும்பும்போது படித்து தேறும் இடம்.
ஒழுங்குகளை உடன் வரப்போகும் தைரியங்களை இயல்பாக்கிக் கொள்ளும் இடம்.
வசதிகுறைந்த வீடு என்றாலும்கூட, எங்கள் வீட்டின் விசாலமும் நிறைந்தே இருக்கும் நட்புறவுகளும் என்னை வளப்படுத்திய வரங்கள்.
வீட்டுக்கு வந்து அப்பாவோடு விவாதிப்பவர்களின் முகங்களை அவர்களின் வாயசைப்புகளை கவனிக்கும் இடத்தில் இருந்த நான், நாளடைவில் அந்த விவாதங்களில் பங்கேற்கவும் கூடுதலான தெளிவு பெறவும் வாய்ப்பு ஏற்பட்டது.
சின்னச்சின்ன வாக்கியங்களைச் சேர்த்து கவிதைபோல் கிறுக்கி அம்மாவிடம் காண்பிக்கத் தொடங்கினேன்.
அரசுப் பள்ளிகள் எங்கள் பகுதியில் இல்லாததால், ஆங்கில வழிப் பள்ளியில் சேர்ப்பிக்கப்பட்டிருந்தேன்.
வீடு முழுக்க தமிழ். ஆனால் என் கல்வி ஆங்கில வழியில் நடந்தது!
மெக்ஸ்வெல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாவது தேறியபோது, எப்படியோ எனக்குள் கவிதைகளும், கவிதை மீதான பிரியமும் குவிந்துவிட்டன.
இன்றும் நான் நம்புவது; என் கவிதைக்கான காரணப் பொருள்கள் வீட்டில் நடந்த விவாதங்களே!
சமூகத்தின் மீது அவ்விவாதங்கள் வைத்த விமர்சனமும், எதிர்வினையுமே என்னைக் கவிதை எழுதத் தூண்டின.
அப்பா தீவிரமான நாத்திகர், அம்மா மிகத் தீவிரமான பக்தை!
இரண்டொரு சந்திப்பிலேயே எவரையும் தன் கருத்துக்கு மாற்றிவிடக்கூடிய வல்லமை பொருந்திய அப்பா, இன்றுவரை அம்மாவின் நம்பிக்கைக்கு குறுக்கே நின்றதில்லை.
போலவே, அப்பாவின் புரட்சிகர நம்பிக்கைக்கு அம்மாவும் ஊறு செய்யத் துணிந்ததில்லை.
இரண்டு துருவங்களாக அவர்களது நம்பிக்கைகள் இருந்தபோதிலும் கூட, தனித்தனி கொள்கைகளோடு இல்லற நெருக்கத்தில் அவர்களால் இயங்க முடிந்தது.
அம்மாவுக்கு எல்லா பிள்ளைகளையும் போல நான் இருப்பதில் விருப்பமில்லை. நான் தனித்து தெரிய வேண்டும். தரமும் ஒழுங்கும் கூடின அதே சமயம் தனித்துவமான பிள்ளையாக என்னை வளர்த்திருப்பதில் அம்மா காட்டிய அக்கறையும், அதற்காக அடைந்த அவஸ்தையும் கொஞ்ச நஞ்சமல்ல.
பாடப் புத்தகங்களைத் தவிரவும், நான் படிப்பதற்கென்றே தன் தேவைக்கு வைத்திருக்கும் செருவாட்டுக் காசுகளைச் செலவழிப்பாள்.
படிப்பதைப் பற்றியும் படித்த பிறகு அவ்விஷயங்கள் குறித்து பேசவும் அம்மாவுக்குப் பிடிக்கும்.
அப்பாவுக்குப் பெரியார் என்றால், அம்மாவுக்கு பெரியாழ்வார்!
முரண்கள் உருவாக்கிய முழுமை என்னைக் கவிதைப் பக்கம் திருப்பியது.
இலங்கை இனப்பிரச்னை பற்றி 'ஈழ இயக்கம்' என்றொரு கவிதை எழுதி அம்மாவிடம் காட்டினேன்.
கவிதை என்று நான் சொல்வது என் வசதிக்காக!
ஒற்றுப் பிழைகள் நிறைந்த அந்தக் கவிதைக் கிறுக்கலை அம்மா திருத்திக் கொடுத்தாள். அதுவரை என் இயற்பெயர் பிரேம்குமார் என்றிருந்தது. அம்மாவுக்கு அப்பெயர் கவிதை எழுதுவதற்கான பெயராகத் தோன்றவில்லை.
'புனைப்பெயர் வைத்துக் கொள்' என்றார்.
'பெயரில் என்ன இருக்கிறது?' என்றேன்.
'பெயரில்தான் எல்லாம் இருக்கிறது' என்றார்.
இன்றும் அம்மா அப்படிச் சொன்னதற்கான பொருள் விளங்கவே இல்லை.
பெயரில் ஏதாவது இருக்கிறதா என்ன?
- பயணம் தொடரும்.

3 comments:

said...

ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன்..

//சமருக்காக//

சமர் என்றால் என்ன?

said...

எனது அப்பாவை நினைவுபடுத்துகிறார் உங்களுடைய அப்பா... என் அப்பா தோழர் என்பதாலேயே நானும் தோழர்.வாய்ப்பிருந்தால் இதை படித்து பார்க்கவும்.http://www.parithimazhai.blogspot.com/#!/2011/09/blog-post.html

said...

மிக நன்றாக உள்ளன...