அத்வைதம்

முகம்மலர பேசும் வார்த்தை
முடிவின்றி தொடரும் நெகிழ்வு
அகத்துக்குள் விளக்கு வைத்து
அணையாமல் பரவும் தெளிவு
சுகதுக்கம் எதுவென் றாலும்
சொல்லுகின்ற அதீத அன்பு
அகந்தையை இழந்து நிற்கும்
அந்தரங்கம்; என்ன சொல்ல?

பித்தெல்லாம் பிடித்த நிலைமை
பிணக்கில்லாது நிகழும் தொல்லை
அத்வைதம் போல என்னை
ஆட்கொண்ட கருப்பு திங்கள்
செத்துவிட்ட மலரின் மீது
சிருஷ்டிக்க வைக்கும் முத்தம்
கொத்தாக வழியும் கண்ணீர்
குழப்பத்தில் கரைந்தே னம்மா

பாதையின் முடிவைத் தேடி
பாதங்கள் களைப்ப துண்டு
காதைப்போய் முட்டும் போது
கானங்கள் முளைப்ப துண்டு
வாதையில் வீழ்ந்து வீழ்ந்து
வாவென்று அணைக்கும் சொற்கள்
போதைபோல் தோன்றும் ஆனால்
புரிந்துகொள் அதுவே மோட்சம்

ஈர்ப்பென்று இதனைச் சொல்லி
இதயத்தை சபிக்க மாட்டேன்
தீர்த்திடுக தாகம் என்று
தீர்த்தமுனை குடிக்க மாட்டேன்
பார்ப்பதில் வேட்கை உண்டு
பத்தடிநான் விலகி நின்று
கார்காலம் விரும்பா விட்டால்
காளான்கள் முளைப்ப தேது?

ஊட்டிடும் தாயா? என்னை
உலர்த்திடும் வெயிலா? ஊரை
காட்டிடும் பொழுதா? பாசக்
கவிதையின் தொகுப்பா? வந்து
மீட்டிடும் இசையா? இல்லை
மிதந்திடும் பனியா? உள்ளம்
கேட்கிற கேள்விக் கெல்லாம்
கிடைக்காது பதில்கள்: முன்னம்

இப்படிநான் இனித்த தில்லை
இருமடங்கு குமைந்த தில்லை
முப்புறமும் துளிர்த்த தீயில்
முனையளவு கசிந்த தில்லை
அப்பழுக்கு எதுவும் இல்லா
அவஸ்தையில் விளைந்த தில்லை
சப்பரத்தை சுற்றும் பிள்ளை
சாமிமுகம் எதிலே பார்க்கும்?

நீசருடன் கொஞ்ச காலம்
நிம்மதியை தொலைத்தேன்; கட்டில்
ஆசையுடன் பருக வந்த
அருவருப்பில் கலைத்தேன்; கொஞ்சிக்
கூசுகின்ற பேச்சில் என்னை
கூப்பிட்டு குறுக வைத்த
வாசகிகள் பலபேர் வாட்ட
வருந்தினேன் நேற்று வரையில்

வாழவே பிடித்தி டாமல்
வாடிநான் சிதைந்த போது
ஏழையாய் தெருக்கள் தோறும்
ஏங்கிநான் அலைந்த போது
கோழைபோல் எனக்குள் நானே
கொடுமையால் சரிந்த போது
தோழிநீ கிடைத்தி ருந்தால்
தொலைவுகள் குறைந்தி ருக்கும்

இருட்டிலே கிடந்த பொன்னை
இயல்பிலே உருக்கி இன்ப
நெருப்பிலே நகையாய் மாற்றும்
நிகழ்ச்சிக்கு என்ன பொருள்?
உறுப்பிலே காமம் கொன்று
உணர்விலே யாவும் வென்று
பிறப்பிலே கருணை காட்டும்
பிரியமுனை தொழுது நிற்பேன்

2 comments:

said...

உங்கள் பதிவுகள் அனைத்தும் படித்தேன்.

//அகந்தையை இழந்து நிற்கும்
அந்தரங்கம்;//
இந்த வரிகளைப் படித்து விட்டு நிறையவே யோசித்தேன்.

இக்கவிதையில் எந்த வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லுவது என்று தெரியவில்லை. அனைத்து வரிகளும் என்னைக் கவர்ந்தன.

கவிதைகளுடன்,
சகாரா.

said...

வலையுலகுக்கு நல்வரவு யுகபாரதி!

ட்ரீட் எப்போ?
எப்போ?
எப்போ?