ஸ்திரப்படுதல் அல்லது லட்சிய ஞானஸ்தர்

மூக அரசியலைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் எந்தப் படைப்பாளியாலும் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள இயலாது. எனவே உன் அரசியல் என்னவென்று, எதைச் சார்ந்ததென்று முதலில் முடிவு செய். அது, சரியோ தவறோ காலம் தீர்மானிக்கும். முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது-இப்படியான வாக்கியங்களை அவர் என்னிடம் உதிர்க்கும்போது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.
முதல் கவிதை 'தமிழர் கண்ணோட்டம்' என்னும் இதழில் பிரசுரமாகியிருக்க, அதற்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு என்னு டைய எதிர்கால ஆசைகளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் நிமித்தம் என்னுடைய அப்பாவால் மொழியப்பட்ட வார்த்தை களே அவை.
அப்பாவுக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே பொதுவுடைமை கருத்துக்கள் மீது தீராத பற்றுயிருந்தது. பிறகு, தமிழ்த் தேசிய ஆர்வலராய் உருமாறியிருந்தார். அவர் என்னிடம் பரிமாறிக் கொண்ட கருத்துக்களை உள்வாங்கிக் கொள்ளும் வயதில்லை எனக்கு. பதிமூன்று வயது பள்ளி மாணவன். சமூக அரசியல் என்ற சொல் என்னை பயமுறுத்தியது. எழுத்துக்கு பின்னால் கிளர்ந்தெழும் சூட்சுமத்தை எப்படி புரிந்துகொள்ள முடியும்? ஆனால் அன்பாலும் அப்பா சொன்னதாலும் அது சரியென்றே பட்டது.
உடுமலையைப் பற்றி எழுதும் போது ஒரு பாடலாசிரியன் சந்திக்கும் அடிப்படை பிரச்சனைகள் எவ்வாறு அவனை அலைக்கழித்து முரணான கருத்துக்கு இட்டுச்செல்கிறது என்று பார்த்தோமோ அந்தப் புரிதலுக்கு மேலும் ஒரு சான்றாக அவரது பாடல் ஒன்று. 'இப்படித்தான் இருக்க வேணும் பொம்பள' என்னும் பாடல் சொல்லிய விஷயத்துக்கு மாற்றாக எப்படியெல்லாம் ஒரு பெண் தனது வாழ்வு சாத்தியத்திற்கு துன்பப்பட நேர்கிறது என்னும் பாடலின் பிரதியை தோழர் இளங்கோவன் அனுப்பியிருக்கிறார். படம்-ரங்கோன் ராதா. பாடியிருப்பவர்-சி.எஸ். ஜெயராமன்.
'என்றுதான் திருந்துவதோ நன்றிகெட்ட ஆடவருலகம்' என ஆரம்பிக்கும் பாடலில்

வண்ணான் சொன்ன சொல்
வகையெனவே ராமன்
மனைவியாம் சீதையை வனத்தில் விட்டான்

பெண்ணாள் திரெளபதியை தருமன்
பித்தினில் சூதிலே பணயம் வைத்தான்
கண்ணாம் காதலியை ஒருத்தன்
கடன் தீர்க்க காசிதனில் விலைக்கு விற்றான்

ஒண்ணா? இரண்டா உபத்திரவம் இந்த
உலகினில் தாய்க்குலம் பட்ட துன்பம்
-ஒரு பாடலாசிரியன் சந்திக்க நேரும் இரண்டு சாளரத்தை இதன் மூலம் உணரலாம். எனினும், பாடலாசிரியனின் தனித்த இயல்பை அல்லது பண்பை எப்படி அறிந்து கொள்வது? அவனது புத்தகங்கள் வாயிலாகவோ நேர்காணல் மூலமாகவோ அறியக்கூடும் என்றாலும், உடுமலை போல அதிகம் உரைநடையில் கவனம் செலுத்தாதவர்களை துல்லி யமாய் விளங்கிக்கொள்வது கடினம். முன்பே, சொன்னதுபோல பாடலாசிரியனின் ரசனை மட்டம் சம்பந்தப்பட்ட இயக்குநர் அல்லது இசையமைப்பாளரின் அறிவு மட்டத்தைப் பொறுத்ததுதான்.
பகுத்தறிவுக் கருத்துக்களைப் பாடல்களில் நுழைத்த உடுமலையைத் தொடர்ந்து பலரும் தன்னை பகுத்தறிவாளராகக் காட்டிக்கொள்ள நினைத்த காலமொன்றிருந்தது. குறிப்பாக, அந்தக் காலத்தில்தான் திராவிட முன்னேற்றக் கழகம் திரைத்துறையில் வெகுவாகத் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டது. மொழிப்பற்று உடைய அல்லது உடையவராக வெளி உலகிற்குப் பறைசாற்றிக்கொள்வ தில் கலைஞர்கள் பெருமிதம் கொண்டார்கள். அதன் விளைவே அடுக்குமொழி வசனத்தை ஒப்பிக்கும் போட்டிபோல ஒவ்வொரு நடிகரும் திரையில் தென்பட்டனர். யார் எழுதினாலும் ஒரே மாதிரிதான் எழுதுவார்கள் என்று யார் யாரோ இன்றைக்கும் கருத்து சொல்லும் நிலையை ஏற்படுத்தியது. இதை முற்றாகத் தவிர்க்கவோ முன்னெச்சரிக்கையோடு நடக்கவோ இயலாது. பெருவெள்ளம் பெருகி வருகிறபோது அதன் ஆழத்தில் கிடக்கும் கூழாங்கற்கள் அந்த ஆவேசப் பயணத்தில் உருண்டே ஆக வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஒரு புறமென்றால் தமிழரசுக் கழகம் இன்னொரு புறம். இரண்டுக்கும் பலமாக, பாலமாக இருந்தவர்கள் கலைஞர்கள்தான். கலைஞர்கள் அன்றைய அரசியலை தனது எழுத்தில், தனது பங்களிப்பில் பிரதிபலித்தது புதிதாய் வருகிறவர்கள் புரிந்துகொள்ளத்தக்கவை. உடுமலையை அடுத்து என் நினைவைச் சட்டெனக் கவ்வியவர் கு.மா.பாலசுப்ரமணியம்.

என்ன உலகமடா- இது
ஏழைக்கு நரகமடா
-முதல் படப் பாடல் (ஓர் இரவு) முழு ஆதரவு பெற்றதும் ஏ.வி.எம் நிறுவனத்தில் தான் பார்த்து வந்த கதை இலாகா வேலையை ராஜினாமா செய்தார். புது வேலை வந்துவிட்டால் பழைய வேலை புளித்துப் போவது சகஜம்தானே. 1949இல் திரைப்பாடலாசிரியராக அறிமுகமான கு.மா. பா.வுக்கு வயது அப்போது 29.
திரைப்படப் பாடலைக்கூட யாப்பிலக்கணப்படி எழுத வேண்டும் என ஆர்வம் கொண்டவர். இவருடைய 'அமுதைப் பொழியும் நிலவே' மற்றும் 'சிங்காரவேலனே தேவா' இரண்டு பாடல்களும் இன்று வரை பிரசித்தி பெற்று விளங்கும் இரண்டு பாடகிகளுக்கு வாழ்வு தந்ததாகச் சொல்லுவார்கள். அட்சர சுத்தமாகப் பாடுவதைப் போல அட்சர சுத்தமாக எழுதுவதும் தனிக் கலை. அதில் தனித்து விளங்கியவர் கு.மா.பா. 800 பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். ஒரு படத்தில் பல கவிஞர்கள் எழுதுவதையும் அதன்மூலம் ஏற்படும் போட்டி மனோபாவம் தமிழுக்கு வளம் சேர்க்கும் எனவும் நம்பியவர்.
கு.மா.பா. நினைவில் நிற்பதற்கு வேறு ஒரு காரணம். அவர் திராவிட இயக்கம் தழைத்த நேரத்தில் தமிழரசுக் கழகத்தைச் சார்ந்து இயங்கியதும் ஒன்று. வேகமாக ஓடிய நதியில் இலை போல ஓடாமல் மிதமாக நடந்த ம.பொ.சி யின் தமிழரசுக் கழகத்தில் இடம்பெற்ற இன்னுமிரண்டு கவிஞர்களில் ஒருவர் கவி கா.மு.ஷெரீப். இன்னொருவர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி.
இப்போது முதல் பத்தியை ஒட்டி விளங்கும் செய்தி புரிபடும். சரியோ தவறோ தனது நம்பிக்கையோடு சமரசம் கொள்ளாத் தன்மையே ஒரு படைப்பாளனின் ஆளுமை. தமிழரசுக் கழகம் பின்னாட்களில் என்னவானது என்பதை யாவரும் அறிவர். ஆனால், தொடக்கக் காலத்தில் அதன் அரும்பணியை, தமிழ் ஆர்வலர்களைக் கவர்ந்திழுத்த காட்சிகளை யாராலும் மறுக்க முடியாது.
தமிழ்த் தேசியம், ஆங்கில ஆதிக்க எதிர்ப்பு, தமிழிசை, தமிழ் அர்ச்சனை போன்ற சிந்தனைகளின் தொடக்கக் காரணியாக இருந்தது தமிழரசுக் கழகம். சிலம்புச் செல்வர். ம.பொ.சி.யின் கனவாக இருந்த மாநில சுய ஆட்சிக் கோரிக்கை இன்று வரை பேசப்பட்டுவருகிறது. ஆனால், அதன் போராட்டக் காலமாக இருந்த நாற்பது ஐம்பதுகளில் கு.மா.பா. இணைந்து செயல்பட்டிருக்கிறார்.
ஆறாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கு.மா.பா தனது அம்மா மூலம் பக்தி இலக்கியத்தில் ஆர்வம் ஏற்பட்டு கொஞ்சம் கொஞ்சமாகக் கேள்வி ஞானத்திலேயே பெரும் கவியாக உருவெடுத்தவர்.
பரபரப்பு, ஆர்ப்பாட்டம், பெருங்கோபம் இவை எவற்றுக் கும் ஆட்படாமல் எண்ணிறைந்த பாடல்களை எழுதிச் சாதித்தவர். முதலில் முடிவு செய். சரியோ தவறோ காலம் தீர்மானிக்கும். முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது.
உரிமைக்கு எல்லை வேங்கடம், உறவுக்கு எல்லை இமயம், நட்புக்கு எல்லை உலகம் என்று பேசிய தமிழரசுக் கழகம் இறுதியில் அண்ணா, இராஜாஜி, காயிதே மில்லத் ஆகியோருடன் கூட்டணி கொண்டது. அதன் மூலம். தி.மு.க. வின் சட்டசபை மேலவை உறுப்பினரானார் கு.மா.பா.
ம.பொ.சியின் நூற்றாண்டு இது. அவர் கொண்டிருந்த கொள்கைகள். முன்வைத்த தீர்மானங்கள். சிலப்பதிகாரத்தைப் பரவலாக்கிய செயல் இவற்றோடு மட்டுமல்லாது தமிழ்நாட்டின் ஒரு காலத்திய பிரதிபலிப்பாக அவரைக் காண வேண்டும். பொங்கல் திருநாளைத் தமிழர் திரு நாளாகக் கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுத்து செயல்படுத்தியவர் ம.பொ.சி. அவரது நிழலில் என்று சொல்லக் கூடாது. அவரது பாதையைப் பின்தொடர்ந்த கவிஞராக கு.மா.பா. இருந்ததால் செழுமையான தமிழ்ச் சொல்லாட்சி மீது அவர் காட்டிய அக்கறை ஆச்சர்ய மில்லை.

நெற்றியின் வேர்வையைச்
சிந்தி-நீ
நித்தம் உழைப்பதும் வீணோ?

சூழ்ச்சி புரிந்திட்ட பாவி
சுகமுடன் வாழ்ந்திடுவானோ?
தொல்லைக் கொடுத்தவன்
தன்னை
பழி வாங்காமல் விடலாமா?
பழிக்குப் பழி
வாங்காமல் விடலாமா?
-வேலைக்காரன் திரைப்படத்தில் வெளிவந்த இப்பாடலில் என்ன சிறப்பென்று கேட்பதை விட சிறப்பற்றுப்போன வாழ்வை கு.மா.பா. சித்திரிக்கும் விதத்தை ரசிக்க வேண்டும். கற்றை கற்றையாகத் தீருகின்றன காகிதங்கள். கருத்தொருமித்துச் செயல்பட வழியில்லா சேதத்தில் ஒரு படைப்பாளி எதிர்கொள்ளும் ஆபத்துகளில் ஒன்று போல நாம் பலரையும் மறந்துவிடுகிறோம். இந்த மறதி காலம் கொடுத்ததல்ல. நமது கவனக்குறைவினால் ஏற்படுவது. தனது இடத்தை ஸ்திரப்படுத்துவதில் உள்ள சிக்கல் மட்டும் இல்லை என்றால் ஒவ்வொரு படைப்பாளனும் நெடுங்காலம் இருக்க முடியும். ஒவ்வொரு படைப்பும் உதிராமல் இருக்க இயலும்.
திரைப்பாடல்கள் குறித்து எழுதிக்கொண்டிருக்கிற இந்த நேரத்தில் சங்கீத ரசனை குறித்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. நினைத்ததைச் சொல்லாமல் விடுவது நினைவில் வந்த சம்பவத்திற்கு செய்யும் துரோகமல்லவா?
ஒன்றை ரசிப்பதற்கு லட்சிய ஞானம் வேண்டுமா? இல்லை லட்சண ஞானம் வேண்டுமா? என்ற விவாதம் எழுந்தது. லட்சிய ஞானம் என்றால் வேறொன்றுமில்லை. கேட்கிறவர்கள் ஆனந்தப்படுகிற மாதிரி வாசிப்பது. இவ்வகை ரசிகர்களுக்கு லட்சிய ஞானஸ்தர்கள் என்று பெயர். இதே போல லட்சண ஞானஸ்தர்கள் என்றால் சங்கீத லட்சணத்தைத் தெரிந்து குற்றம் குறைகளை ஆராய்ந்து அதற்குப் பின் ரசிக்கிற ரகம். இரண்டு ஞானத்தில் எது சிறந்தது என்று திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை அவர்களிடம் கேட்டார்கள். நாதஸ்வர சக்கரவர்த்தியாகப் போற்றப்படுகிற அவர் விவரித்த சம்பவம்தான் என் நினைவில் நுழைந்தது.
ஒருமுறை திருச்சி மலைக்கோட்டையருகே கச்சேரி. மதுரை நாதஸ்வர வித்வான் பொன்னுச்சாமிப்பிள்ளை வாசித்துக் கொண்டிருக்கிறார். நாட்டை, மல்லாரி வாசித்து முடித்து ராக ஆலாபனையை ஆரம்பிக்கும்போது 'பலே' என்றொரு குரல். அந்தப் பாராட்டு கியாஸ் லைட் தூக்குகிறவரிடமிருந்து வந்ததாம். ஒவ்வொரு கச்சேரிக்கும் கியாஸ் லைட் தூக்கிப் போனதில் லட்சிய ஞானஸ்தர் ஆகியிருக்கிறார் அவர். இதுதான் முக்கியம். லட்சண ஞானஸ்தர்களைவிட லட்சிய ஞானஸ்தர்களே திரைப் பாடலை விரும்புகிறவர்கள்.
கு.மா.பா. லட்சிய ஞானஸ்தர்களை முன்வைத்து எழுதிய லட்சண ஞானஸ்தர். இது, மிகை என்பவர்கள் அவரது பாடல் கட்டுகளோடு ஒரு இரவு படுத்துக் கொண்டே கேட்டால் உண்மையென்று உணருவர். ஸ்திரப்படுத்துதல் சிரமம். ஸ்திரப்படுதல் இயல்பு.

3 comments:

said...

வணக்கம் யுகபாரதி

என் பெயர் கானா பிரபா, அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் ஒலி வானொலியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக உள்ளேன். உங்களை வானொலிப் பேட்டிகாண ஆவலாக இருக்கின்ரது. எனக்கு உங்கள் தொலைபேசி எண்ணுடன் தனிமடல் ஒன்று போடுகிறீர்களா?
என் ஈ -மெயில்: kanapraba@gmail.com

நன்றி

said...

//நினைவில் வந்த சம்பவத்திற்கு செய்யும் துரோகமல்லவா?//

துரோகம் செய்யாமல் உடனே படிக்க தந்துவிடுங்கள் எங்களுக்கு :-)

'லட்சண லட்சிய ஞானஸ்தர்கள், ஸ்திரப்படுத்துதல் ஸ்திரப்படுதல்' என்று விசு வசனம் போல் குழப்பியிருந்தாலும் தெளிவாகவே புரிகிறது.

said...

naam ezhuthukira ezhuthukku naam eppadi vazhkirom enbathe vazhvu......thangalin thanthai sariyaka than solli irukirar........ by
siddarthan