நடைவண்டி நாட்கள்: ஐந்து

கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளிர்காற்றை வாரி இறைத்தபடி பேருந்து மெரீனாவை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய கடற்கரையைப் பார்க்க போகிறோம்.
கடல், சமயத்தில் அலை கொலுசைக் கட்டிக் கொண்டு ஆடும் ·ர்ப்பெண் போல எனக்குத் தோன்றும்.
கடல் பார்ப்பது ஒன்றுதான் சென்னை நகர மக்களின் ஒரே ஆறுதல். அன்றாடப் புழுக்கங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள, கடல் உதவுகிறது போல!
ஒரு குழந்தைக்குச் சொல்வதுபோல, கடல் குறித்த சிலாகிப்புகளை சரவணன் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தான்.
நடத்துனரோடு பேசிக்கொண்டிருந்த பெண்ணின் சிரிப்பொலி, கடலையும் எங்களையும் உதாžனப்படுத்தியது.
காதலிக்கும் காலங்களில் வாயும் காதும் உலகை மறந்துவிடுகின்றன. என்னதான் பேசுவார்களோ?
பேசிக்கொண்டே வந்த நடத்துனரும் மாணவியும் குழைந்த குழைவு பின் இருக்கையில் அமர்ந்திருந்த எங்களைப் பெருமூச்சிட வைத்தது.
எதிர்பாராமல்தான் யாவும் நடக்கின்றன!
புது இடத்தில் சிலர் கண்முன்னே தயக்கமோ வெட்கமோ இல்லாது, நடத்துனரின் உதடை அப்பெண்ணின் உதடு முத்தமிட்டது. அதிர்ச்சி அப்பிக் கொள்ள நானும் சரவணனும் பேயறைந்ததுபோல பார்க்க வேண்டி வந்தது.
நகரத்தின் கலாச்சார மாண்புகள் எங்களை ஓங்கி அறைந்த முதல் அறை அது!
ஆணும் பெண்ணும் சிநேகிக்கும் அரிய சந்தர்ப்பங்கள் எங்கள் இருவருக்கும் வாய்த்ததில்லை. இரண்டாவது நிறுத்தத்தில் நாங்களே இறங்கிக் கொண்டோம். கடல் தெரிந்தது.
கடற்கரை நெடுக அங்குமிங்குமாக குடைக்குள் இரண்டிரண்டு பேர் அமர்ந்திருந்தார்கள். குடை இல்லால் சிலரும், துணை இல்லாமல் பலரும் கடலை வெறித்துக் கொண்டிருந்தார்கள்.
"சென்னையில் பிறந்து வளர்ந்திருப்போமேயானால் நமக்கும் குடையோ, துணையோ கிடைத்திருக்கும் இல்லையா" என்றான் சரவணன்.
இதைப் பற்றியெல்லாம் எதற்குப் பிதற்றிக் கொண்டோம் எனத் தெரியவில்லை.
தங்குவதற்கு இடமில்லாமல் தவித்துத் திரிகிற முதல் நாள் சென்னை - காதல் நிரம்பிய பூமியாகக் காட்சியளித்ததை என்னவென்று சொல்வது?
'கண்ணதாசன் முதன் முதலில் சென்னை வந்து நம்மைப் போலவே தங்க இடமில்லாமல் கடற்கரையில்தான் வந்து அமர்ந்திருந்ததாக வனவாசத்தில் எழுதியிருக்கிறார் தெரியுமா?' என்றேன்.
நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலோ எதிரிலோ அமர்ந்திருக்கக் கூடும்.
வருடங்களைப் பின்னோக்கிப் பார்ப்பதில் உள்ள சுகம் முன்னோக்கிப் பார்ப்பதில் இல்லை. நடவாததை நினைப்பதைவிட, நடந்ததை நினைத்துப் பார்ப்பது சிலிர்ப்பூட்டுகிறது. அது, யாருக்கு நடந்திருந்தாலும் நமக்கு நடந்ததுபோல பாவித்துக் கொள்வது மேலும் சுகம்.
கைக்கு கிடைத்ததைக் கொறிப்பதுபோலவே, வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டிருந்தோம். பூமியில் இருந்து நாங்கள் மட்டும் துண்டாக விலக்கப்பட்டு, வேடிக்கை பார்க்கும் நிலையில் இருந்தோம்.
இல்லை! எங்கள் மனதும் சூழலும் அப்படி கற்பனை செய்து கொண்டது.
இருட்டத் தொடங்கியது. சுருள் சுருளாக மேகமூட்டம் 'இங்கிருந்து கிளம்புங்கள்' என்றது.
இருட்டு நெருங்க நெருங்க தண்டிக்கப்பட்ட பிராணிகள்போல எங்கள் முகம் மாறிக் கொண்டிருந்தது. சுந்தரபுத்தன் தந்திருந்த விடுதி முகவரி நோக்கி நகர்ந்தோம். வாசலைத் தொட்டதும் முகப்பில் 'வேர்ல்ட் யூனிவர்சிடி ஆர்கனைசேஷன்' என்ற பலகை தென்பட்டது.
விடுதியின் அமைப்பு, சுந்தரபுத்தன் பத்திரிகை செல்வாக்கை காட்டுவதாகப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் தங்கும் உயர்தரமான இடத்தில் நமக்கு யார் இடம் தரப்போகிறார்களோ?
விடுதியில் மேற்படிப்பு மாணவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். 'தங்கமணி' என்ற மாணவரின் அறையில்தான் சுந்தரபுத்தன் தங்கியிருந்தார். வாசலில் வெகுநேரமாகக் காத்துக் கொண்டிருந்தோம்.
'புத்தனுக்கு தொலைபேசுவோமா?' என்றேன்.
'அலுவலகத்திலிருந்து கிளம்பியிருப்பாரே' என்றான்.
கைத்தொலைபேசி அன்றைக்கு இன்றுபோல் எல்லோரிடமும் இல்லாத காலம். வசதி மிகுந்தோர் மட்டுமே வைத்துக் கொள்ள இயலும். விடுதிக்கு எதிரே நெடுஞ்சாலை. பேருந்துகள் மனிதர்களைச் சுமக்கும் கழுதைகளைப்போல நடந்தன!
பேருந்துகள் அத்தனையிலும் நெரிசல் பிதுங்கின. கடைகோடி மனிதர்களின் ஒரே போக்கிடம் பேருந்துதான் என்பதை கூட்டம் கூட்டமாய் படிக்கட்டுகளில் தொங்கியவர்கள் உணர்த்தினார்கள்.
இரவு பத்துமணி வாக்கில்தான் சுந்தரபுத்தனின் தரிசனம் கிடைத்தது. திடீரென்று அலுவலக வேலை நிமித்தம் ஒருவரைப் பார்க்க நேர்ந்ததாகவும் தவறாகக் கருத வேண்டாம் எனவும் பேச்சைத் தொடங்கினார்.
அசதி அவர் முகத்தில் கொப்பளித்தது. வேலை மனிதனைக் கசக்கிப் பிழிகிறது.
வெறுமனே காத்திருந்த சோர்வை அவரிடம் நாங்கள் வெளிப்படுத்த விரும்பாமல், பொய்ச்சிரிப்பை முகத்தில் உமிழ்ந்தோம்.
'இங்கேயே இருங்கள். வந்து அழைத்துப் போகிறேன்' என்று மேல்தளத்திற்குப் போனார்.
எங்களைவிட புத்தன் எல்லா விதத்திலும் ஒருபடி மேலேயே இருப்பதாக நினைத்துக் கொண்டோம்.
'வாருங்கள்' என்று அழைத்துப்போய், இரண்டாம் தளத்தில் உள்ள அறையைக் காட்டினார்.
'இரண்டொரு நாளில் வேறு ஏற்பாடு செய்து கொள்வோம்' என்றார்.
அந்த அறைக்கு எவ்விதத்திலும் எங்கள் முகமும் உடையும் பொருத்தமில்லாமல் இருந்தது. காத்திருந்த நேரத்தில் சாப்பிட்டிருக்கலாம். வந்துவிடுவார் என்ற எண்ணத்தில் முடியாமல் போனது.
'லட்சிய வெறியில் உள்ளவர்கள் சாப்பாட்டுக்குப் பெரிய மதிப்பு கொடுப்பதில்லை' என்றான் சரவணன்.
என்ன லட்சிய வெறியோ?
'எனக்குப் பசிக்கிறது' என்றாலும் எதுவும் கிடைக்கப் போவதில்லை. சரிதான் என்பதுபோல மையமாக தலையசைத்து மௌனமானேன்.
நல்ல அறை. கைப்பைகளை கிடத்திவிட்டு ஆயாசமாக மல்லாந்தோம்.
அடித்துப் போட்டது மாதிரி உடல் வலியெடுத்தது. பசி தூக்கத்தை தின்னத் தொடங்க, புரண்டு புரண்டு தேகத்தை சுருக்கிக் கொண்டிருந்தோம்.
புது இடம், தூக்கம் பிடிக்கவில்லை. புத்தனின் கருணையை மெச்சி மெச்சி நேரத்தைப் போக்கத் துணிந்தோம். பிறகு இருவருமே தூங்கியதுபோல நடிக்க ஆரம்பித்தோம்.
நன்றாக விடிவதற்கு முன்பாகவே எங்கள் அறைக்கதவு தட்டப்பட்டது. புத்தன் நின்றிருந்தார்.
'நான் அலுவலகம் கிளம்ப வேண்டும். உங்கள் பைகளை என் அறையில் வைத்துக் கொள்ளுங்கள். அறையை வாட்ச்மேனிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும் இந்த அறையில் மாணவரோ ஆசிரியரோ அல்லாத வெளி நபர்கள் தங்க அனுமதிக்கமாட்டார்கள். விருந்தினர்கள் என்றால் காப்பாளரிடம் அனுமதி கேட்டு இரண்டொரு நாட்கள் தங்கலாம். இப்போதைக்கு குளித்துவிட்டு ஏதாவது வேலை இருந்தால் கவனியுங்கள். மாலை சந்திப்போம்' என்று விடைபெற்றார்.
புத்தன் கடந்துபோகவும், வாட்ச்மேன் எதிரே வரவும் சரியாக இருந்தது.
வாட்ச்மேனை கும்பிட்டோம். இதற்கு முன் இப்படியொரு வணக்கத்தை யாருமே அவருக்கு வைக்காததுபோல வளைந்து நெளிந்து தலைசொறிந்தார்.
போக்கிடம் எதுவும் இல்லாது இப்பெரும் நகரத்தில் யாரைப் போய்ப் பார்ப்பது?
ரயில்வே žனிவாசனுக்கு தொலைபேசி சந்திக்க விரும்புவதாகச் சொன்னதும், அவர் தந்த அலுவலக முகவரிக்குப் புறப்ப்டோம்.
சென்னையின் நெருக்கடியை பழகிக் கொள்ள தானும் ஆரம்பத்தில் அல்லலுற்றதாகத் தெரிவித்தார். பேச்சு கவிதை நோக்கியும், கனவு குறித்தும் போனது.
žனிவாசனுக்கு கவிதை சிகரத்தை எட்டிப் பிடிக்கும் வெறி இருந்தது. குடும்ப சூழல் காரணமாகவே தான் கைதி போல வாழ்ந்து கொண்டிருப்பதாகப் பொருமினார்.
சரவணனுக்கு இப்போதெல்லாம் புகைக்கும் ஆசை பெருமளவு குறைந்து போயிருக்க வேண்டும். நொடிக்கொரு சிகரெட் தேடும் சரவணனின் விரலும் உதடும் விட்டேத்தியாயின!
அவரை ·ண்ட நேரம் தொந்தரவு செய்யாமல், வேலை இருப்பதுபோல பொய்யாகக் காட்டிக் கொண்டு நடக்கத் தொடங்கினோம்.
சென்னை நகரின் முட்டுச்சந்துகள், மூத்திரச் சந்துகள் என எங்களின் கால்கள் ஒரு நாள் முழுக்க இலக்கில்லாமல் நடந்து ஓய்ந்தன.
மர நிழலைக் கண்டால் அமர்வதும், மனிதர்கள் வந்தால் நகர்வதுமாக பொழுது முழுக்க அலைந்தோம்.
தே·ருக்கும் அவ்வப்போது சிகரெட்டுக்குமாக அவ்வப்போது இருந்த பணத்தை இழந்து கொண்டிருந்தோம்.
காலை ஒரு கையேந்தி பவனில் சாப்பிட்டது. மாலை நான்கு மணி வாக்கில் மீண்டும் பசியெடுக்க, டீக்கடை பன்னுக்குள் இரைப்பையை நிரப்பினோம்.
'செல்வம் சித்தப்பா மாதிரியான பேர்வழிகளை இனியொரு தரம் நம்பி மோசம் போகக்கூடாது' என்றான் சரவணன்.
பாவம் அவருக்கு என்ன சிக்கலோ?
சித்தப்பா நேர்த்தியான ஓவியர். பத்திரிகை துறையில் லே அவுட் ஆர்ட்டிஸ்டாக பணிபுரிவதாகச் சொல்லியிருந்தார். நிச்சயம் பத்திரிகை வட்டத்திற்குள்தான் இருக்க வேண்டும்.
புத்தன் உதவியோடு ஒவ்வொரு பத்திரிகையின் தொலைபேசி எண்ணையும் வாங்கி தொடர்பு கொள்வோமே? என்றேன்.
சரவணனுக்குப் பெரிய ஆர்வமில்லை. என் பிடுங்கல் தாங்காமல் ஒப்புக் கொண்டான்.
இறுதிவரை சித்தப்பா பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. கையில் வைத்திருந்த கவிதை ஆல்பத்தை தூக்கிக்கொண்டு ஒவ்வொரு அலுவலகமாக வேலை கேட்கத் தொடங்கினோம்.
பத்திரிகை அலுவலகத்திற்குள் பிரவேசிக்க முடியாத விசேஷ ஜந்துக்களாக நாங்கள் நடத்தப்பட்டோம்.
இரவு நெருங்கிக் கொண்டிருந்தது. விடுதி வளைவுக்குள் நுழையும்போது வாட்ச்மேனை யாரோ சிலபேர் கூடி நின்று அடித்துக் கொண்டிருந்தார்கள்.
- தொடரும்.

0 comments: