நடைவண்டி நாட்கள் : பதிமூன்று

ந்தப் பிரயத்தனமும் இல்லாமல் எனக்கு வேலை கிடைத்ததுபோல் தோன்றினாலும், கிடைத்த வேலையைத் தக்க வைத்துக் கொள்ள இயலுமா என்பது சந்தேகமாகவே இருந்தது.
எந்த வேலை என்றாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும் என்று கருதுகிறவன் நான். பத்திரிகை துறை குறித்த முன் அனுபவம் ஏதும் இல்லாமல் மீதமுள்ள காலங்களை எப்படி நகர்த்திக் கொண்டு போவேனோ என்ற அச்சம் தொற்றியது.
என்னை நான் தேற்றிக்கொள்ள ஏதுவாக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வேன். அல்லது நல்ல நண்பர்கள் என்னை தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். யோசித்துப் பார்த்தால் அந்தந்த காலகட்டத்தில் என்னை நல்வழிப்படுத்தியவர்களும் நல்ல வழி நோக்கி மடைமாற்றி இருப்பவர்களும் நண்பர்களாகவே இருக்கிறார்கள்.
அம்பேத்கர் விடுதியில் கிடைத்த நண்பர்களைப் போல பத்திரிகை துறையிலும் நல்ல நண்பர்கள் வாய்த்தார்கள். பத்திரிகை துறையில் வெறியோடு செயல்படும் பலரும் எனக்கு நட்பின் சுவையை உணர்த்தினார்கள். பத்திரிகை அலுவலகம், முற்றிலும் வித்தியாசமான களம்.
அலுவலகப் பயனிலிருந்து பத்திரிகை நிறுவனர் வரை அத்தனை பேரின் எண்ணமும் ஒன்றாக ஒருமித்து இருந்தாலன்றி அப்பத்திரிகை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற இயலாது.
என் பத்திரிகை ஆசிரியர் வித்யாசங்கர் ரொம்பவே பத்திரிகை துறையின் நுட்பங்களை அறிந்தவர். ஏற்கனவே நக்கீரன் என்ற பத்திரிகையை பெரும் வெற்றிக்கு இட்டுச் சென்ற அனுபவம் மிக்கவர். புலனாய்வு இதழின் அரிச்சுவடியை நன்கு கற்று அதைப் பலமடங்கு உயர்த்தியும் காட்டியவர். தன்னை நிரூபிக்க அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அவர் கண்களில் தெறிக்கும். அலுவலகத்திற்கு வருகிறவர்கள் சொல்லும் எந்தக் கருத்தையும் உதாžனப்படுத்தாமல் உள்வாங்கிக்கொண்டு அதைச் சாதுரியமாக வெளிப்படுத்தும் இயல்பை அவர்போல வேறொருவரிடம் நான் கண்டேனில்லை. அதிக பத்திரிகைகளில் நான் பணியாற்றியதில்லை. எனினும் அவர் ஒருவரே சகலத்திலும் கெட்டிக்காரர்போல எனக்குத் தோன்றுவதுண்டு.
'ராஜரிஷ’' பத்திரிகையில் நான் அறிவிக்கப்பட்ட உதவி ஆசிரியராக ஆனதும் ஆசிரியர் எனக்குக் கொடுத்த முதல் 'அசைன்மென்', வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜானிடம் சென்று கேள்வி, பதில் வாங்க வரவேண்டும்.
வாசகர்களின் கேள்விக்கு வலம்புரியார் பதில் சொல்லும் பொறுப்பை ஏற்றிருந்தார். கட்டுக்கட்டாய் வரும் தபால் அட்டைகளை கையில் எடுத்துக் கொண்டுபோய், அவரிடம் ஒவ்வொரு கேள்வியாக வாசித்தால் வலம்புரியார் உடனுக்குடன் பதில்களைத் தருவார். அதை எழுதிக்கொண்டு வந்து செப்பனிட்டு, நான்கு பக்கங்களை தயாரிக்க வேண்டிய பணி என்னுடையது.
கிரியேட்டிவ் ஆக அந்தப் பக்கங்களில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆசிரியர் குறுக்கிடமாட்டார். அந்த வருடத்தில் அகில இந்திய ரீதியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பு இருந்தது. கூட்டணிக் கட்சிகள் ஒத்துழைக்க மறுத்ததால் அவ்வாய்ப்பு மூப்பனாருக்குக் கிடைக்காமல் போனது.
அப்போது தமிழ் மாநில காங்கிரசில் கொள்கைப் பரப்புச் செயலாளராக வலம்புரியார் இருந்தார். வாய்ப்பு மூப்பனாருக்குக் கிடைக்காமல் போனதுபற்றி வாசகர்களிடமிருந்து கேள்வியை எதிர்பார்த்தேன். ஒருவரும் கேட்டிருக்கவில்லை. நானே ஒரு கேள்வியை தயாரித்து முதல் கேள்வியாகக் கேட்டேன்.
'மூப்பனார் பிரதமராக முடியாததற்கு யார் காரணம்?'
வலம்புரியாரின் வீட்டை பிரமிக்காமல் அவ்வழியைக் கடக்க முடியாது. அத்தனை பிரமாண்டமான வீடு அது.
அறை நிரம்ப நூல்கள். பத்து பல்கலைக்கழகத்துக்கு தேவையான நூல்களும் அங்கே இறைந்து கிடக்கும். புத்தகக் கட்டுகளுக்கு நடுவேதான் அவர் அமர்ந்திருப்பார். மெல்லிசான மேலாடையில் காட்சி அளிக்கும் அவர் என்னைப் பாரதி என்ற பெயருக்காக ரொம்பவே மதிப்பார். அவர் கீழே அமர்ந்துகொண்டு என்னை இருக்கையில் அமரப் பணிப்பார். நாகரிகம் கருதி ஒருமுறை நானும் கீழே அமர முற்படும்போது, 'பாரதி யாருக்காகவும் தன்னைச் சுருக்கிக் கொண்டதில்லை. ·யும் அப்படியே இரு' என்று தோள்களைத் தட்டி, 'கம்பீரம் வேண்டாமா பாரதிக்கு' என்று கடவாய் புன்னகையோடு கடிந்து கொண்டார்.
மூப்பனார் பிரதமர் ஆக முடியாததற்கு யார் காரணம்? என்ற கேள்வியை எழுப்பியதும், அது வசிஷ்டருக்கும் விசுவாமித்தரருக்கும் இடையே நிகழும் யுத்தம். காலம் தர வேண்டிய பதிலுக்கு கடைக்கோடி மனிதன் காத்திருக்கிறான் என்றார்.
பதிலைச் சொல்லிவிட்டு, 'பதில் புரிகிறதா?' என்றார்.
'புரிகிறது' என்றேன்.
'வசிஷ்டர், விசுவாமித்திரர் ஒப்புமை அற்புதம்' என்றேன்.
'· கெட்டிக்காரன். வயது என்ன ஆகிறது?' என்றார்.
சொன்னேன்.
'அப்ப அரசியல் ஈடுபாடு உடையவரா?' என்றார்.
'ஆமாம்' என்றேன்.
'இது உன் கேள்விதானே, நல்லது. அடுத்த என்ன கேள்வி?' என்றார்.
எனக்கு தூக்கிவாரிப்போட்டது.
கேள்வியை நான் தயாரித்தது அவருக்கு எப்படி தெரிந்தது என்ற குழப்பம் புறமிருக்க, அலுவலகத்தில் இதனால் என் மீது ஏதாவது பிராது ஏற்படுமோ எனவும் அஞ்சினேன்.
காரணம் பத்திரிகை நிறுவனர், தமிழ் மாநில காங்கிரஸ் அனுதாபி. மூப்பனாரின் மிக நெருங்கிய நண்பர்களில் ஒருவர்.
வலம்புரியார் என்னை மெச்சியது மகிழ்ச்சியாய் இருந்தது. அவரிடம் எதுபற்றியும் கேட்கலாம். அண்டத்தில் உள்ள அத்துனை விஷயங்களையும் அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்து வைத்திருப்பவர். புள்ளி விவரம் என்று நாம் பேச்சுக்கு சொன்னால், புள்ளிக்கு எத்தனை விபரங்கள் இருக்கின்றன என சொல்லத் தொடங்குவார்.
கவிஞர்களின் காதலனாகவும் அவரே கவிஞனாகவும் இருந்ததால், வித்யாசங்கரையும் என்னையும் நேசிப்பார். அவ்வப்போது தனக்குத் தோன்றும் மின்னல் பொறிகளைப் பகிர்ந்து கொண்டு கருத்து கேட்பார்.
வார்த்தைகள் அவரது கட்டளைக்குக் காத்திருக்கும்.
'பாரதி, மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளித்தவன்' என்று மிகை உணர்ச்சி வார்த்தைகளை மிக இயல்பாக உதிர்பார். ஆச்சரியமாக இருக்கும்.
அவரைக் கொடியில் தொடங்கி அம்மாவின் தொப்புள் கொடி வரை அவரால் தொடர்புபடுத்தி வார்த்தைகளைப் பரிமாற முடியும். வெறும் எதுகை மோனை விளையாட்டு இல்லாமல் அவ்வார்த்தைகளுக்கு இடையே கருத்துக்களையும் கவனமாகக் கோர்க்கும் வித்தை அவருக்குக் கைவந்த கலையாய் இருந்தது.
பத்திரிகை துறையில் முதல் மாதத்தை ஓட்ட நான் பட்ட சிரமம்தான் வாழ்வில் நான் அறிந்து பட்ட பெரும் சிரமம்.
சம்பளம் வாங்குவதற்குள்ளான ஒரு மாதத்தை ஓட்ட, நான் பட்டபாடு, நாய் பட்ட பாடு!
காலையில் விடுதி நண்பர்கள் யாராவது என் உடுப்புகளை அவர்கள் காசில் அயர்ன் செய்து தருவார்கள். தலைக்கு எண்ணெய், žப்பு என்றைக்காவது முகத்துக்குப் பவுடர் எதுவும் என்னிடம் இருக்காது. எல்லாம் உபயதாரர்களின் செலவுதான். வாழ்க்கையே இன்னொருவரின் உழைப்பில் என்னும் அளவுக்குப் போய்விட்டது. சரவணனிடம் மனம்விட்டுப் பேச முடியாத அளவு பணிச்சுமை வேறு!
பத்திரிகை துறையில் முன் அனுபவம் எதுவும் இல்லாமல் சேர்ந்த ஒருவனுக்கு நேரும் அத்தனை கஷ்டங்களையும் அனுபவித்தேன்.
பொது இடத்தில் ஒரு பத்திரிகையாளன் நடந்து கொள்ள வேண்டிய அடிப்படை கூட தெரியாமல் திக்குமுக்காடினேன். இன்னொரு புறத்தில் லௌகீக கஷ்டம்!
அம்மாவுக்கு விடுதி முகவரியிலிருந்து ஒரே ஒரு கடிதம் எழுதினேன். நன்றாக இருப்பதாக பொய்யாக நான் எழுதிய கடிதத்துக்கு அம்மா எழுதிய பதில் கடிதம் கண்­ரை வரவழைத்தது.
அலுவலகத்தில் எனக்குப் பூரண சுதந்திரம் இருந்தது. அரவிந்தன் என் வயது ஒத்த உதவி ஆசிரியர். அவன் அன்பை வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுத்துவான். என் வறுமை அவனுக்குத் தெரிய வந்த நாளிலிலிருந்து தினசரி மதிய உணவை அவன் வீட்டிலிருந்தே எடுத்து வரத் தொடங்கினேன். காலையும் இரவும் வேறு யாராவது கவனித்துக் கொள்வார்கள். அவர்கள் கவனிக்க மறக்கும் நாளில் மதியம் மட்டும் அரவிந்தன் அன்பில் நெகிழ வேண்டியிருக்கும். எங்கு போனாலும் கால்நடைதான். கண்களில் வெறியும், கால்களில் ஆணவமும் நிரம்பிய ஒரு பரதேசியைப் போல என் செயல்கள் அமைந்திருந்தன.
ஒருமாதம் முடியப் போகிறது. நாளை சம்பளம்!
விடுதி நண்பர்களிடம் இரவே சொல்லி வைத்திருந்தேன். நாளை எல்லோரும் நல்ல கடைக்குப் போய், பிரியாணி சாப்பிடுவோம்!
- (பயணம் தொடரும்)

4 comments:

said...
This comment has been removed by the author.
said...

யுகப்பாரதி, மிக அருமையாக எழுதி இருக்கிறீர்கள்... ஒரே மூச்சில் படித்துபார்த்தேன். இயல்பான நடை. என்னைபோன்ற கிராமத்து ஆட்களின் வாழ்வியல் சூழலை காட்டி இருந்தது நெகிழ்வு.

லெனின், சென்னை.

said...

hallo
vannakkam mr barathi.nan akila from jeyamkondam.ippothu familyyotu australiyavil vasikkiran.ungalin blog miss pannamal patikkiran .keep it up goodluck.
akila.
brisbane.
australiya.

said...

வணக்கம் யுகபாரதி
வார்த்தைச் சித்தரின் பதிலில் பல அர்த்தங்கள் இருக்கின்றன. ஆனாலும் ஒரு தமிழர் பிரதமர் ஆக இருந்த வாய்ப்பு நழுவியது துரதிஷ்டமே.