வர்ணனை

எம்டன் மகன் என ஆரம்பித்து, எம்மகனாக வெளிவந்திருக்கும் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "கோலிகுண்டு கண்ணு" பாடலுக்கு ரொம்பவே பாராட்டு தெரிவித்த நண்பர்கள், அதன் வரிகளைப் படிக்க
ஆர்வத்தோடு கேட்டதற்காக முழுபாடலையும் தருகிறேன்.இயக்குநர் திருமுருகன்,மெட்டி ஒலி மூலம் மக்களை வசீகரித்தவர்.சின்னத்திரையில் செய்ய இயலாத அனைத்தையும் வெள்ளித்திரையில் சாதித்திருக்கிறார்.இந்த வெற்றியைத் தக்கவைக்க வாழ்த்துவோம்.பாடலை எழுதியபோது கிடைத்த
சந்தோசம் இரண்டு மடங்காக கூடியதற்கு இப்போதைய உங்கள் அன்பே பிரதானம்.எழுத்து காகிதத்தோடு முடிந்துவிடுவதில்லை,அது வீடுதேடி வந்து விசாரித்து முத்தமிடுகிறது

இயக்குநர் : எம்.திருமுருகன்
இசை : வித்யாசாகர்
குரல் : கார்த்திக்,கல்யாணி

பல்லவி

கோலிகுண்டு கண்ணு
கோவப்பழ உதடு
பாலப்போல பல்லு
படியவெச்ச வகிடு

ஆளத்தின்னும் கன்னம்
அலட்ட்டிக்காத கையி
சோளத்தட்ட காலு
சொக்கவைக்கும் வாயி

தேளு தொட்ட ஒன்ன
தேடி வந்தேன் தாயி

ஏய்,நீ எதுக்குப் பொறந்தியோ
ஏ(ன்) உசுர வாங்குற
ச்சே,நீ எதுக்கு வளந்தியோ
ஏ(ன்) வயச தாங்குற


சரணம் : ஒன்று

சீரான ரோசாவே
சீம்பாலு சீசாவே
எட்டியிருப்பதும்
நெட்டி முறிப்பதும்
என்னக் எனக்கு?

தேனான ராசாவே
தேய்க்காத கூசாவே
தொட்டுப் பறிப்பதும்
கட்டியணைப்பதும்
செல்லக் கிறுக்கு

வேப்பல கூடயிப்ப
தித்திக்குது தேனா
பாப்பா நீ
பாதி கொடுத்தா

கேக்கல சோறுதண்ணி
கேட்டுக்கங்க மாமா
ஓம்பேச்ச
யாரும் எடுத்தா

அருகம் புல்லுநான்
ஆடாக வேணுமா?

எலவம் பஞ்சுநான்
இடிபாடு தாங்குமா

நீ சாமியா பூதமா
ஒண்ணும் புரியல
ரெண்டும் புரியலயே..

சரணம் : இரண்டு

பத்தாய நெல்போல
நின்னாயே முன்னால
வம்பு வளக்குது
வம்பு வளக்குது
அந்தச் சிரிப்பு

வெள்ளாவி கண்ணால
சுட்டாயே தன்னால
கொள்ளயடிக்குது
கொள்ளயடிக்குது
கள்ள நெருப்பு

கண்ணுல கொட்டிக்கிட்ட
சீயக்காயப் போல
அய்யோ நீ
உறுத்துறியே

தண்ணில சிந்திவிட்ட
சீமயெண்ணப் போல
என்னநீ
ஒதுக்குறீயே

கேணி சகடையா
எதுக்கென்ன உருட்டுற

மாதக் கடைசியா
ஏ(ன்)யென்ன வெரட்டுற

நீ வறுமையா? வசதியா?
அங்க குறையுது
இங்க நெறையுது ஏன்?


5 comments:

said...

பாட்டு நேத்து கேட்டேன். நல்லா வந்திருந்துச்சு. படம் ரெம்ப நல்லாயிருந்தது. வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

said...

அட! நீங்கதான் சினிமாப் பாட்டுக்கள் எழுதற யுகபாரதிங்களா?

நல்லா இருக்கீங்களா?

இன்னும் நீங்க குறிப்பிட்ட படத்தைப் பார்க்கலை. பாட்டும் கேக்கலை.
படம் கிடைச்ச பிறகு பார்த்துட்டுச் சொல்றேன்.

பிரபலங்கள் வலைஞர்களாவும் ஆகி இருக்கறது
ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நல்லா இருங்க.

என்றும் அன்புடன்,
வலை உலக 'அக்கா'

said...

கவிஞரே,

நல்ல உருவக பாடல்...

திறமையான இளம் பாடலாசிரியர் நீங்கள் என்பதில் மகிழ்வு!

திரையுலகை கனவுலக காதல் சங்கிலியிலிருந்து நிஜ உலகிற்கு கொஞ்சம் கூட்டி வாருங்களேன்! இது அன்பான வேண்டுகோள்!

அன்புடன்
திரு

said...

பாட்டு நல்லா இருந்திச்சு.

said...

பாடலைக் கேட்டவுடன் மிகவும் ரசிக்க வைத்து, பாடலாசிரியரை வினவ வைத்த பாட்டு. நன்றி.