கவிதையும் நெகிழ்வும்

மிழ்த் திரைப்பாடல்களின் ரசனை மட்டம் குறிப்பிட்ட இயக்குனரின், இசையமைப்பாளரின் ரசனை மட்டத்தைச் சார்ந்தது - அதிகமாகவோ, குறைவாகவோ தான் கொண்டிருக்கும் படிநிலையை ஒட்டுமொத்த கவிதைகளின், பாடல்களின் தரமாகக் கருதிவிடுவது அவர்களுடைய இயல்பு.
தொடக்க கால திரைப்படத்தில் இருந்து இன்று வரை இந்த இயல்புகளே பிரதானமான அளவு கோலாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வார்த்தையளவில் மட்டுமல்ல கருத்து ரீதியாகவும்.திராவிடச் சார்புடைய இயக்குநரால் அவரது திரைப்படங்களில் சூசகமாக அக்கருத்தை நுழைக்கும் முயற்சியும், அல்லாதவராயின் புராதனச் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் தரப்பட்டும் வந்துள்ளதற்கானச் சான்றுகளை நம்மால் உணர முடியும்.
அது சரியா? தவறா? என்பதல்ல. படைப்பின் தரத்தை, தலைமையைத் தீர்மானிப்பவரின் ஆளுமையாகவே அதைக் கொள்ளவேண்டும்.
மாறிவருகிற அரசியல் நடப்புகளுக்கேற்ப திரைப்பாடல்கள் தங்கள் முகத்தை மாற்றிக் கொண்டு வந்துள்ளன. பாபநாசம் சிவன், பாஸ்கர தாஸ் இருவரை அடுத்து கவனிக்க வேண்டிய வர் பாரதிதாசன். பாவேந்தரின் கொள்கை மாண்புகளும் தனிப்பட்ட எழுத்து வேட்கையும் யாவரும் அறிந்ததே. எனினும், அவரது திரைப் பாடல் அனுபவங்கள் இன்றுவரை எல்லாக் கவிஞர்களுக்கும் அச்சமூட்டுபவையாக இருக்கிறது.
பாடலாசிரியனுக்கும் கவிஞனுக்கும் உள்ள இடைவெளியை இதன் மூலம் புரிந்துகொள்ள லாம். பாடலாசிரியனாக உள்ள ஒருவருக்கு இத்தகைய இக்கட்டுகள் நேர்வதே இல்லை. ஆனால், கவிஞனாகவும் அறியப்பட்ட கருத்தியல் ரீதியாக முனைப்புடையவராகவும் உள்ள ஒருவருக்கு சினிமாப்பாடல் மரியாதைக் குறைச்சலான விஷயமாகயிருக்கிறது. எழுத்தின் தராசு இன்னொருவரின் கையில் இருப்பதை எந்த படைப்பாளியாலும் ஏற்க முடியாது. தன்னியல்பாக முகிழ்க்கும் அவனது சிந்தனை ஓட்டத்திற்கு போடப்படும் முட்டுக்கட்டை களை அவன் பொறுப்பதில்லை. சுய அடையாளத் தோடு இயங்க நினைக்கிற கவிஞன் இன்னொருவரின் அடையாளத்தை தன் அடையாளமாகக் கைக்கொள்வது எளிதல்ல.
'வளையாபதி' எனும் திரைப்படத்தில் 'குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்' என்றொரு பாடல். இந்தப் பாடலில் 'குலுங்கிடும்' என்ற வார்த்தைக்கு கமழ்ந்திடும் என்றே பாரதிதாசன் எழுதியிருக்கிறார். 'கமழ்ந்திடும்' என்ற வார்த்தை ஒலிப்பதிவில் தெளிவாக இல்லை. எனவே அதை மாற்றித் தரும்படி இசையமைப்பாளர் கேட்க, இந்த வார்த்தை தெளிவாகக் கேட்க வேண்டுமானால் பட அதிபர் சுந்தரத்திடம் 'ஒலிப்பதிவு கருவியை மாற்றுங்கள்' என்றாராம் பாரதிதாசன். இது சொல்லப்படுகிற சம்பவம். பாரதிதாசனின் தன் பாடல் வரிகள்மீது கொண்டுள்ள அபரிமிதமானத் தெளிவைப் பிறிதொருவர் மாற்ற முயலுகையில் கவிஞனுக்கே உரிய கோபம் அவரிடம் வெளிப்பட்டது ஆச்சரியமில்லை. பிறகு அவ்வார்த்தை கண்ணதாச னால் 'குலுங்கிடும்' என்பதாக மாற்றப்பட்டுள்ளது.
ஒரு வார்த்தைதானே அதை மாற்றினால் என்ன... மூழ்கியா போகிறது? பிறரது விருப்பங்களை, பிறரது ஆலோசனைகளைக் கேட்க மனமில்லாத ஒருவரால் வெற்றிகரமான பாடலாசிரியனாக ஜீவிக்க முடியாது என்று எண்ணுபவர்களுக்கு பாரதிதாசனின் செயல் மூர்க்கத்தனமானதாகப் படலாம். உண்மையில், அதுதான் படைப்பு மனம். அந்த மூர்க்கம்தான் பாவேந்தர் போன்றோருக்கு சொத்து.
உச்சரிக்கும் விதத்தில் இசையமைக்கும் உத்திகளில் இன்று எவ்வளவோ மாறிவிட்டன. தமிழ்க்கொலைகள் சகல தமிழன்பர்களின் ஆதரவோடும் நிகழ்ந்து வருகின்றன. இந்தக் கால கட்டத்தில் பாவேந்தர் போன்ற இயல்புடைய அரசியல் சார்புடைய ஒருவரைக் காண்பதும் அவர்கள் வெகுஜன ஊடகத்தில் பங்களிப்பு செலுத்தும் நிலையும் அறவே இல்லை எனலாமா? தெரியவில்லை. இனி திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுவதில்லை என அறிவித்துவிட்ட அறிவுமதி அண்ணனுக்கும் இக்கருத்தியல் மனமே காரணம். வார்த்தை மாறுவதை ஏற்க முடியாத மனமுடையவர்கள் கருத்தியல் மாற்றத்தை ஒப்புக் கொள்ள இயலாது.
தான் சார்ந்திருக்கும் கட்சி அல்லது கொள்கைக்கு முரணான விஷயங்களைத் தீர்மானிக்கும் பொறுப்பிலுள்ள இயக்குநர் அல்லது இசையமைப்பாளர் சேர்க்க முயலும்போது அவர்களது படைப்பு மனம் சிதறுண்டு விடுகிறது. போதாமைகளால் நிகழும் இத்தவறுகளைப் பொறுத்துக்கொண்டு இயங்க வேண்டிய நிலை பாடலாசிரியனுக்குண்டு. கவிஞனுக்கில்லை.
அச்சுப்பிழையோடு தன் கவிதைகள் வெளிவந்தாலே தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் ஒருக்காலும் திரைத்துறையில் நீடித்த ஆயுளைப் பெற்றதில்லை. எனில், நீடித்து நிலைப்பவர்கள் எல்லோரும் பிழை பொறுப்பவர்கள் என்றும் அர்த்தமில்லை. தன்னளவில் வைத்திருக்கும் குறைந்த பட்ச சமரங்களைச் செய்து கொள்கிறவர்கள் எனலாம்.
இசை மாறிவிட்டது, திரைக் கதையின் முறைமை மாறிவிட்டது. நடிப்புக் கலைஞர்களின் திறனும் வரையறையும் மாறிவிட்டது. ஆனாலும், பாடல்களின் வடிவம் மாறவில்லை. வடிவம் என்று நான் சொல்வது, ஒரு பல்லவி இரண்டு சரணம் என்கிற வடிவம். இந்த வடிவம் பன்னெடுங்காலமாக இருந்து வருவது. தனிக் கவிதைகளை இசையமைக்கும் போது கூட இந்த வடிவத்தை இசையமைப்பாளரும் இயக்குநரும் மாற்ற முயற்சிப்பதில்லை.
மூன்று அல்லது நான்கு முறை பல்லவி எதற்காக வரவேண்டும். ஒரே முறையோடு சரணத்திற்குப் போனால் என்ன? என்ற யோசனையும் வரவில்லை. காரணம் மக்களுக்கு பழக்கப்பட்ட முறையை மாற்றுவ தில்லை. நமக்குள்ள தயக்கம், பழக்கப்பட்ட என்பதை விட பழக்கப்படுத்தின முறையை என்பதே சரி.
பாரதிதாசன் பாடல் முயற்சிகள் மட்டுமல்ல, வசனத்திலும் அவருக்கு நேர்ந்த அனுபவம் சங்கடத் துக்குரியதுதான். தாங்களாக எழுதப்பட்ட வசனத்தில் சிலவற்றை மாற்றியும் நீக்கியும் பாவேந்தரின் அனுமதி யில்லாமல் இயக்குநர் படப்பிடிப்பு நடத்தியதை பொறுக்க முடியாமல், மீதுள்ள காகிதங்களை வீசி யெறிந்துவிட்டு வந்திருக்கிறார். அதன் பின் வெகுகாலம் சினிமா வாடையே இல்லாது இருந்திருக்கிறார்.
நாற்பதுகளின் பின்பகுதி. திராவிட இயக்கங்கள் தமிழ் மண்ணில் வீறுகொண்டு தளைத்த காலம். துறைதோறும் திராவிடக்காரர்கள் கைப்பற்றும் நிலையில் மறுபடியும் பாவேந்தரின் பாடல்கள் வெளிவரத் துவங்கின. எனினும், அவை ஏற்கனவே அவரது தொகுப்புகளில் இருந்து எடுத்தாளப்பட்டன.
குறிப்பாகச் சொல்லவேண்டுமானால் 'பணம்'(1952) திரைப்படத்திலுள்ள 'பசியென்று வந்தால் ஒரு படி சோறு' எனும் பாடல். அத்திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதியவர் மு.கருணாநிதி. பாடல்கள் கண்ண தாசன். திராவிடக் கருத்துக்களின் பிரச்சாரப்படம் என்று சொல்லுமளவிற்குத் தணிக்கைக் குழுவின் கண்களிலிருந்து தப்பிய படம். திராவிட இயக்கங்களின் தலைமை கவியாக அறியப்பட்ட பாவேந்தர், இயக்கச் சார்புடைய திரைத்துறையினர் இடம்பெறும் படத்தி லெல்லாம் பிறகு காணப்படுகிறார். கருத்தியலுக்கு முதன்மை என்கிற அவரது சிந்தனைச் சிதைவுறாமல், வேண்டுமானால் அவரே சில வரிகளை நீக்கியும் மாற்றவும் ஒப்புதல் தந்திருக்கிறார்.
இன்னொரு சம்பவத்தை நினைவு கொள்ள வேண்டும். பராசக்தி திரைப்படத்தில் வருகிற 'வாழ்க வாழ்க வாழ்கவே' பாடல். பராசக்தியை விட்டு விட்டு திராவிட இயக்கங்களின் திரை முயற்சியை எழுத முடியாது என்றான திரைப்படம். அந்தப் படத்தில் தலைப்புப் பாடலாக பாவேந்தரின் வரிகளைப் பயன்படுத்த படக்குழுவினர் திட்டமிடு கிறார்கள். பாவேந்தரிடம் அனுமதி பெறும் பொறுப்பு மு.கருணாநிதி அவர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் கள். வசனங்களின் இடையிடையே திராவிட எழுத் தாளர்களின் நூல்கள் மேற்கோள்கள் கையாளப்பட்டி ருப்பது சான்று.
அனுமதி பெற கருணாநிதி அவர்கள் பாவேந்தரை சந்திக்கிறார். மகிழ்ச்சியோடு ஒப்புக்கொள்கிறார் பாவேந்தர். என்றாலும் படக்குழுவினருக்கு ஒரு தயக்கம். பயன்படுத்தப் போகிற பாடலுக்கு எவ்வளவு தொகை தரவேண்டும் என்பதை எப்படிக் கேட்பது? தயங்கித் தயங்கி கேட்கையில் தொகை அதிகமாயிருந்தால் என்ன செய்வதென்று தயக்கத்தோடு தொடங்குகையில் 'திராவிட நாடு' பாட்டுப் படத்தில் பயன்படும் என் பாடலுக்கு பணமா? இதன் மூலம் திராவிட மக்களுக்கு என் கருத்துகள் பரவிடப் போகிறது அது போதாதா...' எனறு பெருந்தன்மையோடு பணம் பெற மறுத்திருக்கிறார்.
கட்டுரைத் தொடக்கத்தில் சொன்னது போல, திரைப்படத்தின் அல்லது திரைப்பாடல்களின் ரசனை மட்டம் இயக்குநரைச் சார்ந்தது. எந்தக் கருத்திய லோடு அவர்கள் இயங்குகிறார்களோ அந்தக் கருத்துச் சார்புடையவர்கள் இடம் பெறுவதிலும் மக்களிடத் தில் வெற்றி பெறுவதும் தவிர்க்கமுடியாது.
இன்றைய திரைப்பாடல்களில் இப்படியானதொரு கருத்தியல் நிலவுகிறதா? என்பதை யோசிக்க வேண்டும். எந்தக் கருத்தியலுக்குள்ளும் சிக்காத பொதுத்தன்மையை அவை கைக்கொண்டுள்ளன. முழுநீள அரசியல் படமாக எடுக்கப்பட்டாலும், அதில் வருகிற பாடல்கள் அரசியலைப் பிரதிபலிப்ப னவாக இல்லை. எதிர்கட்சி என்று காட்டப்படுவது வில்லத் தன்மையை பறைசாற்றுவதற்காக என்றே அமைந்துவிடுகிறது. தொன்னூறுகளுக்குப் பின்னுள்ள திரைப்படங்கள் முழுவதுமாக வணிக நோக்கமுடைய வனாக அமைந்துவிட்டதை கவலையோடுப் பதிவு செய்யவேண்டும்.
ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் இவ்விரு படத்தில் தலா ஒரு பாடலை சுட்டலாம். அதிலும் பொதுவான கருத்துக்களே முதன்மைக் கொள்கின்றன. 'விடைகொடு எங்கள் நாடே' என்ற பாடலில் புலம்பெயர்வுச் சோகங்கள் பிரதானப்பட்டாலும் அரசியல் காத்திரங்கள் வந்துவிடாதவாறு அமைந்துள்ளன. சூழலுக்கேற்ப பாடல்கள் என்கிறபோது அச்சூழலே தவிர்க்கப்படும் நிலையில் சிறந்த பாடல்களுக்கான வாசல் அடைபட்டுவிடுகிறது.

'எத்தனை எத்தனை
நீண்ட இரவுகள்
என்றைக்காவது விடியாதா?

எத்தனை எத்தனை
கோடி கனவுகள்
இன்றைக்காவது முடியாதா?'
-என்று 'ஜி' திரைப்படத்தில் என்னால் எழுதப்பட்ட போதும் அந்தக் கருத்துக்களின் சாயல் படத்தில் இல்லாததால் கவனிக்கப்படாமலேயே போய்விட்டது. இதுபோலவே, கார்மேகம் திரைப்படத்தில் 'காசா படியளந்தா' எனும் பாடல்.
திரைப்பாடல்கள் வெறும் கவிதைகளல்ல. அவற்றுக்கு போதிய இசையும் கருத்தும் சூழலும் தேவை.

'சித்திரச் சோலைகளே-உமை நன்கு
திருத்த இப்பாரினிலே - முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொறிந்தனரே
உங்கள் வேரினிலே.'
-இசை, கருத்து, சூழல் தவிர்த்துப் பாடப்படுகிற நடிகரின் செல்வாக்கும் கவனத்தில் கொள்ள வேண்டியதாகிறது. இன்றைக்கு முன்னணி கதாநாயர்கள் இப்படியான கருத்துக்களை முன்மொழிபவர்களாகவோ, வழிமொழிபவர்களாகவோ இல்லாதது அரசியல் இயக்கங்களின் தொய்வு என்றே சொல்ல வேண்டும். மக்களை ஈர்ப்பதற்கான சக்தி இனி அரசியலுக்கு இல்லை எனக் கருதுகிறார்களோ என்னவோ?
ஆட்சியைப் பிடிப்பது; நாற்காலி கனவு காண்பது என்பதுகூட வரப்போகிற தனது திரைப்படத்துக்கான விளம்பர உத்தியாக சிறுத்துவிட்டது. அழகியலைத் தாண்டி கருத்தியலை கைகொள்ள துணியாத கலை இலக்கியம் ஒருபோதும் மக்களுக்கானதல்ல.
வேறு எப்போதையும்விட நவீன கவிதைகளின் சாளரங்கள் தொண்ணூறுகளில் கூடுதலாகவே திறக்கப்பட்டுள்ளன. வானம்பாடி இயக்கத்தின் காட்சிகள் எப்படி நா.காமராசனால் 'நுரை பூவை அள்ளி அலை சிந்த வேண்டும்' என்று எழுதப்பட் டதோ அப்படி தற்கால அடையாளங்கள் திரைப் பாடல்களில் தென்படத் துவங்கியுள்ளன. இது, வெறும் வாக்கிய அழகாக மட்டுமல்லாது தேசிய அடையாளங்களை கொள்ளவேண்டும். தேக அடையாளமல்ல. தேசிய அடையாளம், வாழ்நிலைச் சார்ந்த பதிவுகள். வட்டார இலக்கியத்தின் கவி நிரம்பிய சொல்லாடல்கள். வடிகட்டின தமிழ்க் கவிதைச் சாறுகளைப் பாட்டுக்கோப்பையில் ஊற்ற வேண்டும்.
கவிஞனுக்குரிய படைப்பு மனமும், பாடலாசிரியனுக்குரிய நெகிழ்வு மனமும் கலக்கிற இடத்தில் புதிய ஆக்கங்கள் முகிழ்க்கக்கூடும்.
சமீபத்தில் தக்கலை ஞானமேதை பீர் முகமதப்பா அவர்களின் தேர்வுசெய்யப்பட்ட பாடல்களை இசைத் தொகுப்பாக கீற்று வெளியீட்டகம் வெளியிட்டார்கள். தமிழின் முதல் சூஃபி என்று போற்றப்படுகிற அவருடைய பாடல்களின் தொனி ஏகத்துவத்தைச் சொன்னாலும் இசையின் நெகிழ்வை ஏற்கும் ஓசை மரபைக் கொண்டிருக்கிறது. ஓசை மரபுதான் திரைப்பாடல்களின் உள்ளீடு.அவ்விழாவில் பங்குகொண்டமை மகிழ்வைத் தந்தது.இப்படியான தனிமுயற்சிகள் வரவேற்கப் படவேண்டும்.
'கமிழ்ந்திடும்' என்பதை 'குலுங்கிடும்' எனும்போது அரை மாத்திரை குறைந்து ஒலிப்பதே ஓசை மரபின் அடிப்படை. இந்த ஓசை மரபை தன்னிச்சையாகக் கொண்டிருந்தவர் பட்டுக்கோட்டையார். இரண்டே இரண்டு பாடல்கள் மட்டும்தான் பட்டுக்கோட்டை யார் மெட்டுக்கு எழுதினார் என்பதும் பிற யாவும் எழுதிய பாட்டுக்கு மெட்டமைக்கப்பட்டன என்பதும் சொல்லப்பட்டு வருகிற செய்தி, இதில் எந்த அளவு உண்மையோ?
பாவேந்தரின் கருத்தியலோடு சற்றும் விலகாத உடுமலை நாராயண கவியும், அக்காலத்திய அரசியல் நிகழ்வுகளும் பாடல்களில் எங்ஙனம் வெளிப்பட்டன என்பதை வேறொரு கட்டத்தில் விரிவாக பார்க்க வேண்டும்.
ரசனை மட்டம் எப்படி உருவாகிறது? தனி மனிதனின் ரசனை தனிமனிதனால் உருவாக்கப்படுவதல்ல. சமூக விழுமியங்களின் சாயல்களால் அவனறிந்த ரசனை உருவாகிறது. அப்படியானால், இன்றைய ரசனை மக்களுக்கு ஏற்புடையதா? காட்டுக்கத்தலாய் ஒலிக்கிற அந்த ஒலிப்பெட்டியைக் கொஞ்சம் அணைத்தாலென்ன?

0 comments: