ஞானக்கீற்று

எண்ணிட கனவில்லாமல்
எப்படி இரவு போகும்?
திண்ணிய மனமில்லாமல்
தீர்வுகள் குழப்ப மாகும்
புண்ணிய தலமில்லாமல்
பூசைகள் நடப்ப தேது?
நுண்ணிய அறிவில்லாமல்
நொறுங்கிடும் புதுமை யேது?

பற்றிட நெருப்பில்லாமல்
பரவுமா உலையில் சூடு?
கற்றிட நினைப்பில்லாமல்
கதறுதல் உலகின் கேடு
சுற்றிட திசையில்லாமல்
சுருங்குதல் முடவர் பாடு
வெற்றிடம் காற்றைச் சேரும்
விரக்தியே மனதின் ஊனம்

முள்ளிடம் இருக்கும் பூவை
முயற்சியே பறிக்கும்; புளித்த
கள்ளிடம் இருக்கும் தீங்கை
கருணையே தடுக்கும்; நீரை
கொள்ளிடம் தனக்குள் ஏந்தி
கொடுக்குமே வயலுக்கதுபோல்
வள்ளுவம் நமக்கு நாளும்
வழங்கிடும் ஞானக் கீற்றை

அன்னையின் வயிற்றுக் குள்ளே
அக்கினி முளைத்த போது
புன்னகை தெறித்து மெல்ல
புடைக்குமே புடவை அதுபோல்
தென்றலும் காடும் மலையும்
தென்படும் முன்னே,வாழும்
அன்பினை வடித்துச் சென்ற
அய்யனே தேவ தூதன்

எத்தனை சுகங்களுண்டு
இப்பெரும் நானி லத்தில்
அத்தனை பெறவும் நமக்கு
அவசியம் அறவோர் சுருதி;
புத்தியில் கணிப்ப தெல்லாம்
பூமியில் பெரிதே இல்லை
தத்துவம் வேறு வேண்டாம்:
தமிழனே குறளை ஓது

3 comments:

said...

hello! A Good News,google introduce a very user-friendly browser,Free download Quickly,Please visit my blog thank you

said...

அன்னையின் வயிற்றுக் குள்ளே
அக்கினி முளைத்த போது
புன்னகை தெறித்து மெல்ல
புடைக்குமே புடவை அதுபோல்
தென்றலும் காடும் மலையும்
தென்படும் முன்னே,வாழும்
அன்பினை வடித்துச் சென்ற
அய்யனே தேவ தூதன்

இனிய வரிகள். அருமையான வார்த்தைகள்.

திருக்குறளில் இல்லாதது எதிலும் இல்லை.

உண்மைதான் நண்பரே.

மிகவும் நன்றி.

வாழ்த்துக்கள்.

said...

இந்த அருமையான கவிதையை முத்தமிழ் கூகிள் குழுமத்திலும் மீள் பதிவாக இட்டுள்ளேன்.

மிகவும் நன்றி.
http://groups.google.com/group/muththamiz


manjoorraja@gmail.com