மொழியின் செளந்தர்ய வஸ்து

னிவரும் திரைப்படங்களில் பாடல்களே இல்லாது போனால் என்ன செய்வீர்கள் என்றார் நண்பரொருவர். திரைப்பாடல் எழுதுகிற என்னைப் பார்த்து இக்கேள்வினை அவர் முன்வைத்தது ஆச்சரியமில்லை. திரைப்படங்களில் பாடல் இல்லையென்றால் மக்கள் என்ன செய்வார்களோ அதையே செய்வேன் என பதிலளித்தேன். உண்மையில், திரைப்பாடல் இல்லையென்றால் என்ன ஆகும்?
நவீனம்-அதி நவீனம்-அதிஅதி நவீனம் எதுவாகக் காலம் தன்னை மாற்றியமைத்துக் கொண்டாலும் திரையிசை இல்லாமல் போய்விடாது என்பது என் எண்ணம். பாடல்கள் வேறெந்த சமூகத்தைக் காட்டிலும் தமிழ்ச்சமூகத்தில் தசையும் எலும்புமாக உயிரின் தேவையாகவும் இருந்துவருகிறது.
இன்றும் சில கிராமங்களில் நாட்டார்பாடல் பாடும் வழக்கமிருப்பினும் திரையிசையின் ஆதிக்கம் சற்று தூக்கலாகவே தென்படுகிறது. இசையையும் நடனத்தையும் களைந்த சமூகம் கொண்டாடத் திராணியற்றுப் போகும். கொண்டாடத் திராணியில்லாத சமூகம் விடுதலையை அல்லது வாழ்வு மாற்றத்தை ஒருபோதும் விரும்பாது.
திரைப்படப் பாடல்களின் தேவை குறிப்பிட்ட திரைப்படத்துப் பாத்திரங்களோடு முடிவடைவதாக மக்கள் நினைப்பதில்லை. மாறாக, தன்னையே பாவித்து அப்பாடல்களின் கதாநாயகர்களாகிவிடுகிறார்கள். எனவேதான், மதுரகவி பாஸ்கரதாஸ் தொடங்கி இன்று எழுதவரும் புதுக்கவிஞர் வரை கவனிப்புக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகிறார்கள்.
இசைமரபு எப்படி தவிர்க்க முடியாத பங்கை வகிக்கிறதோ, அதே அளவு பங்கை திரையிசை பாடல்களும் வகிக்கின்றன. சமயத்தில், திரையிசை மரபே இசை மரபாகவும் எழுதிவிடுகிற அபாயமும் உண்டு.
திரையிசைக்குமுன்பு மக்களின் உதடுகள் உச்சரித்த சொற்கள் எவை எவை? தொழிற்பாடல்களைப் போல, சடங்குப் பாடல்கள் போல, தாலாட்டுப் பாடல்கள் போல வகைக்கொன்றாகப் பார்த்தால் அவையும் வட்டாரத்திற்கு ஒரு முகமாக காட்சியளிக்கிறது. பொதுமைப்பண்புக்கு பாடலை நகர்த்திய பெருமை திரையிசைக்கே உரியது.
திரையிசையின் இன்றைய போக்குகளைப்பற்றி பிரஸ்தாபிப்பதோ பெரியதொரு பாராட்டு பத்திரம் வாசிப்பதோ என் நோக்கமில்லை. வெகுசன ரசனைக்கேற்ப சின்னச் சின்ன இலக்கிய நெகிழ்வுகளோடு திரையிசையை மக்களின் தீவிர வேட்கைக்கு உட்படுத்திய சிலரையேனும் நினைத்துப்பார்க்கவேண்டும்.
சமூக அரசியலோடு தன்னையும் தன் எழுத்துக்களையும் மிகச் சாதுர்யமாக பிணைத்த அவர்களின் நேர்த்தியை யாராலும் மறுக்கமுடியாது. முப்பதுகளில் தமிழ் சினிமா முகங்காட்டத் தொடங்கியதும் இன்றைய மக்களின் வரலாற்றுத் தேவையை, திரையிசை பதிக்கத் தவறவில்லை என்பது ஆறுதலான விஷயம் மட்டுமன்று.

வெக்கங் கெட்ட
வெள்ளைக் கொக்குகளா
விரட்டி யடித்தாலும்
வாரிகளா
- என்றொரு பாடல். 1933இல் வள்ளித் திருமணம் படத்தில் வருகிறது. எழுதியவர், மதுரகவி. அதே படத்தில் வருகிற இன்னொரு பாடல்,

வளையல் வாங்கலையோ
அம்மம்மா
வளையல் வாங்கலையோ
மாசில்லாத
இந்து சுதேசி வளையல்...
-சுதேசியமும் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறைக்குக்கெதிரான ஆவேசக் குரலும் முதல் பாடலாசிரியரான மதுரகவியிலிருந்து தொடங்குகிறது. பாரதிக்கு அப்பால் தேசிய உணர்ச்சியை வெகுமக்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை இவருடையது.
நாடகப்பாடல்கள் மூலம் பிரபலமாயிருந்த மதுரகவி திரையிசையைக் கைகொண்டதும் பாகவத் தமிழை பாமரரும் அறியலாயினர். இதன் மூலம் தமிழுக்கு என்ன வளம் கிடைத்ததோ தெரியவில்லை. தமிழ் மக்களுக்கு புதியதொரு சாளரம் திறந்தது. கொஞ்சம் தேசபக்தி; கொஞ்சம் தமிழ் என்றாலும் மிருதியும் சமஸ்கிருதமும் சாஸ்திரியமுமாகவே திரையிசை இருந்தது. பாடல்களின் தொனி மாற்றம் படிப்படியாக நிகழ்ந்திருக்கிறது. ஆனால், பாடல் மீது மக்கள் கொண்ட அபரிமிதமான பிரியம் கொஞ்சம் குறையவில்லை.
கதாநாயக அந்தஸ்து ஒரு நடிகனுக்கு எப்படி சவாலாக அமைகிறதோ, அதே சவாலோடு மக்களின் கேட்பு ரசனையும் மிகுந்துவிட்டது. கதாநாயகர்களை தெய்வமாக தொழுவதும் அதீத பொய்மைகளின் அங்காடியாக அவர்களை போற்றுவதும் ஒரு தராசில் வைக்கப்படும் இரண்டு தட்டுகள். ஒன்றுக்கு ஒன்று கூடுவதும் குறைவதும் இயற்கை.
மதுரகவியைத் தொடர்ந்து பாபநாசம் சிவன். இரண்டாவது உழவில் மேலும் குழைவுறும் மண்போல எளிய நடைக்கு திரையிசையை இட்டுச் செல்ல முனைந்தவர். சாஸ்திரியப் புலமையோடு இவர் இயற்றித் தந்த பாடல்கள் இன்றளவும் பிரசித்தி குறையாமல் விளங்குபவை. தானே மெட்டமைத்து தானே பாடியும் காட்டுகிற ஆற்றல் எத்தனை பேருக்கு இன்றுள்ளது.
'நான் நடிக்க வேண்டுமானால் சிவன் பாட்டும், இளங்கோவன் வசனமும் எழுத வேண்டும்' என தியாகராஜ பாகவதர் நிபந்தனை போடுமளவுக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றவர். தமிழ்ப் புலமையால் அந்தஸ்து பெறுவது அக்காலத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது.
'மன்மத லீலையை வென்றாருண்டோ' பாடலின் ஒற்றை வரிக்கு நிகர்த்த பொருளை வேறுயிசை இதுகாரும் பெற்றிருக்கிறதா? தீன கருணாகரனே நடராஜா நீல கண்டனே போல வேறொரு பாடலை விரல் சுட்ட முடியுமா? என்னுமளவுக்கு திரையிசையை பட்டிதொட்டியெல்லாம் பிரபலப்படுத்தியவர் சிவன்தான்.
காதலையும் பக்தியையும் பாட்டுக் கோப்பையில் பழரசமாக்கியவர். இவரது பாட்டு பட்டியல் நீளமானது. மதுரகவி, சிவன் இருவரின் உழைப்பும் சேவை என்றே கருதவேண்டும்.
மெல்லென கவிந்த ஒரு மாலையில் என் குடியிருப்புக்கு அருகிலிருக்கும் தெருவில் நடந்துகொண்டிருந்தேன். என்னைக் கடந்து சென்ற ஒருவரின் கைபேசி ஒலித்தது. இதில் என் பாடல். கொஞ்சம் மலர்ச்சியோடு அவரைப் பார்த்தேன். என்னையோ, என் பாடல்தான் அது என்பதையோ அறியாத அவர் பதில் மலர்ச்சிக்கு இடமில்லாமல் விரைந்துவிட்டார்.
இன்னும் கொஞ்சதூரம் நடந்தேன். எதிரே நின்றிருந்த காரை பின்நோக்கி ஓட்டியவர் எச்சரிக்கை ஒலியாக வேறொரு பாடலை பயன்படுத்தினார். அப்புறம் தேநீரகம், தெருமுக்குகள், திருவிழாக்கள், திருமணக்கூடங்கள், எங்கெங்கும் நீக்கமற ஒலிக்கின்றன பாடல்கள்.
காற்றோடு நாம் வசிக்கிறோம் என்பதை நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறது பாடல்கள். தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் அமர்கிற யாரொருவரும் திரையிசையின் வளர்ச்சியை உணரக் கடவர்.
புதியதோ பழையதோ கேட்பதற்கு தேவை பாடல்கள். வானொலியின் ஆகப்பெரும் பயனாக அறிக்கையும் விளம்பரங்களின் அசட்டையும் தவிர்த்து ஒரேயொரு நல்ல விஷயம் பாடல்தான். அதிலும் தொகுப்பாளிகளின் தொண்டை கரைச்சல் செருமல்களில் தொலைந்துவிடுகிறது நேரம்.
ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் திரைப்பாடல் எழுதிய பாபநாசம் சிவன் எண்ணூறு பாடல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பத்மபூஷன் பெற்றவர். பஜனைப் பாடல்களாக கீர்த்தனைகளாக இருந்த சாஸ்திரிய இசையை, சமஸ்கிருத பண்டிதராய் இருந்த அவர் 'வதனமோ சுந்தர பிம்பமோ' என வார்த்ததில் விஷேசமில்லை.
தஞ்சை மாவட்டதில்(மோளகம்) பிறந்த இவர் வறுமை காரணமாக தேசாந்திரம் தேசாந்திரமாக சுற்றித் திரிந்து இறுதியில் திருவனந்தபுரத்திற்குப் போய் சேர்ந்திருக்கிறார். 'ராமசர்மன்' என்ற தன் இயற்பெயரும் அங்குதான் சிவனாக மாறியது. சரமனை நீலகண்ட சிவனை குருவாகக் கொண்டு தினசரி அவர் பின்னே வீதிதோறும் பஜனை பாடியவர், அவர் நினைவாக ராமசர்மன் தன் பேரை சிவனாக்கிக் கொண்டதாக காவ்யா சண்முகசுந்தரம் எழுதியிருக்கிறார். சிறிதுகாலம் பாபநாசத்தில் தங்கியதால் சிவனோடு பாபநாசம் சேர்ந்துகொண்டது.
பாடலாசிரியனாக ஜீவிக்க முடியுமென்று நம்பிக்கை வளர்த்த சிவனின் பெருமைகள் அநேகம். படக் கம்பெனிகள் அப்போது பெட்டிப் பெட்டியாக பணத்தோடு குவியாத காலம். கூத்தாடிப் பிழைப்பென்று குனியவைத்து குட்டிய காலம், இதிலும் சாஸ்திரிய சமஸ்கிருத ஞானம் கொண்டு ஒருவர் எப்படி சமாளித்திருக்க முடியும்?; முடிந்தது.
திண்ணையும் நெட்டுகட்டும் ஊஞ்சல் பலகைகளும் மட்டும் மக்களுக்குப் போதாது. விவசாயமும் வேறுபல கலைகளும் அவர்களின் தேவை. இரண்டுபேர் சந்திக்கையில் குடும்பம் தவிர்த்து குலம் தவிர்த்து பேசுவதற்கு ஏதாகிலும் வேண்டும். தனித்திருக்கும் வேளையில் தன்னோடு துணையாயிருக்க தோழிபோல, தோழன்போல, பாடல்களைக் கருதுகிறார்கள்.
செளந்தர்ய மீட்பர்கள் ஒருவாறாக பாடல்களை உள்வாங்கினாலும் உழைக்கும் மக்களின் பொழுது முகிழ்வதே அவற்றோடுதான். மொழியின் குரூர வஸ்துக்களை உணராமல் இசையின் மிரட்சியை எதிர்கொள்ளாமல் தன்னியல்போடு அவர்கள் உடலில் இரத்தத்தில் கலந்திருக்கிறது.
எத்தனை பெருமை தமிழுக்கு இருப்பினும் திரைத்தமிழ் செழுமைகளை புறக்கணித்துவிட முடியாது. திரைப்படத்துக்கு பாடல் எழுதுகிறவனாக இல்லாமல் திரைப்பாடலை விரும்புபவனாக இதைச் சொல்வதில் சந்தோசம். வேறு தளத்துக்கு தமிழ் சினிமா செல்லவேண்டும்தான். அதற்காக பாடல் மரபே அற்ற வேறு நாட்டுப் படங்களை உதாரணமாகக் கொண்டு செயல்படுதலாகாது.
விளைச்சலே இல்லாத நாட்களில் என்ன செய்வது? வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் உணவுகளைத்தான் புசிக்கவேண்டும். பெட்ரோல் கிணறில்லாத பூமி போல இறக்குமதிகளால் நம்மால் எதையும் சமாளித்துவிட முடியும். ஆனால், மரபைத் தொலைத்துவிட்டு இன்னொரு மரபை கைக்கொள்ள இயலாது. உதடு அசைத்து பாடாவிட்டாலும் பாட்டுகள் நம் தனிச்சொத்து. அதை கலைப்படமென்கிற கனவுக்கு காவு கொடுத்துவிடக்கூடாது. திரைப்பாடல்களில் பாடல் இல்லையென்றால் செத்துவிட மாட்டார்கள்தான். ஆனால் மேலும் துயருறுவர்.
இதை எழுதத் தொடங்கும்போது என் பக்கத்துவீட்டு இசுலாமியத் தாத்தா பாடிக் கொண்டிருந்தார், 'தீன கருணாகரனே நடராஜா நீல கண்டனே'. இசைக்கு மொழி மட்டுமல்ல மதமும் கிடையாது.

1 comments:

said...

பாடல்களை இன்றைய பண்பலை வானொலிகள் வேறு விதமாகவும் பயன்படுத்துகின்றன. காலையின் மும்முர வேலை நேரத்தில் அதிக வேகம் கொண்ட பாடல்களையும் இரவு 9 மணிக்குப் பிறகு மெல்லிய இசையலைகளையும் ஒலிபரப்புகின்றன. துடிப்பு மிகுந்த பாடல்களால், உடலின் இயக்கம் அதிகமாகிறது. அமைதியான பாடல்களால் உடலும் மனமும் சாந்தி அடைகின்றன.

மேலும் நேயர்கள், பாடல்களை இன்னாருக்கு dedecate செய்கிறேன் என்றும் வானொலி நிறுவனத்தினர், சரியான பதில் சொன்ன நேயர்களுக்கு அவர்களின் விருப்பப் பாடல்களையே பரிசாகவும் வழங்குகின்றன.

எனவே, புதிய திரைப்படங்களில் பாடல்கள் இடம்பெறாவிட்டாலும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பாடல்களை வைத்து, இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மக்களைக் கட்டிப் போட முடியும்.