நித்தியத்தன்மை

(கம்பதாசன்:தமிழ்த்திரைப் பாடலாசியர்களில் முக்கியமானவர்.தோய்ந்த இலக்கியச்செழுமைக்குச் சொந்தக்காரர்.அவரைப் பற்றி குறும்பட இயக்குநரும் எனது தோழரும் "திரை" பத்திரிகை ஆசிரியருமான லீனாமணிமேகலை தனது திரை இதழுக்காக என்னிடம் கேட்டுப்பெற்ற கட்டுரை)


தான் ரசித்த ஒரு கருத்தையோ படைப்பையோ அதே ருசியோடு இன்னொருவருக்குக் கடத்துவது சாதாரணமல்ல. சொல்லத் தொடங்கியதும் கூடவோ குறைத்தோ நம்மையறியாமல் வார்த்தைகள் பின்னிக்கொள்ளும். சொல்ல நினைத்தது போக சொல்ல வேண்டாதவற்றை பேசிவிடுவோம். எல்லோருக்குமல்ல, ஒரு சிலருக்கு.
கூட்டத்தைப் பார்த்ததும் சிலருக்கு நா தடுமாறும். சிலருக்கு கம்பீரமான தோரணை கூடும். பேச்சு சுவாரஸ்யத்துக்காக இட்டுக்கட்டி இல்லாததையும் பொல்லாததையும் சொல்வோருண்டு. ஆனால், எந்த சந்தர்ப்பத்திலும் தனக்கே உரிய தனித்துவமான அபிப்ராயத்தைத் தெரிவிப்பதில் கெட்டிக்காரர், எழுத்தாளர். தஞ்சை ப்ரகாஷ்.
தஞ்சாவூருக்கு எந்த இலக்கியவாதி வந்தாலும் அவரைச்சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். எப்போதும் அவரைச்சுற்றி இலக்கியக்குழாம் அமர்ந்திருக்கும். இலக்கியக் குழாம் என்பதைவிட சீடர்கள் கூட்டம் எனலாம். அவருக்குச் சமமாக விவாதித்தாலும் கடைசியில் அவரே வெல்வார்.
நீளமான தனது தாடியை நீவிக்கொண்டே அவர் உதிர்க்கும் சொற்களில் கிறுகிறுத்துப் போவோம். சிறந்த கதை சொல்லியாகவும் கடித இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்வதில் முதன்மையானவராகவும் அவர் இருந்தார்.
தினசரி ஒரு புதிய விஷயத்தை அவரிடம் கற்க முடியும். சொல்லுவதற்கு செய்திகள் அவரிடம் நிறைய இருந்தன. தீரத் தீர தகவல்களைச் சேர்த்துக் கொள்வதில் இறுதிவரை ஆர்வமுடையவராகவே தென்பட்டார்.
அவருடைய சொல்லாடலைச் சோதித்து பார்க்கும் குறுக்குபுத்தி எனக்கு அவ்வப்போது வருவதுண்டு. அது, அவரைச் சந்தேகிக்கும் தொனியல்ல. எது குறித்தாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய தனிப்பட்ட வேட்கை.
சோதிப்பதோ சோதிப்பில் நான் தோற்றுவிடுவதோ யாருக்கும் தெரியாது. தொடர்ந்து நான் தோற்றுக் கொண்டே இருந்தேன். என் தோல்விகளில் ஒன்று கம்பதாசனைப் பற்றி அவர் சொன்ன பிரமிப்பு. “அவர் போல வரவே முடியாது, என்ன அழகு தெரியுமா? என்ன குரல் தெரியுமா? கவிஞர்களிலேயே மிடுக்கும் ஆற்றலும் அமைந்த ஒரு கவி என்றால் அது கம்ப தாசன்தான்” என்பார்.
“இந்திப்பட தயாரிப்பாளர்களால் கொண்டாடப்பட்டவர். இந்தி ட்யூன்களுக்கு தமிழ் வார்த்தைகளை அவ்வளவு லாகவமாகப் போடுவார். ஒரு காலத்தில் தமிழ்த்திரை உலகமே அவர் பாடலுக்காக காத்துக்கிடந்தது. வங்கக்கவி ஹரீந்தரநாத் சட்டோபாத்யாயா அவர்களால் மிகவும் புகழப்பட்டவர்” என பிரகாஷ் அவர்கள் விவரிக்கும் பாங்கை முதலில் அசட்டையாக உள்வாங்கிக் கொண்டு பிறிதொரு சந்தர்ப்பத்தில் கம்பதாசன் நூல்கள் மொத்தமும் வாசிக்கும் போதுதான் தெரியவந்தது. அவர் சொன்னவை இம்மியும் குறைவில்லாத உண்மை.
தன்னை ஒரு மாபெரும் கவியாக வரித்துக்கொண்ட யாரையுமே இச்சமூகம் கண்டு கொள்ள மறந்துவிடுகிறது. மறந்துவிடுவது மட்டுமல்ல புறந்தள்ளி அவர்களைப் பற்றிய எந்தத் தரவுகளுமே இல்லாமல் செய்துவிடுகிறது. யாரோ ஒருத்தர் அவர்மீது பாசங் கொண்டு அவர் படைப்புகள் மீது தீராத காதலுற்று சேமிக்கும் தகவல்களைத் தவிர வேறு பதிவுகளே இல்லாமல் போய்விடுகிறது.
சிலோன் விஜேயேந்திரன் ஈழத்தைச் சேர்ந்தவர். கம்பதாசனைப் பற்றி இன்றைக்கு நம் கைகளில் கிடைக்கும் அத்தனைத் தகவலையும் சேமித்து புத்தகமாக்கித் தந்தவர் அவர்தான். தமிழ்த் திரைப்பாடலாசியரியர்கள் பல பேரைப் பற்றி தப்பும் தவறுமாக ஓரிருவர் மட்டுமே எழுதியிருக்கிறார்கள்.
நாடக நடிகராக, பாடகராக, ஆர்மோனிஸ்டாக, அறியப் பட்ட கம்பதாசன் சினிமா நடிகராகவும் ஆனது தனிக்கதை.
1973ல் அவர் இறந்து போகிறார். இறப்புக்கு மூவரே வந்ததாகவும் தோள் கொடுத்து சுமந்து போக நாலு பேர் கூட இல்லை என்பது மாதிரியான புத்தகத் தகவல் அதீத புனைவு போல் தோன்றுகிறது. அதே சமயம், தமிழ்ச்சமூகத்தில் அதற்கு நிறைய சாத்தியமும் இருப்பதாகவே தோன்றுகிறது.
இறுதி காலத்தில் வறுமையும் நோயும் அவரைப் பீடித்துக்கொண்டன. எல்லாம் இழந்த பிறகு இயற்கை அவர்கள் மீதும் அவர்கள் நடத்தை மீதும் சேற்றை வாரிப்பூசுவது இன்று நேற்று வந்ததல்ல, காலங்காலமாகத் தொடருவது.
அரசனைப்போல் வாழ்ந்து கடைசியில் அரிசிக்கே வழியில்லாமல் மாதாமாதம் அரசு கொடுத்த நூறு ரூபாய் உதவித் தொகையை நம்பியிருந்ததாகவும் சொல்கிறார்கள்.
இத்தனைக்கும் அவர் மது பழக்கம் உடையவராக இருந்ததுதான் காரணம் என்று ஒழுக்கச் சீலர்கள் அவர் மீது உமிழ் நீரை வீசுகிறார்கள். மதுபழக்கம் உள்ள படைப்பாளிகள் வேறு யாருமே இருந்ததில்லையா? அவர்களுடைய வரலாறுகளும் இவ்விதமாகத்தான் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளனவா? இல்லவே இல்லை. கம்பதாசன் இருள் கவிந்த பிரதேசத்துக்குள் இருத்தி வைக்கப்பட்டதுக்கு வேறு பல காரணங்களுண்டு. அதில் முக்கியமானது அன்று வேகமாக வளர்ந்து வந்த திராவிட அரசியல் என்கிறார்கள்.தன்னை ஒரு சோஷலிசக் கவிஞராக அடையாளப்படுத்திக் கொள்வதிலும் அதையே தனது வாழ்நாள் கொடையாகவும் கருதியவர் கம்பதாசன். ஒரு பக்கம் காங்கிரஸ் பேரியக்கம், மறுபக்கம் திராவிட இயக்கம் இரண்டுக்கும் இடையில் தனிப்பெரும் சக்தியாக ஆளுமை நிறைந்த கவிஞராக தன்னை உருவாக்கிக் கொண்டவர்.
தனிப்பட்ட வாழ்க்கை சோகங்கள் அவரை அலைக்கழித்திருக்கின்றன. அல்லலும் சொல்லொண்ணா துரோகங்களும் அவரை மேலும் மேலும் சிதைத்திருக்கின்றன. என்றாலும், அவரது கவிதைகளில் ததும்பி வழியும் அழகுணர்வும் கருத்தாழமும் புகழுக்குரியன. பிரியத்துக்குரிய நவீன கவிதைக்காரர்கள் இவருடைய தொகுப்புகளை வாசிப்பது உசிதம். சொற்களின் கம்பீரத்தை அனுபவத்தோடு கலக்கும் மாயவித்தையை இவரிடமிருந்து நிறைய கற்க முடியும்.
நட்சத்திர வண்டினங்கள்
நனவின் கனல் மொய்க்கும்
நமபயத்தின் புதையலினை
ஞானப் பேய் காக்கும்

உட்கசிந்த தாயுள்ளம்
ஒளி ஊசலாடும்
உன்மத்தம் சிசு மழலை
உட்பொருளைக் கூடும்

உணர்ச்சியதன் கருவினிலே
உயர் காதல் பாதை

-என அடுக்கிக்கொண்டே போய் முடிப்பில் முத்தாய்ப்பைப் தொடுவார். தனிக்கவிதைகளில் மட்டுமல்லாமல் திரைப்பாடலிலும் சிந்தனைகளை அடுக்க முடியும் என நெய்து காட்டியவர்.
கம்பதாசனை சிறப்பித்துப் பேசும் எல்லோருக்கும் மிகப் பிடித்த வரிகள் அவர்
தாஜ்மஹாலைப் பற்றி எழுதிய சித்திரம்

வட்டநிலா புவி வீழ்ந்ததுவோ
ஷாஜஹான்
வடித்த கண்ணீரின் முதல் துளியோ?

திட்டமிட்டு பூத்த சொப்பனமோ
மும்தாஜ்
ஜீவ தீபந்தான் சிரிக்கின்றதோ?

- தமிழின் மேலார்ந்த இலக்கிய பரிச்சயமில்லாத ஒருவரால் நுட்பமான உவமைகளைத் தீட்டிவிட முடியாது. உள்வாங்கிக் கொண்டதை வேறு வடிவத்தில் வெளிப்படுத்தும் விதத்திலேயே அவர்களை நாம் எளிதாக இனங்கண்டு கொள்ள முடியும். இத்தகைய சிறப்புக்குரியவர் கம்பதாசன்.
பாரதி மீது தீராத பற்றுடையவர். பாரதிதாசனோடு நெருக்கமான நட்புக்கொண்டிருந்தவர். கவிஞராக மிளிர்ந்தவர். சினிமாக் கவிஞராக வலம் வரத் தொடங்கிவிட்டால், அவர்களைப் பற்றிய கிசு கிசுக்களுக்குப் பஞ்சமே இருக்காது போல, அப்படியான கிசு கிசுக்களுக்குத் தீனியாகவும் முதல் தர கலைஞனாகவும் இருந்த கம்பதாசனோடு நட்பு கொண்டிருந்த க.நா.சுவை 'எதற்காக அந்தக் குடிகாரனோடு தினமும் சுற்றுகிறீர்கள்?' என அவரது மனைவி கோபித்து கொண்டதாவும், மது அருந்தி தகராறு செய்ததற்காக சைதாப்பேட்டை காவல் நிலையம் அவரைக் கைது செய்ய, பாரதிதாசன் ஜாமீனில் எடுத்து வந்ததாகவும் கூடுதலான துணுக்குச் செய்திகள் உண்டு.
கம் என்றால் அழகு; பா என்றால் பாட்டு எனவே அழகான பாட்டுக்கு தாசன் என்பதாக தன் பெயருக்கு விளக்கமளித்துக் கொண்ட கம்பதாசன் 1973 மே மாதம் 24ம் தேதி காலமானார்.
1940ல் வெளிவந்த 'வாமன அவதாரம்' தொடங்கி 1961இல் வெளிவந்த 'அக்பர்' திரைப்படம் வரை பாடல்கள் எழுதி வந்த கம்பதாசன் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மேலதிகப் பாண்டியத்தியம் பெற்றவர் என்பது தனிச்சிறப்பு.

கனவு கண்ட காதல்
கதை கண்ணீராச்சே
நிலா வீசும் வானில்
மழை சூழலாச்சே
மழை சூழலாச்சே
- நெளஷாத் இசையமைத்து பி.சுசீலா பாடிய இப்பாடலை ஒரே ஒரு முறையாவது கேட்கத் தவறியவர்கள் இசையின் கெளந்தர்யத்தை இழந்து போவார்கள். சூழலுக்கேற்ப புனையப்படுவதுதான் திரைப்பாடல் என்ற போதும் அதில் தனக்கான முத்திரைகளை, முகவரிகளை பொறித்து விடுவதில் கைதேர்ந்தவர் கம்பதாசன். சோஷலிஸ்டாக அதுவும் தீவிர சோஷலிஸ்டாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட அவரே 'ஆராய்ச்சி மணி'் திரைப்படத்தில்

ஆவதும் அழிவதும்
அவன் செயல், என்றே
ஆறுதல் அடை நெஞ்சே

கோவைக் கனியைப் படைத்தவனே
அதைக்
கொத்திட கிளியையும்
படைத்து விட்டான்

கண்டு கொண்டாயோ
லோகத்தின் விந்தை

கண்மூடி மெளனியாய்
தெளிவாய் சிந்தை

காண்பது யாவும்
சாஸ்வத மன்று

கதிபெறுவாய் நீதி
நிலையில் நின்று
-என்றும் எழுதியிருக்கிறார்.தொடங்கிய காலம் முதல் முடிகிற காலம்வரை முழுமையான கவியாக தன்னை உருவாக்கிக் கொண்டதோடு அதைப் பின்வரும் தலைமுறையும் ஏற்கும் வண்ணம் செம்மையுற பணி செய்த கம்ப தாசன் மது பழக்கத்தால் மரணமுற்றார் என்று உரைப் பது மாபெரும் ஆளுமையை மறைக்க செய்யப் படுகின்ற தந்திரமென்றே தோன்றுகிறது.

கண்ணிளைப் பாறிட
தூக்கமுண்டு அற்ப
கழுதையிளைப் பாறிட
துறையுமுண்டு

பண்ணிளைப் பாறிட
தாளமுண்டு - எங்கள்
பசியிளைப் பாறிட
உண்டோ இடம்?
-படைப்பாளனின் சொந்த வாழ்வை படைப்போடு ஒப்பிட்டு நீக்கலும் சேர்த்தலும் தேவையற்றது. தேவையற்றது என்ற சொற்கள் என்னுடையதல்ல. எழுத்தாளர் தஞ்சை பிரகாஷ் அவ்வப்போது இலக்கிய வட்டத்தில் பிரயோகிப்பது. அது சரியா? தவறா? என்பதை விவாதித்து மறுபடியும் தோற்க எண்ண மில்லை. கம்பதாசனைப் பற்றி அவர் சொன்னதும் பிறர் சொன்னதும் இரண்டாம்பட்சம்தான். ஆனால், கம்பதாசன் படைப்புகள் நித்திய தன்மைக்கு உரியன.

0 comments: