முந்தானைச் சிலந்தி

மாந்தளிர் மேனி இல்லை
மகிழப்பூ வாசம் இல்லை
கூந்தலில் வனப்பு இல்லை
கொவ்வையா உதடு? இல்லை
காந்தமா கண்கள்? இல்லை
கைவிரல் பளிங்கு இல்லை
ஏந்திநான் புகழ உன்னில்
எதுவுமே இல்லை இல்லை

ஓடையின் நடுவே வீழ்ந்த
ஓரிலை போல உந்தன்
தாடையில் சிறிய மச்சம்
தங்கின இரண்டு பருக்கள்
கூடையில் கிடக்கும் கனியின்
கொழுந்திபோல் இடதும் வலதும்
ஜாடையில் அழைப்ப தில்லை
சச்சரவுக் கொடுப்ப தில்லை

யோசனை செய்து பார்த்து
யூகிக்கும் தோற்ற மில்லை
வாசனை திரவி யங்கள்
வார்த்திடும் தேவை இல்லை
ஊசலை கொடுத்துப் போக
உண்மையில் செழுமை இல்லை
மாசறு பொன்னே என்று
மகிழநான் வழியே இல்லை

ராத்திரி அளந்து பார்க்கும்
ரகசியம் இல்லை; நெஞ்சைக்
காத்திரப் படுத்து கின்ற
கற்பனை வருவ தில்லை
நாத்திகம் போல கொஞ்சம்
நம்பிக்கை விதைக்கும் உன்னில்
மாத்திரை அளவுக் கேனும்
மலினமாய் கவர்ச்சி இல்லை

கிழிந்தயென் வீட்டுக் குள்ளே
கிழமைபோல் நுழைந்தாய்; சின்ன
குழந்தைபோல் சிரித்துக் கொல்லும்
குறும்பிலே வளர்ந்தாய் ; அன்புச்
சுழலிலே உருள வைக்கும்
சுகங்களை குழைத்து குழைத்து
நிழலிலே தடவு கின்றாய்
நிம்மதியை குதறிச் சென்றாய்

மூளையில் கூடு கட்டும்
முந்தானைச் சிலந்தி; நீயென்
நாளையை வெளிச்ச மாக்கும்
நான்கடி விளக்கு; நேசச்
சூளைக்கு ஏற்ற வெப்பம்
சூரியனின் பெண்பால் விகுதி
வாளைப்போல் துளைத்தெ டுக்கும்
வைகறையின் வசந்த லிபிகள்

உடைகளை சூடிக் கொண்டு
உலவுகின்ற அமுதக் கோப்பை
நடைபெறும் கனிவுத் தேர்வில்
நரம்புகள் போடும் மதிப்பெண்
குடைகளை தவிர்க்கப் பெய்யும்
குறுந்தொகை தூறல்; முத்த
கடைகளை நடத்து கின்ற
காப்பியச் சந்தை; நகர

வீதியை அமைதி யாக்கும்
வேர்வைப்பூ; கதறக் கதற
சேதிகள் உரைத்துப் போகும்
சித்தாந்தி; எனக்கும் சேர்த்து
வேதியல் காயம் ஏற்கும்
வெற்றிலை; மேலும் சொன்னால்
ஆதியில் யாரோ உண்ட
ஆப்பிளின் மிச்ச பாகம்

5 comments:

said...

நல்ல படைப்பு

வாழ்த்துக்கள்.

என் சுரேஷ் சென்னை
nsureshchennai@gmail.com

said...

அருமையான கவிதை. எழுதி எழுதி உங்க கிட்டயே வச்சிக்கிட்டா எப்படி? நாலு பேரு படிக்க தமிழ்மணத்தில் இணையுங்கள்
http://www.thamizmanam.com

உங்களுக்கு டெம்லேட் பண்ணிக் கொடுத்தவர் அந்த முக்கியமானதை மறந்துவிட்டார். நீங்களே தமிழ்மணத்தின் உதவி பக்கங்களை படித்து புரிந்துக் கொள்ளலாம்.

http://www.thamizmanam.com/tmwiki/index.php?id=help

அப்புறம் உங்களை எட்டு போட 28ந் தேதி அழைத்திருக்கிறேன். எட்டிப் பாருங்க:

http://jazeela.blogspot.com/2007/06/blog-post_28.html

உங்கள் பெருமிதங்களை அல்லது ஏதேனும் உங்களை பற்றிய எட்டு தகவலை தாருங்கள். அதற்கு முன்பு தமிழ் மணத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

said...

நல்ல கவிதை யுகபாரதி :)

said...

சிறந்த கவிதை! நல்ல பதிவு!!

said...

கவிதை அருமை.
புதிதாக எதுவும் வலைத்தளத்தில் போடவில்லையா?